1695. குழைக்கின்ற கவரி இன்றிக், கொற்ற வெண் குடையும் இன்றி, இழைக்கின்ற விதி முன் செல்லத், தருமம் பின் இரங்கி ஏக, ‘மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் ‘என்று என்று, தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன், ஒரு தமியன் சென்றான். 1 கோசலையின் வினா 1696. ‘புனைந்திலன் மௌலி! குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன்! என்கொல்? ‘என்னும் ஐயத்தாள், நளின பாதம், வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி, ‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு? ‘என்றாள். 2 பரதன் முடிசூடுகின்றான் என இராமன் கூறல் 1697. மங்கை அம்மொழி கூறலும் மானவன் செங்கை கூப்பி “நின் காதல் திரு மகன் பங்கம் இல் குணத்து எம்பி பரதனே துங்க மா முடி சூடுகின்றான்“ என்றான். 3 கோசலை முடிசூடப் பரதன் தக்கவனே எனல் 1698. “முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்; குறைவு இலன்;“ எனக் கூறினள், நால்வர்க்கும் மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள். 4 கோசலை பரதனோடு ஒன்றி வாழ்க எனல் 1699. என்று பின்னரும் “மன்னவன் ஏவியது அன்று எனாமை மகனே! உனக்கு அறன்; நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழி பல“ என்றாள். 5 இராமன் மன்னன் ஏவிய மற்றோர் பணியுண்டு எனல் 1700. தாய் த்த சொல் கேட்டுத் தழைக்கின்ற தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான் “நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு ஏயது உண்டு ஒர் பணி“ என்று இயம்பினான். 6 இராமன் தந்தை பணி இதுவெனல் 1701. ‘ஈண்டு த்த பணி என்னை? ‘என்றவட்கு “ஆண்டு ஒர் ஏழினொடு ஏழ் அகன் கான் இடை மாண்ட மாதவரோடு உடன் வைகிப் பின் மீண்டு நீ வரல் வேண்டும் என்றான்“ என்றான். 7 கான்புகல் கேட்ட கோசலைநிலை ((1702-1707)) 1702. ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல் குழை தூங்கு தன் செவியில் தொடரா முனம் ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ. 8 1703. “வஞ்சமோ மகனே! உனை ‘மா நிலம் தஞ்சமாக நீ தாங்கு ‘என்ற வாசகம்? நஞ்சமோ? இனி நான் உயிர் வாழ்வெனோ? அஞ்சும் அஞ்சும்! என் ஆருயிர் அஞ்சுமால்!“ 9 1704. கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன் வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப் பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை வெய்து உயிர்க்கும்; விழுங்கும்; புழுங்குமால். 10 1705. ‘நன்று மன்னன் கருணை! ‘எனா நகும்; நின்ற மைந்தனை நோக்கி ‘நெடும் சுரத்து என்று போவது? ‘என எழும்; இன் உயிர் பொன்றும்போது உற்றது உற்றது போலுமே. 11 1706. ‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே. 12 1707. ‘அறம் எனக்கு இலையோ? ‘எனும்; ‘ஆவி நைந்து இற அடுத்தது என்? தயெ்வதங்காள்! ‘எனும்; பிற ப்பது என்? கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். 13 இராமன் கோசலையைத் தேற்றுதல் (1708-1711) 1708. இத் திறத்தின் இடர் உறுவாள் தனைக் கை தலத்தின் எடுத்து ‘அருங் கற்பினோய்! பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல்; மெய்த்திறத்து நம் வேந்தனை நீ ‘என்றான். 14 1709. பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன சொல் பொறுத்தற்கு உரியன சொல்லினான்; கற்பு உறுத்திய கற்பு உடையாள் தனை வற்புறுத்தி மனம் கொளத் தேற்றுவான். 15 1710. ‘சிறந்த தம்பி திரு உற எந்தையை மறந்தும் பொய் இலன் ஆக்கி வனத்து இடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின் பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 16 1711. ‘விண்ணும், மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் இறந்து ஏகினும், அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்! ‘என்றான். 17 கோசலையும் வனத்திற்கு வருவேன் எனல் 1712. “ஆகின் ஐய! ‘அரசன்தன் ஆணை ஆல் ஏகல் ‘என்பது யானும் க்கலேன்; சாகலா உயிர் தாங்க வல்லேனையும் போகின் நின்னொடும் கொண்டனை போகு“ என்றாள். 18 இராமன் மறுமொழி (1713-1719) 1713. ‘என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் துன்னு கானம் தொடரத் துணிவதோ? அன்னையே! அறம் பார்க்கிலையாம் ‘என்றான். 19 1714. ‘வரி வில் எம்பி இம்மண் அரசு ஆய் அவற்கு உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன் திருவின் நீங்கித் தவம் செயும் நாள் உடன் அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே. 20 1715. ‘சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும் ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே? எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு அவை பத்தும் நாலும் பகல் அலவோ? ‘என்றான். 21 1716. ‘முன்னர்க் கோசிகன் என்னும் முனிவரன் தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் பின்னர் எய்திய பேறும் பிழைத்வோ? இன்னம் நன்று அவர்க்கு ஏயின செய்தலே. 22 1717. ‘மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் போதம் முற்றிப் பொரு அரு விஞ்சைகள் ஏதம் அற்றன தாங்கி இமையவர் காதல் பெற்று இந்நகர் வரக் காண்யால். 23 1718. ‘மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார்ச் சகரர் தாதை பணி தலைநின்று தம் புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய நிகர் இல் மாப் புகழ் நின்றது அன்றோ? ‘எனா. 24 1719. ‘மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான் தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே ஊன் அறக் குறைத்தான்; உரவோன் அருள் யான் மறுப்பது என்று எண்ணுவதோ? ‘என்றான். 25 கோசலை சிந்தனை 1720. இத்திறத்த எனைப் பல வாசகம் உய்த்து த்த மகன் உட்கொளா ‘எத்திறத்தும் இறக்கும் இந்நாடு ‘எனா மெய்த் திறத்து விளங்கு இழை உன்னுவாள். 26 கோசலை தயரதனிடம் போதல் 1721. ‘அவனி காவல் பரதனது ஆகுக; இவன் இஞ் ஞாலம் இறந்து இருங்கான் இடை தவன் நிலாவகை காப்பென் தகைவு இலாப் புவனி நாதன் தொழுது ‘என்று போயினாள். 27 இராமன் சுமித்திரை மாளிகைக்குப் போதல் 1722. போகின்றாளைத் தொழுது புரவலன் ‘ஆக; மற்றிவள் தன்னையும் ஆற்றி இச் சோகம் தீர்ப்பவள் ‘என்று சுமித்திரை மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். 28 தயரதனைக் கண்ட கோசலையின் நிலை 1723. நடந்த கோசலை கேகயநாட்டு இறை மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன் கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் உடைந்த போழ்தின் உடல் விழுந்தனெ்னவே. 29 கோசலை அரற்றல் (1724-1727) 1724. ‘பிறியார் பிரிவு ஏது? ‘என்னும்; ‘பெரியோய்! தகவோ? ‘என்னும்; ‘நெறியோ? அடியேம் நிலை நீ நினையா நினைவு ஏது? ‘என்னும்; ‘வறியோர் தனமே! ‘என்னும்; ‘தமியேன் வலியே! ‘என்னும்; ‘அறிவோ? வினையோ? ‘என்னும்; ‘அரசே! அரசே! ‘என்னும். 30 1725. ‘இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி உருளத் தனி உய்த்து, ஒரு கோல் நடவிக், கடைகாண் உலகம் பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ? அருளக் கருதிற்று இதுவோ! அரசர்க்கு அரசே! ‘என்னும். 31 1726. ‘திரையார் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே! நிரையார் கலையின் கடலே! நெறியார் மறையின் நிலையே! கரையா அயர்வேன் எனை, நீ, கருணை ஆலயனே! என்? என்று யா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்! ‘என்னும். 32 1727. ‘மின் நின்று அனைய மேனி வெறிது ஆய் விட நின்றது போல், உன்னும் தகைமைக்கு அடையா உறுநோய் உறுகின்று உணரான்; என்? என்று யான்; என்னே! இதுதான் யாது? என்று அறியேன்; மன்னன் தகைமை காண வாராய், மகனே! ‘என்னும். 33 வசிட்டன் வருகை 1728. இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம், ‘ஒவ்வாது! ஒவ்வாது! ‘என்னா, ஒளி வாள் நிருபர், ‘முனிவ! அவ்வாறு அறிவாய் ‘என்ன, வந்தான் முனிவன்; அவனும், வெவ்வாள் அரசன் நிலை கண்டு, ‘என்னாம் விளைவு? ‘என்று உன்னா. 34 வசிட்டன் நினைவு 1729. ‘இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்; மறந்தான் உணர்வு ‘என்று உன்னா, வன் கேகயர் கோன் மங்கை, துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே; பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ? ‘ 35 கைகேயி கூறல் 1730. என்னா உன்னா, முனிவன், இடரால் அழுவாள் துயரம் சொன்னாள் ஆகாள், என, முன் தொழு கேகயர்கோன் மகளை, ‘அன்னாய்! யாய், அரசன் அயர்வான் நிலை என்? ‘என்னத், தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தரெியச் சொன்னாள். 36 வசிட்டன் மன்னனைத் தேற்றுதல் 1731. சொற்றாள் சொல்லா முன்னம், சுடர் வாள் அரசற்கு அரசைப் பொன் தாமரை போல் கையால் பொடி சூழ் படிநின்று எழுவிக், “கற்றாய்! அயரேல்; அவளே தரும் நின் காதற்கு அரசை; எற்றே செயல்? இன்று ஒழி நீ‘‘ என்று என்று, இரவாநின்றான். 37 தயரதன் மயக்கம் தெளிதல் 1732. சீதப் பனி நீர் அளவித் திண் கால் உக்கம் மென் கால் போதத்து அளவே தவழ்வித்து, இன் சொல் புகலாநின்றான்; ஓதக் கடல் நஞ்சு அனையாள் நஞ்சு ஒருவாறு அவியக், காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான். 38 வசிட்டன் வருந்தேல் எனல் 1733. காணா, ‘ஐயா! இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் ஆண் நாயகனே இனிநாடு ஆள்வான்; இடையூறு உளதோ? மாணா யாள் தானே தரும்; மா மழையே அனையான் பூணாது ஒழிவான் எனில் யாம் உளமோ? பொன்றேல் ‘என்றான். 39 தயரதன் வசிட்டனை வேண்டுதல் 1734. என்ற அம் முனிவன் தன்னை நினையா வினையேன் இனி யான் பொன்றும் அளவில், அவனைப் புனை மா மகுடம் புனைவித்து, ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என் யும் குன்றும் பழி பூணாமல் காவாய், கோவே! ‘என்றான். 40 வசிட்டன் கைகேயியை வேண்டுதல் 1735. முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி, ‘இனி, உன் புதல்வற்கு அரசும், ஏனையோர்க்கு இன் உயிரும், மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி, வசை தீர் புனிதம் மருவும் புகழே புனையாய் பொன்னே! ‘என்றான். 41 கைகேயியின் மறுமொழி 1736. மொய் மாண் வினை வேர் அற வென்று ஒழிவான் மொழியா முன்னம், விம்மா அழுவாள், ‘அரசன் மெய்யில் திரிவான் என்னில், இம் மா உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என்சொல் பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் ‘என்றாள். 42 முனிவன் முனிந்து மொழிதல் (1737-1739) 1737. ‘கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும், பழி நின்று உயரும் எனவும், பாவம் உளதாம் எனவும், ஒழிகின்றிலை; அன்றியும் ஒன்று உணர்கின்றிலை; யான் இனிமேல் மொழிகின்றன என்? ‘என்னா முனியும் ‘முறை அன்று ‘என்பான். 43 1738. கண் ஓடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணாதே, புண்ணோடு ஓடும் கனலோ விடமோ என்னப் புகல்வாய்! பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம் மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே ‘என்றான். 44 1739. ‘வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா முன்னம், நீயோ சொன்னாய்; அவனோ நிமிர் கான் இடை வல் நெறியில் போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந் தீயோய்! நின்போல் தீயோர் உளரோ? செயல் என்! ‘என்றான். 45 தயரதன் கைகேயியை நோதல் (1740-1742) 1740. தாவு இல் முனிவன் புகலத், தளராநின்ற மன்னன், நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கிப், ‘பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை ஏவினாயோ? அவனும் ஏகினானோ? ‘என்றான். 46 1741. ‘கண்டேன் நெஞ்சம்; கனிவு ஆய்க் கனி வாய் விடம் நான் நெடுநாள் உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்; பண்டே எரி முன் உன்னைப், பாவீ! தேவி ஆகக் கொண்டேன் அல்லேன், வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன். ‘ 47 1742. ‘விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையைச் சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய், என்னைப் போழ்வாய்; பழிக்கும் நாணாய், மாணாப் பாவி! இனி என் பல? உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்; ‘ என்றான். 48 தயரதன் வசிட்டனிடம் கூறல் 1743. இன்னே பலவும் பகர்வான், இரங்காதாளை நோக்கிச் ‘சொன்னேன்; இன்றே இவள் என் தாரம் அல்லள், துறந்தேன்; மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன், முனிவா! அவன் என் உரிமைக்கு ஆகான் ‘என்றான். 49 கோசலையின் நிலை (1744-1745) 1744. ‘என்னைக் கண்டும் ஏகா வண்ணம் இடையூறு உடையான் உன்னைக் கண்டும் இலனோ? ‘என்றான், உயர் கோசலையை; பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம் தன்னைக் கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள். 50 1745. மாற்றாள் செயல் ஆம் என்றும், கணவன் வரம் ஈந்து உள்ளம் ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள்; அவளும் அவனைத் தேற்றா நின்றாள்; மகனைத் திரிவான் என்றாள்; அரசன் ‘தோற்றான் மெய் ‘என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள். 51 கோசலையின் கூற்று 1746. ‘தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவா வழுவா வகை நின்று எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்! விள்ளா நிலை சேர் அன்பால் மகன்மேல் மெலியின், உலகம் கொள்ளாது அன்றோ? ‘என்றாள், கணவன் குறையக் குறைவாள். 52 கவிக்கூற்று 1747. ‘போவாது ஒழியான் ‘என்னாள்; புதல்வன் அகலக் கணவன் சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள், ‘காவாய் ‘என்றாள் மகனைக், கணவன் புகழுக்கு அழிவாள்; ஆ! ஆ! உயர் கோசலையாம் அன்னம் என் உற்றனளே! 53 தயரதன் புலம்பல் (1748-1759) 1748. உணர்வான் அனையாள் யால், ‘உயர்ந்தான் சால் குமரன் புணரான் நிலமே வனமே போவானே ஆம் ‘என்னா; இணர் ஆர்தரு தார் அரசன் இடரால் அயர்வான், ‘வினையேன் துணைவா! துணைவா! ‘என்றான்; ‘தோன்றால்! தோன்றாய் ‘என்றான். 54 1749. ‘கண்ணும் நீராய் உயிரும் ஒழுகக் கழியாநின்றேன், எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன், நின்மேல் சொரிய மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் ‘என்றான். 55 1750. ‘படை மாண் அரசைப் பல கால் பகுவாய் மழுவால் எறிவான், மிடை மா வலிதான், அனையான் வில்லால் அடுமா வல்லாய்! “உடை மா மகுடம் புனை “ என்று யா, உடனே கொடியேன், ‘சடை மா மகுடம் புனையத் தந்தேன், அந்தோ! ‘என்றான். 56 1751. ‘கறுத்தாய் உருவம்! மனமும் கண்ணும் கையும் செய்ய பொறுத்தாய்! பொறையே! இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில் இறுத்தாய்! தமியேன் என்னாது என்னை இம் மூப்பு இடையே வெறுத்தாய்; இனி நான், வாழ்நாள் வேண்டேன், வேண்டேன் ‘என்றான். 57 1752. ‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே! மின்னின் மின்னும் வரி வில் குமரா! மெய்யின் மெய்யே! என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்; உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் ‘என்றான். 58 1753. நெகுதற்கு ஒத்த நெஞ்சும், நேயத்தாலே ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன், உன்போல் அல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப் புகுதக் கண்ட கண்ணால் போகக் காணேன் ‘என்றான். 59 1754. “எற்றே பகர்வேன் இனி யான்? என்னே! உன்னில் பிரிய வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும், பொன் தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே! உன்னைப் பெற்றேன் அருமை அறிவேன்; பிழையேன், பிழையேன்;“ என்றான். 60 1755. ‘அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மாநிலமும், அரசும், கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும், கள்ளக் கைகேசிக்கே உதவிப், புகழ் கைக் கொண்ட வள்ளல்தனம், என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்! ‘என்றான். 61 1756. ‘ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து, உயர் வான் இடை, நாகரினும், பொலியாநின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே! வலி யார் உடையார்? ‘என்றான் மழு வாள் உடையான் வரவும் சலியா நிலையாய் என்றால், ‘தவிர்வார் உளரோ? ‘என்றான். 62 1757. ‘கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய மாட்டேன் ஆகில் அன்றோ, வன் கண் என் கண்? மைந்தா! காட்டே உறைவாய் நீ, இக் கைகேசியையும் கண்டு இந் நாட்டே உறைவேன் என்றால், நன்று என் தன்மை! ‘என்றான். 63 1758. ‘மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதில் பெற்ற செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும் உய்யார்! உய்யார்! கெடுவேன்! உன்னைப் பிரியின் வினையேன் ‘ ஐயா! கைகேசியை நேர் ஆகேனோ நான்? ‘என்றான். 64 1759. ‘பூண் ஆர் அணியும், முடியும், பொன் ஆசனமும், குடையும், சேண் ஆர் மார்பும், திருவும், தரெியக் காணக் கடவேன், மாணா மர வற்கலையும், மானின் தோலும், அவை நான் காணாது ஒழிந்தேன் என்றால் நன்று என் கருமம் ‘என்றான். 65 வசிட்டன் மொழிதல் 1760. ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா தந்து, ‘அரசன், உயிரும் சென்றான் இன்றோடு ‘என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான்; மென்தோல் மார்பின் முனிவன், ‘வேந்தே! அயரேல்; அவனை இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு ‘என்னா. 66 தயரதன் நிலை 1761. முனிவன் சொல்லும் அளவில், ‘முடியுங் கொல்! ‘என்று, அரசன், தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான், ‘இந்தப் புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் ‘என்னா; மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். 67 கோசலை அரற்றல் 1762. ‘மறந்தான் நினைவும் உயிரும் ‘ மன்னன் ‘என்ன மறுகா, ‘இறந்தான் கொல்லோ அரசன்? ‘ என்னா, இடர் உற்று அழிவாள் ‘துறந்தான் மகன் முன் எனையும், துறந்தாய் நீயும், துணைவா! அறந்தான் இதுவோ ஐயா! அரசர்க்கு அரசே! ‘என்றாள். 68 1763. ‘மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே! உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின், வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவன் உடன் நம் ஐயன் வரினும் வருமால்; அயரேல், அரசே! ‘என்றாள். 69 தயரதன் மொழிதல் ((1764-1765)) 1764. என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகமும் தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை, ஒன்றும் தரெியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள, ‘வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே? ‘என்றான். 70 1765. ‘வல் மாயக் கைகேசி, வாக்கால், என்தன் உயிரை முன் மாய்விப்பத் துணிந்தாள்; என்றும், கூனி மொழியால் தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு உன்னி என் மா மகனைக் கான் ஏகு என்றாள் என்றாள்; ‘ என்றான். 71 சாப வரலாறு கூறத் தொடங்குதல் 1766. ‘பொன் ஆர் வலயத் தோளான் கானோ புகுதல் தவிரான்; என் ஆருயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை! கேள்; முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது ‘என்று அந்நாள் உற்றது எல்லாம், அவளுக்கு, அரசன் அறைவான். 72 சாப வரலாறு ((1767-1782)) 1767. ‘வெய்ய கானத்து இடையே, வேட்டை வேட்கை மிகவே ஐய, சென்று, கரியோடு அரிகள் துருவித் திரிவேன்; கையிற் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73 1768. ‘ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்று இலவாய் நயனம் தரு மா மகவே துணையாய்த் தவமே புரி போழ்தினின் வாய் அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் பொரு மா கணை விட்டிடலும் புவிமீது அலறிப் புரள. ‘ 74 1769. ‘புக்குப் பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல் கைக்கண் கணை சென்றது அலால், கண்ணில் தரெியக் காணேன்; அக் கைக் கரியின் குரலே அன்று, ஈது என்ன வெருவா, மக்கள் குரல் என்று அயர்வேன், மனம் நொந்து அவண் வந்தனெனால். 75 1770. “கையும், கடனும், நெகிழக், கணையோடு உருள்வோர் காணா, வெய்ய தனுவும், மனனும், வெறிது ஏகிடவே, வீழா, ‘ஐயன்! நீதான் யாவன்? அந்தோ! அருள்க ‘என்று அயரப் பொய் ஒன்று அறியா மைந்தன் ‘கேள் நீ ‘என்னப் புகல்வான். “ 76 1771. “‘இரு கண்களும் இன்று யாய்க்கும் எந்தைக்கும்; இங்கு அவர்கள் பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன், பழுது ஆயினதால்; இரு குன்று அனைய புயத்தாய்! இபம் என்று உணராது எய்தாய்; உருகும் துயரம் தவிர் நீ; ஊழியின் செயல் ஈது என்றே.‘‘ 77 1772. “‘உண் நீர்வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ தண்ணீர் கொடுபோய் அளித்து, என் சாவும் த்து, “உம் புதல்வன் விண் மீது அடைவான் தொழுதான்; எனவும் அவர்பால் விளம்பு ‘என்று எண் நீர்மையினான், விண்ணோர் எதிர் கொண்டிட, ஏகினனால்.‘‘ 78 1773. “மைந்தன் வரவே நோக்கும் வள மாதவன் பால், மகவோடு அம் தண் புனல் கொண்டு அணுக, ‘ஐயா! இதுபோது அளவாய் வந்து இங்கு அணுகாய்; என்னோ வந்தது? என்றே நொந்தேம்; சந்தம் கமழும் தோளாய்! தழுவிக் கொள வா ‘எனவே.‘‘ 79 1774. ‘ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்திநகரத்து உள்ளேன்; மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன் இருள் வாய்; பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் கை ஆர் கணை சென்றது அலால், கண்ணில் தரெியக் காணேன். ‘ 80 1775. “வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே ஓட்டந்து எதிரா, ‘நீ யார்? ‘என, உற்ற எலாம் யா வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா; வானோர் ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண் இடையே.‘‘ 81 1776. “‘அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா! கறுத்தே அருளாய்; யானோ கண்ணில் கண்டேன் அல்லேன், மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்; பொறுத்தே அருள்வாய் ‘என்னா இருதாள் சென்னி புனைந்தேன்.‘‘ 82 1777. “வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; ‘விழி போயிற்று இன்று ‘என்றார்; ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; ‘ஐயா! ஐயா! ‘என்றார்; ‘போழ்ந்தாய் நெஞ்சை ‘என்றார்; ‘பொன் நாடு அதனில் போய் நீ வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம் இனியே!‘‘ 83 1778. என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி, ‘யானே இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன்; ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்! ‘என்றிடலும் ‘வன் திண் சிலையாய்! கேண்மோ! ‘ எனவே, ஒருசொல் வகுத்தான். 84 1779. “‘கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று ப்பார்? விண்ணின் தலை சேருதும் யாம்; எம்போல் விடலை பிரியப் பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய் படர்வான்! ‘என்னா‘‘ 85 1780. “‘தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது நின் சரணம் காவாய் ‘என்றாய்; அதனால், கடிய சாபம் கருதேம்; ‘ஏவா மகவைப் பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ போவாய் அகல்வான் ‘என்னாப் பொன் நாடு இடை போயினரால்.‘‘ 86 1781. ‘சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலனாய், இன் சொல் மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்; அந்த முனி சொற்றமையும், அண்ணல் வனம் ஏகுதலும், என்றன் உயிர் வீகுதலும், இறையும் தவறா ‘என்றான். 87 1782. இம் மா மொழி தந்து, அரசன் இடர் உற்றிடு போழ்தினில் அச் செம் மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளால்; மெய்ம் மா நெறியும், விதியின் விளைவும், தளர்வின்று உணரும் அம் மாதவனும், விரைவோடு அவலம் தரு நெஞ்சினன் ஆய். 88 வசிட்டன் அரசவைக்குப் போதல் 1783. செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் புரைசை மத களிற்றான் பொன் கோயில் முன்னர், முரைசம் முழங்க, முடி சூட்ட, மொய்த்து ஆண்டு அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். 89 முனிவனை மன்னர் வினவல் 1784. வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர், ‘எந்தை புகுதற்கு இடையூறு உண்டாயதோ? அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான் என் கொல்? சிந்தை தெளிந்தோய்! தெளிவி ‘ எமக்கு என்று த்தார். 90 வசிட்டன் சொல்லல் (1785-1786) 1785. ‘வேந்தன் பணியினால், கைகேசி மெய்ப் புதல்வன் பாந்தள் மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்; ஏந்து தடம் தோள் இராமன், திருமடந்தை காந்தன், ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான். ‘ 91 1786. “கொண்டாள் வரம் இரண்டு கேகயர்கோன் கொம்பு; அவட்குத் தண்டாத செங்கோல் தயரதனும் தான் அளித்தான்; ஒண் தார் முகிலை ‘வனம் போகு ‘ என்று ஒருப்படுத்தாள்; எண்தானும் வேறு இல்லை; ஈது அடுத்தவாறு‘‘ என்றான். 92 வசிட்டன்சொல் கேட்ட மக்கள் நிலை (1787-1805) 1787. வார் ஆர் முலையாரும், மற்று உள்ள மாந்தர்களும், ஆராத காதல் அரசர்களும், அந்தணரும், பேராத வாய்மைப் பெரியோன் செவியில் சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார். 93 1788. புண் உற்ற தீயில் புகை உற்று உயிர் பதைப்ப, மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம்; கண் உற்ற வாரி கடல் உற்றது; அந்நிலையே விண் உற்றது, எம்மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. 94 1789. மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தித், தம் கோதை புடை பெயரக், கூற்று அனைய கண் சிவப்பப், பாத மலர் சிவப்பத், தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் ஊதை எறிய ஒசி பூங்கொடி ஒப்பார். 95 1790. ‘ஆ ஆ! அரசன் அருள் இலனே ஆம் ‘என்பார்; ‘காவா அறத்தை இனிக் கைவிடுவேம் யாம் ‘என்பார்; தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார். மாவாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார். 96 1791. கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல? ‘வள்ளல் வனம் புகுவான் ‘என்று த்த மாற்றத்தால். 97 1792. சேதாம்பல் போது அனைய செங்கனி வாய் வெண் தளவப் போது ஆம் பல் தோன்றப், புணர் முலைமேல், பூந்தரள மா தாம்பு அற்று என்ன மழைக் கண்ணீர் ஆலி உக, நாதாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். 98 1793. ஆவும் அழுதன; கன்று அழுத; அன்று அலர்ந்த பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர் மாவும் அழுதன; அம் மன்னவனை மானவே. 99 1794. ஞானீயும் உய்கலான் என்னாதே, நாயகனைக் ‘கான் ஈயும் ‘என்று த்த கைகேசியும், கொடிய கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ? மேனீயும் இன்றி, வெறு நீரே ஆயினார். 100 1795. தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்? தேர் ஓட நீறு ஆகிச், சுண்ணம் நிறைந்த தரெு எல்லாம், ஆறு ஆகி ஓடின கண்ணீர்; அரு நெஞ்சம் கூறு ஆகி ஓடாத இத்தனையே குற்றமே. 101 1796. ‘மண் செய்த பாவம் உளது ‘ என்பார்; ‘மாமலர் மேல் பெண் செய்த பாவம் அதனில் பெரிது ‘என்பார்; ‘புண் செய்த நெஞ்சை, விதி ‘என்பார்; ‘பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலில் பெரிது ‘என்பார். 102 1797. ‘ஆளான் பரதன் அரசு ‘என்பார்; ‘ஐயன் இனி மீளான் நமக்கு விதி கொடிதே காண்! ‘என்பார்; ‘கோள் ஆகி வந்தவா கொற்ற முடி தான், ‘ என்பார்; ‘மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்? ‘என்பார். 103 1798. ‘ஆதி அரசன், அருங் கேகயன் மகள் மேல் காதல் முதிரக், கருத்து அழிந்தான் ஆம் ‘என்பார்; ‘சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம் போதும்; அது அன்றேல் புகுதும் எரி ‘என்பார். 104 1799. கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார்; ‘உய்யாள் பொன் கோசலை ‘என்று ஓதுவார், வெய்து உயிர்ப்பார்; ‘ஐயா! இளங்கோவே! ஆற்றுதியோ நீ? ‘என்பார் : நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அந் நீள் நகரார். 105 1800. ‘தள் ஊறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான் எள் ஊறிய கருமம் நேர்ந்தாள் இவள் ‘என்பார்; ‘கள் ஊறு செவ்வாய்க் கணிகைகாண் கைகேசி, உள் ஊறு காதல் இலள் போல்; ‘என்று உள் அழிந்தார். 106 1801. ‘நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ? அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக் கொன்று களையக் குறித்த பொருள் அதுவோ? நன்று! வரம் கொடுத்த நாயகற்கு நன்று ‘என்பார். 107 1802. ‘பெற்று உடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம் முற்று உடைய கோவைப் பிரியாது, மொய்த்து ஈண்டி உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில், புற்று உடைய காடு எல்லாம் நாடு ஆகிப் போம் ‘என்பார். 108 1803. ‘என்னே நிருபன் இயற்கை இருந்தவா! தன் நேர் இலாத தலை மகற்குத் தாரணியை முன்னே கொடுத்து முறை திறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்? ‘என்பார். 109 1804. ‘கோதை வரி வில் குமரற் கொடுத்த நில மாதை ஒருவர் புணர்வராம்? வஞ்சித்த பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே சீதை பிரியினும் தீராத் திரு? ‘என்பார். 110 1805. உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய, நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார், ‘செந் தாமரைத் தடம் கண் செவ்வி அருள் நோக்கம், அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ! ‘என்பார். 111 இலக்குவன் சீற்றநிலை (1806-1814) 1806. கேட்டான் இளையோன்; ‘கிளர் ஞாலம் வரத்தினாலே மீட்டாள்; அளித்தாள் வனம் தம்முனை; வெம்மை முற்றித் தீட்டாத வேல் கண் சிறு தாய் ‘என, யாவராலும் மூட்டாத காலக் கடைத்தீ என மூண்டு எழுந்தான். 112 1807. கண்ணில் கடைத் தீ உக, நெற்றியில் கற்றை நாற, விண்ணில் சுடரும் சுடர் வீய, மெய் நீர் விரிப்ப, உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 113 1808. ‘சிங்கக் குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளால்! நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது! நன்று இது! ‘என்னாக் கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். 114 1809. சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து, வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கிப், பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என ஓங்கிய தோள் ஒடு மார்பு போர்க்க. 115 1810. அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப் பொடியில் தடவும் சிறு நாண் பெரும் பூசல் ஓசை இடியில் தொடரக், கடல் ஏழும் மடுத்து, இஞ் ஞாலம் முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க. 116 1811. வானும் நிலனும் முதல் ஈறு இல் வரம்பு இல் பூதம் மேல் நின்று கீழ்காறும் விரிந்தன வீழ்வ போலத், தானும், தன் தம்முனும் அல்லது, மும்மை ஞாலத்து ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க. 117 1812. புவிப் பாவை பரம் கெடப், போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும் அவித்து அவர் ஆக்கையை அண்டம் முற்றக் குவிப்பானும், எனக்கு ஒரு கோவினைக் கொற்ற மௌலி கவிப்பானும், நின்றேன்; இது காக்குநர் காமின்! ‘என்றான். 118 1813. ‘விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர் மற்றும் எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஒர் மூவர் ஆகி, மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர், வந்தபோதும் பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேருகுலத்துள் ‘என்னா. 119 1814. காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி, ஞாலத்தவர் கோமகன், அந் நகரத்து நாப்பண், மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை வேலைத் திரிகின்றது போல், திரிகின்ற வேலை. 120 இராமன் நாணொலி கேட்டல் 1815. வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித், தேற்றத் தெளியாது அயர் சிற்றவை பால் இருந்தான், ஆற்றல் துணைத் தம்பிதன் வில் புயல், அண்ட கோளம் கீற்று உற்று உடையப் படும்நாண் உருமேறு கேட்டான். 121 இராமன் வருகை 1816. வீறு ஆக்கிய பொன் கலன் வில் இட, ஆரம் மின்ன, மாறாத் தனிச் சொல் துளி மாரி வழங்கி வந்தான்; கால் தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும் ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன. 122 இராமன் வினவுதல் 1817. மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற, பொன் ஒத்த மேனிப், புயல் ஒத்த தடக்கையானை, ‘என் அத்த! என், நீ, இறையேனும் முனிவு இலாதாய், சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது? ‘என்றான். 123 இலக்குவன் விடை ((1818-1819)) 1818. ‘மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம் மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல் செய்யக் கருதித், தடை செய்குநர் தேவரேனும், துய்யைச் சுடு வெம் கனலில் சுடுவான் துணிந்தேன். ‘ 124 1819. ‘வலக் கார்முகம் என் கையது ஆக, அவ் வான் உேளாரும் விலக்கார்; அவர் வந்து விலக்கினும், என் கை வாளிக்கு இலக்கா எரிவித்து, உலகு ஏழினொடு ஏழும், மன்னர் குலம் காவலும், இன்று, உனக்கு யான் தரக் கோடி ‘என்றான். 125 இராமன் வினவுதல் 1820. இளையான் இது கூற, இராமன், ‘இயைந்த நீதி வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே? உளையா அறம் வற்றிட, ஊழ் வழு உற்ற சீற்றம், விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது? ‘என்றான். 126 இலக்குவன் மறுமொழி ((1821-1822)) 1821. நீண்டான் அது த்தலும், நித்திலம் தோன்ற நக்குச் ‘சேண் தான் தொடர் மா நிலம் நின்னது என்று உந்தை செப்பப் பூண்டாய்; பகையால் இழந்தே வனம் போதி என்றால், யாண்டோ அடியேற்கு இனிச் சீற்றம் அடுப்பது? ‘என்றான். 127 1822. “நின் கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்கப், புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ? என் கண் புலம் முன் உனக்கு ஈந்து வைத்து ‘இல்லை ‘என்ற வன் கண் புலம் தாங்கிய மன்னவன் தான் கொல்?‘‘ என்றான். 128 இராமன் கூறும் அமைதி (1823-1824) 1823. “பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன், முன் கொற்ற மன்னன், ‘முடி கொள்க ‘ எனக், கொள்ள மூண்டது என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ? மின் குற்று ஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்!‘‘ 129 1824. ‘நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே, பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? ‘என்றான். 130 இலக்குவன் மறுமொழி 1825. ‘உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்கக் கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள் மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம், விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி! என்றான். 131 இராமன் கூறல் 1826. ஆய் தந்து, அவன், அவ் கூறலும் ‘ஐயன், ‘நின் தன் வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்? நீ தந்தது அன்றே நெறியோர் கண் இலாதது? ஈன்ற தாய் தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ? ‘ 132 இலக்குவன் மறுமொழி 1827. ‘நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக் கற்றாய்! இது காணுதி இன்று ‘ எனக் கை மறித்தான், முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். 133 இராமன் மொழி (1828-1829) 1828. வரதன் பகர்வான், ‘வரம் பெற்றவள் தான் இவ் வையம் சரதம் உடையாள்; அவள், என் தனித் தாதை, செப்பப் பரதன் பெறுவான்; இனி, யான்படைக் கின்ற செல்வம் விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது? ‘என்றான். 134 1829. ஆன்றான் பகர்வான் பினும், ‘ஐய இவ் வையம் மையல் தோன்றா நெறி வாழ் துணைத் தம்பியைப் போர் தொலைத்தோ? சான்றோர் புகழ் நல் தனித் தாதையை வாகை கொண்டோ? ஈன்றாளை வென்றோ? இனி இக் கதம் தீர்வது என்றான். 135 இலக்குவன் மொழிதல் 1830. செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும், “தவெ்வர் சொல்லும் சொல்லும் சுமந்தேன்; இரு தோள் எனச் சோம்பி ஓங்கும் கல்லும் சுமந்தேன்; கணைப் புட்டிலும், கட்டு அமைந்த வில்லும் சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?‘‘ என்றான். 136 இராமன் மறுமொழி 1831. நன் சொற்கள் தந்து ஆண்டு எனைநாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் என் சொல் கடந்தால் உனக்கு யாதுளது ஈனம்? என்றான்; தனெ் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான். 137 இலக்குவன் தணிவு 1832. சீற்றம் துறந்தான்; எதிர் நின்று தரெிந்து செப்பும் மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா நால் தணெ் திரை வேலையின் நம்பி தன் ஆணை யாலே ஏற்றம் தொடங்காக் கடலில் தணிவு எய்தி நின்றான். 138 இராமன் தம்பியைத் தழுவிச் சுமித்திரை கோயிலை அடைதல் 1833. அன்னான்தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று தன்னாலும் அளப்பு அரும் தானும் தன் பாங்கர் நின்ற பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லிப் பின்னைச் சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். 139 சுமித்திரையின் துன்பம் 1834. கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார், தண்டா வனம் செல்வதற்கே சமைந் தார்கள் தம்மை; புண் தாங்கு நெஞ்சத்தனள் ஆய்ப் படி மேல் புரண்டாள்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். 140 இராமன் ஆற்றுதல் (1835-1836) 1835. சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன், துன்பம் என்னும் ஈர்வாளை வாங்கி மனம் தேற்றுதற்கு ஏற்ற செய்வான், ‘போர்வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்க கில்லேன் கார்வான் நெடுங்கான் இறை கண்டு இவண் மீள்வன் ‘என்றான். 141 1836. கான் புக்கிடினும் கடல்புக் கிடினும் கலிப் பேர் வான் புக்கிடினும் எனக்கு அன்னவை, மாண் அயோத்தி யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்? ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு உலையற்க என்றான். 142 மரவுரி வருதல் (1837-1838) 1837. தாய் ஆற்றுகிலாள் தனை ஆற்றுகின்றார்கள் தம் பால், தீ ஆற்றுகிலார், தனிச் சிந்தையின் நின்று செற்ற நோய் ஆற்றுகில்லார், உயிர்போல நுடங்கு இடையார், மாயாப் பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார். 143 1838. கார் வானம் ஒப்பான்தனைக் காண்தொறும் காண்தொறும் போய் நீராய் உகு கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் பேரா இடர்ப் பட்டு அயலார் உறு பீழை கண்டும் தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார். 144 மரவுரியை இலக்குவன் பெறல் 1839. வாள் நித்தில வெள் நகை ஆர்தர வள்ளல் தம்பி யாணர்த் திரு நாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும் காணப் பிறந்தேனும் நின்றேன் அவை காட்டுக‘ என்றான். 145 மரவுரி பெற்ற இலக்குவன் அன்னையை வணங்குதல் 1840. அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி, ‘இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு ‘என எம்பிராட்டி சொன்னால், அதுவே துணை ஆம்; எனத் தூய நங்கை பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள். 146 சுமித்திரை இலக்குவனுக்குச் சொல்லியது (1841-1842) 1841. ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ் அயோத்தி; மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம் என்றாள். 147 1842. பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி என்னும்படி அன்று; அடியாரினில் ஏவல் செய்தி; மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல் முன்னம் முடி; ‘ என்றனள் பால் முலை சோர நின்றாள். 148 இராம இலக்குவர் விடைபெற்றுப் போதல் 1843. இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ வெருவரும் ஆவினில் தாயும் விம்மினாள்; பொரு அரும் குமரரும் போயினார் புறம் திரு அரைத் துகில் ஒரீஇச் சீரை சாத்தியே. 149 இலக்குவனுக்கு இராமன் மொழிதல் (1844-1845) 1844. தான் புனை சீரையைத் தம்பி சாத்திடத், தேன் புனை தரெியலான் செய்கை நோக்கினான்; வான் புனை இசையினாய்! மறுக்கிலாது நீ யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா. 150 1845. “அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும் முன்னையர் அல்லர்; வெம் துயரில் மூழ்கினார்; என்னையும் பிரிந்தனர் இடர் உறாவகை உன்னை நீ என் பொருட்டு உதவுவாய்;“ என்றான். 151 இலக்குவன் மறுமொழி (1846-1850) 1846. ஆண்டகை அம்மொழி பகர, அன்பனும், தூண் தகு திரள் புயம் துளங்கத் துண் எனா, மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான், ‘ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? ‘என்றான். 152 1847. ‘நீர் உள எனின் உள, மீனும் நீலமும்; பார் உள எனின் உள, யாவும்; பார்ப்புறின், நார் உள தனு உளாய்! நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய் ‘என்றான். 153 1848. ‘பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார் மகள் நைந்து உயிர் நடுங்கவும் ‘நடத்தி கான் ‘எனா, உய்ந்தனன்; இருந்தனன்; உண்மை காவலன் மைந்தன்; என்று இனைய சொல் வழங்கினாய்? ‘எனா. 154 1849. ‘மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய் என ஏறின வெகுளியை, ‘யாதும் முற்று உற ஆறினை தவிர்க ‘என ஐய! ஆணையின் கூறிய மொழியினும் கொடியது ஆம் ‘என்றான். 155 1850. ‘செய்து உடைச் செல்வமோ யாதும் தீர்ந்து, எமைக் கை துடைத்து ஏகவும் கடவையோ? ஐயா! நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண் மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்! ‘ 156 இராமன் நிலை 1851. த்த பின் இராமன் ஒன்று க்க நேர்ந்திலன்; வரைத் தடம் தோளினான் வதனம் நோக்கினான்; விரைத் தடம் தாமரைக் கண்ணின் மிக்க நீர் நிரைத்து, இடையிடை விழ நெடிது நிற்கின்றான். 157 வசிட்டன் வந்து வருந்துதல் (1852-1856) 1852. அவ்வயின் அரசு அவை நின்றும் அன்பினன், எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்; செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்; கவ்வை அம் பெருங்கடல் முனியும் கால் வைத்தான். 158 1853. அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்; பொன் அரைச் சீரையின் பொலிவும் நோக்கினான்; என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால், தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான். 159 1854. ‘வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் தாழ் வினை அது வரச் சீரை சாத்தினான்; சூழ்வினை நால் முகத்து ஒருவர்ச் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல் பாலதோ? ‘ 160 1855. ‘வெம் வினை அவள் தர விளைந்ததேயும் அன்று; இவ்வினை இவன்வயின் எய்தற்பாற்றும் அன்று; எவ்வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ? செவ்விதின் ஒருமுறை தரெியும் பின் ‘என்றான். 161 1856. வில் தடம் தாமரைச் செம் கண் வீரனை உற்று அடைந்து ‘ஐய! நீ ஒருவி ஓங்கிய கல் தடம் காணுதி என்னில் கண் அகன் மல் தடம் தானையான் வாழ்கிலான்; ‘ என்றான். 162 இராமன் மாற்றம் 1857. ‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்; இது நெறியும் ‘என்றனன்; பன்னகப் பாயலுள் பள்ளி நீங்கினான். 163 வசிட்டன் மறுமொழி 1858. “‘வெவ் அரம் பயில் சுரம் விரவு “ என்றான் அலன்; தவெ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது “இவ் வரம் தருவன்“ என்று ஏன்றது உண்டு ‘என்றான். 164 இராமன் மறுமொழி 1859. ‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்; சான்று என நின்ற நீ தடுத்தியோ? ‘என்றான்; தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான். 165 இராமன் புறப்பாடு 1860. என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்; நின்றனன் நெடு்ங்கண் நீர் நிலத்து நீத்து உக; குன்று அன தோளவன், தொழுது, கொற்றவன் பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். 166 கவிக்கூற்று 1861. சுற்றிய சீரையன்; தொடர்ந்த தம்பியன்; முற்றிய உவகையன்; முளரிப் போதினும் குற்றம் இல் முகத்தினன்; கொள்கை கண்டவர் உற்றதை ஒருவகை உணர்த்துவாம்; அரோ. 167 மக்கள் துயர்நிலை (1862-1869) 1862. அந்தணர் அருந்தவர் அவனி காவலர் நந்தல் இல் நகர் உளார் நாட்டு உளார்கள் தம் சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும் வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர். 168 1863. ஐயனைக் காண்டலும் அணங்கு அனார்கள் தாம், மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும் மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக் கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார். 169 1864. தம்மையும் உணர்ந்திலர், தணிப்பில் அன்பினால் அம்மையின் இரு வினை அகற்றவோ? அன்றேல், விம்மிய பேர் உயிர் மீண்டு இலாமை கொல்? செம்மல் தன் தாதையில் சிலவர் முந்தினார். 170 1865. விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல் எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீர் இடை அழுந்தினர்; சிலர் பதைத்து அளக வல்லியின் கொழுந்து எரி உற்று எனத் துயரம் கூர்கின்றார். 171 1866. கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் ஆம்! இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்; பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். 172 1867. நெக்கன உடல்; உயிர் நிலையின் நின்றில; இக்கணம்! இ்க்கணம்! என்னும் தன்மையும் புக்கன; புறத்தன புண்ணில் கண் மலர் உக்கன நீர் வறந்து உதிர வாரியே. 173 1868. இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் பெரு கையில் பெயர்த்தனர் தலையைப் பேணலர் ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர்; சுரிகையில் கண் மலர் சூன்று நீக்கினார். 174 1869. சிந்தின அணி; மணி சிதறி வீழ்ந்தன; பைந்துணர் மாலையில் பரிந்த மேகலை; நந்தினர் நகையொளி விளக்கம் நங்கைமார்; சுந்தர வதனமும் மதிக்குத் தோற்றவே. 175 அரசன் தேவியர் அழுகை (1870-1875) 1870. அறுபதி னாயிரர் அரசன் தேவியர் மறு அறு கற்பினர் மழைக்கண் நீரினர் சிறுவனைத் தொடர்ந்தனர் திறந்த வாயினர் எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். 176 1871. கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும் அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன என்ன வீழ்ந்து உழந்தனர்; இராமன் அல்லது மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 177 1872. கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன, அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மைபால் தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன; இளையவர் அமுதினும் இனிய சொற்களே. 178 1873. புகலிடம் கொடு வனம் போலும் என்று, தம் மகன் வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் அகல் மதில் நெடுமனை அரத்த ஆம்பல்கள், பகல் இடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே. 179 1874. திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும், இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன; மிடை முலைக் குவடு ஒரீஇ, மேகலைத் தடம் கடல் இடை புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. 180 1875. தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும் கமல வாள் முகம்; விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் உண்டு இடர் உற்ற போது என் உறாதன? 181 பெண்டிர் மொய்த்தல் 1876. தாயரும் கிளைஞரும் சார்ந்து உளார்களும் சேயரும் அணியரும் சிறந்த மாதரும் காய் எரி உற்றனர் அனைய கௌவையர் வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 182 இராமன் சீதையிடம் செல்லல் (1877-1878) 1877. இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும் திரைப் பெருங்கடல் எனத் தொடர்ந்து பின் செல, ப்பதை உணர்கிலன்; ஒழிப்பது ஓர்கிலன்; வரைப் புயத்து அண்ணல், தன் மனையை நோக்கினான். 183 1878. நல் நெடு நளிர் முடி சூட நல் மணிப் பொன் நெடுந்தேரொடும் பவனி போனவன் துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அப் பொன் நெடுந் தரெு இடைப் போதல் மேயினான். 184 பொது மக்கள் சொல்லும் செயலும் (1879-1893) 1879. ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய வஞ்சனை கண்ட பின், வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும், வலிது உயிர்; நினைப்பது என் சில? நஞ்சினும் வலிது நம் நலம் ‘என்றார் சிலர். 185 1880. ‘மண் கொடு வரும் என வழி இருந்தது யாம், எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? பெண் கொடு வினை செயப் பெற்ற நாட்டினில் கண் கொடு பிறத்தலும் கடை ‘என்றார் சிலர். 186 1881. “முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன், ‘உழுவை சேர் கானம் அத்து உறைவென் யான் ‘என எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே? அழகிது இவ் அன்பு!‘‘ என்றர் சிலர். 187 1882. வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை, ‘நலம் கடிந்து அறம் கெட நயக்கலீர்கள்; நும் குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை நிலம் கடிந்தாெளாடு நிகர் ‘என்றார் சிலர். 188 1883. ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன், பொருவு அருந் துயரினன், தொடர்ந்து போகின்றான் இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை ஒருவனோ இவற்கு இவ் ஊர் உறவு? ‘என்றார் சிலர். 189 1884. ‘முழுக்கலின் வலிய நம் மூரி நெஞ்சினை மழுக்களில் பிளத்தும் ‘என்று ஓடுவார், வழி ஒழுக்கிய கண்ணினில் கலுழி ஊற்றிடை இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர். 190 1885. பொன் அணி, மணி அணி மெய்யில் போக்கினர்; மின் என மின் என விளங்கும் மெய்விலைப் பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கினர், சின்ன நுண் துகிலினைப் புனைகின்றார் சிலர். 191 1886. “நிறை மக உடையவர், நெறி செல் ஐம்பொறி குறை மக குறையினும் கொடுப்பர் ஆம் உயிர்; முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற இறை மகன் திரு மனம் இரும்பு‘‘ என்றார் சிலர். 192 1887. வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் பூங்கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளில் தாங்கிய செங்கை தம் தலைகள் மேல் உளார். 193 1888. தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார், முலைக் குவட்டு இழி கண் நீர் ஆலி மொய்த்து உக, மலைக் குவட்டு அகவுறும் மயிலின், மாழ்கினார். 194 1889. மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை எஞ்சல் இல் சாளரத்து இரங்கும் இன் சொலார், அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தரப் பஞ்சரத்து இருந்து அழும் கிளியில், பன்னினார். 195 1890. நல் நெடுங்கண்களின் நான்ற நீர்த் துளி தன் நெடுந்தாரைகள் தளத்தின் வீழ்தலால், மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி, மாடமும், பொன் நெடுங்கண் குழித்து, அழுவ போன்றவே. 196 1891. மக்களை மறந்தனர் மாதர், தாயரைப் புகு இடம் அறிந்திலர் புதல்வர்; பூசல் இட்டு உக்கனர், உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்; துக்கம் நின்று அறிவினைச் சூறை ஆடவே. 197 1892. காமரம் கனிந்தனெக் கனிந்த மெல் மொழி மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் தேமரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்துள தவள மாடமே. 198 1893. மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற, குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர், இழைக் குலம் சிதறிட, ஏ உண்டு ஓய்வு உறும் உழைக் குலம் உழைப்பன ஒத்து, ஒர்பால் எலாம். 199 நகரின் பொலிவழிவு (1894-1907) 1894. கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்; படி அடங்கலும் நிமிர் பசுங் கண் மாரியால், பொடி அடங்கின மதில் புறத்து வீதியே. 200 1895. அட்டிலும் இழந்தன புகை; அகில் புகை நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால் கிளி வட்டிலும் இழந்தன; மகளிர் கால் மணித் தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே. 201 1896. ஒளி துறந்தன முகம் உயிர் துறந்தனெத் துளி துறந்தன முகில் தொகையும்; தூயவாம் தளி துறந்த பலி; தான யானையும், களி துறந்தன; மலர்க் கள் உண் வண்டினே. 202 1897. நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர் குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும் அழல் பிரிந்தன; துணை பிரிந்த அன்றிலே. 203 1898. தார் ஒலி நீத்தன புரவி, தண்ணுமை வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும்; தேர் ஒலி நீத்தன தரெுவும்; தணெ் திரை நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே. 204 1899. முழவு எழும் ஒலி இல, முறையின் யாழ் நரம்பு எழ எழும் ஒலி இல, இமைப்பில் கண்ணினர் விழவு எழும் ஒலி இல, வேறும் ஒன்று இல, அழ எழும் ஒலி அலது, அரச வீதியே. 205 1900. தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே; புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே; கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே. 206 1901. செய் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர் கை மறந்தன பசுங் குழவி; காந்து எரி நெய் மறந்தன; நெறி அறிஞர் யாவரும் மெய் மறந்தனர்; ஒலி மறந்த வேதமே. 207 1902. ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரைக் கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே. 208 1903. நீட்டில களிறு கைந் நீரின்; வாய் புதல் பூட்டில புரவிகள்; புள்ளும் பார்ப்பினுக்கு ஈட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும் ஊட்டில கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. 209 1904. மாந்தர் தம் மொய்ம்பினில் மகளிர் கொங்கையாம் ஏந்து இள நீர்களும் வறுமை எய்தின சாந்தம்; அம் மகிணர் தம் முடியில், தையலார் கூந்தலும் வறுமைய மலரின் கூலமே. 210 1905. ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சிச் சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை; கொடியின் ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி; மேடை, நல் அணி முனிந்தன வெள் இடை, பிறவும். 211 1906. ‘திக்கு நோக்கிய தீவினைப் பயன் ‘ எனச் சிந்தை நெக்கு நோக்குவோர், ‘நல் வினைப் பயன் ‘ என நேர்வோர், பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும் ஒக்க நோக்கிய யோகரும் அருந்துயர் உழந்தார். 212 1907. ஓவு இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய, மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்மத் தாவு இல் ஐம்பொறி மறுகுறத் தயரதன் என்ன, ஆவி நீக்கின்றது ஒத்தது அவ் அயோத்தி மா நகரம். 213 இராமன் சீதையின் உறையுளை அடைதல் 1908. உயங்கி அந் நகர் உலைவு உற, ஒருங்கு உழை சுற்ற, மயங்கி ஏங்கினர் வயின் வயின் வரம்பு இலர் தொடர, இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். 214 இராமன் கோலத்தைக் கண்ட சீதையின் நிலை 1909. அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர், புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொருமப் பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா, எழுது பாவை அன்னாள் மனத் துணுக்கமொடு எழுந்தாள். 215 சீதை இராமனை நோக்கி வினவுதல் (1910-11) 1910. எழுந்த நங்கையை மாமியர் தழுவினர், ஏங்கிப் பொழிந்த உண்கண் நீர்ப் புது புனல் ஆட்டினர், புலம்ப, அழிந்த சிந்தையள், அன்னம் இது இன்னது என்று அறியாள், வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. 216 1911. ‘பொன்னை உற்ற பொலன் கழலோய்! புகழ் மன்னை உற்றது உண்டோ? மற்று இவ் வன் துயர் என்னை உற்றது? இயம்பு! ‘ என்று இயம்பினான், மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 217 இராமன் விடை 1912. ‘பொருவு இல் எம்பி புவி புரப்பான்; புகல் இருவர் ஆணையும் ஏந்தினென், இன்று போய்க் கருவி மாமழைக் கல் கடம் கண்டு நான், வருவென், ஈண்டு வருந்தலை நீ ‘என்றான். 218 சீதை வருத்தம் 1913. நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்; ‘நீ வருந்தலை; நீங்குவென் யான்; ‘ என்ற தீய வெம் சொல் செவி சுடத் தேம்புவாள். 219 கவிக்கூற்று 1914. துறந்து போம் எனச் சொற்ற சொல் தேறுமோ? உறைந்த பால் கடல் சேக்கை உடன் ஒரீஇ, அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும் பிரிவு இலள் ஆயினாள். 220 சீதை வினவுதல் 1915. அன்ன தன்மையள் “ஐயனும் அன்னையும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே; என்னை என்னை? ‘இருத்தி ‘என்றாய்” என்றாள் உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள். 221 இராமன் விடை 1916. “வல் அரக்கரின் மால் வரை ஊடு எழும், அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க் கல் அரக்கும், கடுமைய அல்ல நின் சில் அரக்கு உண்ட சேவடிப் போது‘‘ என்றான். 222 சீதையின் மாற்றம் 1917. ‘பரிவு இகந்த மனத்தொடு பற்று இலாது ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு? ‘என்றாள். 223 இராமன் சிந்தனை 1918. அண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன்றியும் உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்; கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன், எண்ணுகின்றனன், ‘என் செயல் பாற்று? ‘எனா. 224 சீதை சீரையுடுத்து வருதல் 1919. அனைய வேலை, அகல் மனை எய்தினள், புனையும் சீரம் துணிந்து புனைந்தனள், நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள், பனையின் நீள் கரம் பற்றிய கையினாள். 225 கவிக் கூற்று (1920-1921) 1920. ஏழைதன் செயல் கண்டவர் யாவரும் வீழும் மண் இடை வீழ்ந்தனர்; வீந்திலர்; வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ? ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! 226 தாயர் முதலியோர் வருந்துதல் 1921. தாயர் தவ்வையர் தன் துணைச் சேடியர் ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர் தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான் தூய தையலை நோக்கினன் சொல்லுவான். 227 இராமன் சொல் 1922. ‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய் அல்லை; போத அமைந்தனை; ஆதலின் எல்லை அற்ற இடர் தருவாய் ‘என்றான். 228 சீதையின் மாற்றம் 1923. கொற்றவன் அது கூறலும் கோகிலம் செற்றது அன்ன குதலையள் சீறுவாள் ‘உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே? என் துறந்த பின் இன்பம் கொலாம்?“ என்றாள். 229 இராமன் புறப்படுதல் 1924. பிறிது ஒர் மாற்றம் பெருந்தகை பேசலன் மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் செறுவின் வீழ்ந்த நெடுந் தரெுச் சென்றனன் நெறி பெறாமை அரிதினில் நீங்குவான். 230 மூவரும் போம் முறை 1925. சீரை சுற்றித் திரு மகள் பின் செல மூரி வில் கை இளையவன் முன் செலக் காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 231 மக்கள் பின் தொடர்தல் 1926. ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்; சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர்; ‘வீரன் முன் வனம் மேவுதும் யாம் ‘எனாப் போர் ஒன்று ஒல் ஒலி கைம்மிகப் போயினார். 232 இராமன் தாயருக்குக் கூறல் 1927. தாதை வாயில் குறுகினன் சார்தலும் கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா ‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர் ‘என்றான்; மாதராரும் விழுந்து மயங்கினார். 233 தாய்மார் வாழ்த்துதல் 1928. ஏத்தினார் தம் மகனை மருகியை வாழ்த்தினார்; இளையோனை வழுத்தினார்; ‘காத்து நல்குமின் தயெ்வதங்காள்! ‘என்றார் நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 234 இராமன் முதலியோர் தேர்மிசைப் போதல் 1929. அன்ன தாயர் அரிதில் பிரிந்த பின் முன்னர் நின்ற முனிவனைக் கைதொழாத் தன்னது ஆர் உயிர்த் தம்பியும் தாமரைப் பொன்னும் தானும் ஓர் தேர் மிசைப் போயினான். 235  

Previous          Next