இராமபிரான் சீதாபிராட்டியுடனும் இலக்குமணனுடனும் செல்லுதல் 2016. வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறையப் பொய்யோ எனும் இடையாெளாடும் இளையானொடும் போனான்; மையோ! மரகதமோ! மறிகடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான். 1 பெருமானும் பிராட்டியும் நெறி இடைக் கண்ட காட்சி (2017-2023) 2017. அளி அன்னது ஒர் அறல் துன்னிய குழலாள், கடல் அமுதின் தெளிவு அன்னது ஒர் மொழியாள், நிறை தவம் அன்னது ஒர் செயலாள், வெளி அன்னது ஒர் இடையாெளாடும் விடை அன்னது ஒர் நடையான் களி அன்னமும் மட அன்னமும் உடன் ஆடுவ கண்டான். 2 2018. அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா மஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள், துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலக் கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். 3 2019. மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் பாகம் தரும் நுதலாெளாடு பவளம் தரும் இதழான் மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் நாகம் தனி வருகின்றது பிடியோடு என நடவா. 4 2020. தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின் கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின் பசை நறவின் விளை கட்டியின் மதுரித்து எழு கிளவிக் கிளி விழி போல் களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான். 5 2021. அருப்பு ஏந்திய கலசத் துணை, அமுது ஏந்திய மத மா மருப்பு ஏந்திய எனலாம் முலை, மழை ஏந்திய குழலாள், கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்; இடர் காணாள்; பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினாள் போனாள். 6 2022. பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர், அன்னம் துயில் வதி தண்டலை, அயல் நந்து உறை புளினம், சின்னம் தரு மலர் சிந்திய செறி நந்தனவனம், நன் பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார். 7 2023. கால் பாய்வன முது மேதிகள், கதிர் மேய்வன கடை வாய்ப் பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படரச் சேல் பாய்வன கயல் பாய்வன செங்கால் மட அன்னம் போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார். 8 இராமன் முதலியோர் கங்கைக்கரையை அடைதல் 2024. பரிதி பற்றிய பல் பகல் முற்றினர் மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇச் சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்று உறும் விரி திரைப் புனல் கங்கையை மேவினார். 9 கங்கைக் கரையில் உள்ள தவச்செல்வர் இராமனைக் காண வருதல் 2025. கங்கை என்னும் கடவுள் திரு நதி தங்கி வைகும் தபோதனர் யாவரும் ‘எங்கள் செல்கதி வந்தது ‘என்று ஏம் உறா அம் கண் நாயகற் காண வந்து அண்மினார். 10 இராமனைக் கண்ட தவச்செல்வர் செயல் (2026-2029) 2026. பெண்ணில் நோக்கும் சுவையில் பிறர் தமக்கு எண்ணின் நோக்கி இயம்பரும் இன்பத்தைப் பண்ணின் நோக்கும் பர அமுதைப் பசும் கண்ணின் நோக்கினார் உள்ளம் களிக்கின்றார். 11 2027. எதிர் கொடு ஏத்தினர் இன் இசை பாடினர் வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனைக் கதிர் கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால் மதுர வாரி அமுது என மாந்துவார். 12 2028. மனையின் நீங்கிய மக்களை வைகலும் நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் அனையர் வந்து உற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் இனிய மா தவப் பள்ளி கொண்டு எய்தினார். 13 2029. பொழியும் கண்ணீர்ப் புதுப் புனல் ஆட்டினர் மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர் அழிவு இல் அன்பு எனும் ஆர் அமுது ஊட்டினர் வழியின் வந்த வருத்தத்தை வீட்டினர். 14 தவச்செல்வர் இராமனை நீராடி அமுதுசெய்க எனல் 2030. காயும் கானில் கிழங்கும் கனிகளும் தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ ஆய கங்கை அரும் புனல் ஆடினை தீயை ஓம்பினை செய் அமுது ‘என்றனர். 15 இராமன் சீதாபிராட்டியுடன் நீராடுதல் 2031. மங்கையர்க்கு விளக்கு அன்ன மாதையும் செங்கை பற்றினன் தேவரும் துன்பு அறப் பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின் அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். 16 கங்கை இராமனைப் போற்றுதல் 2032. கன்னி நீக்கரும் கங்கையும் கைதொழாப் ‘பன்னி நீக்கரும் பாதகம் பார் உேளார் என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த உன்னின் நீக்கினென் உய்ந்தனென் ஆம் ‘என்றாள். 17 கங்கையில் நீராடிய இராமன் தோற்றம் (2033-2034) 2033. வெம் கண் நாகக் கரத்தினன் வெள் நிறக் கங்கை வார் சடைக் கற்றையன் கற்பு உடை மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்த் திங்கள் சூடிய செல்வனில் தோன்றினான். 18 2034. தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தான் வள்ளி நுண் இடை மா மலராெளாடும் வெள்ளி வெள் நிறப் பாற்கடல் மேலை நாள் பள்ளி நீங்கிய பான்மையில் தோன்றினான். 19 சீதாபிராட்டி கங்கையில் நீராடுதல் (2035-2038) 2035. வஞ்சி நாணி வணங்க மட நடைக்கு அஞ்சி அன்னம் ஒதுங்க அடிக்கு மென் கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயல் புகப் பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள். 20 சீதாபிராட்டி கூந்தலின் நறுமணம் கங்கை கமழ்தல் 2036. தேவர்தேவன் செறி சடைக் கற்றையுள் கோவை மாலை எருக்கொடு கொன்றையின் பூவும் நாறலள் பூங் குழல் கற்றையின் நாவி நாள் மலர் கங்கையும் நாறினாள். 21 2037. நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி த்த சீதை தனிமையை உன்னுவாள் திரைக் கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள். 22 சீதையின் குழற்கற்றை கங்கைநீரிடைத் தாழ்ந்து குழைந்த காட்சி 2038. மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம் தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள் பொங்கும் நீர் சுழி போவன போன்றவே. 23 சீதை பாற்கடலிடைத் தோன்றிய திருமகள்போல விளங்குதல் 2039. சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன் விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகித் தோன்றுகின்றாள் முதல் பால் கடல் அழுவத்து அன்று எழுவாள் என ஆயினாள். 24 கங்கையின் பேறு 2040. செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் வெய்ய பாதகம் தீர்த்து விளங்கினாள்; ஐயன் மேனி எலாம் அளைந்தாள்; இனி வையம் மா நரகத்திடை வைகுமோ? 25 இராமன் முனிவர் விருந்தினனாதல் 2041. துறை நறும் புனல் ஆடிச் சுருதியோர் உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் இறைவற் கைதொழுது ஏந்து எரி ஓம்பிப் பின் அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான். 26 இராமன் முனிவர் சாலையில் விருந்துண்டு மகிழ்தல் 2042. வருந்தித் தான் தர வந்த அமுதையும் ‘அருந்தும் நீர் ‘என்று அமரரை ஊட்டினான் விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான்; திருந்தினார் வயின் செய்தன தேயுமோ? 27 குகன் இயல்பு (2043-2050) 2043. ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான் தூய கங்கைத் துறை விடும் தொன்மையான் காயும் வில்லினன் கல் திரள் தோளினான். 28 2044. துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் அடியன் அல் செறிந்த அன்ன நிறத்தினான் நெடிய தானை நெருக்கினன் நீர் முகில் இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான். 29 2045. கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை பம்பை பம்பு படையினன் பல்லவத்து அம்பன் அம்பிக்கு நாதன் அழிகவுள் தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றினான். 30 2046. காழம் இட்ட குறங்கினன் கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான் அரை தாழ விட்ட செம் தோலன் தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான். 31 2047. பல் தொடுத்த அன்ன பல்கு கவடியன் கல் தொடுத்தன்ன போலும் கழலினன் அல் தொடுத்தன்ன குஞ்சியன் ஆளியின் நெற்றொடு ஒத்து நெரி புருவத்தினான். 32 2048. பெண்ணை வன் செறும்பில் பிறங்கிச் செறி வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன்கையான் கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 33 2049. கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன் நச்சு அராவின் நடுக்கு உறும் நோக்கினன் பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான். 34 2050. ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான் சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான். 35 குகன் இராமனைக் காண வருதல் (2051-2052) 2051. சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன் இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 36 2052. சுற்றம் அப்புறம் நிற்கச் சுடு கணை வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 37 குகன் இலக்குவனிடம் தன்னை அறிவித்தல் 2053. கூவா முன்னம் இளையோன் குறுகி ‘நீ ஆவான் யார்? ‘என அன்பின் இறைஞ்சினான் ‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் ‘என்றான். 38 இலக்குவன் இராமனிடம் குகன் வரவு கூறுதல் 2054. ‘நிற்றி ஈண்டு ‘என்று புக்கு, நெடியவன் தொழுது, தம்பி, ‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்; நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும், உள்ளம் தூயவன், தாயின் நல்லன், எற்றும் நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், ஒருவன் ‘என்றான். 39 குகன் இராமனைக் கண்டு மனமுருகுதல் 2055. அண்ணலும் விரும்பி, ‘என்பால் அழைத்தி நீ அவனை ‘என்னப் பண்ணவன் ‘வருக ‘என்றான்; பரிவினன் விரைவில் புக்கான்; கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி மண் உறப் பணிந்து, மேனி வளைந்து, வாய் புதைத்து நின்றான். 40 குகன் கையுறை யேற்குமாறு இராமனை வேண்டுதல் 2056. ‘இருத்தி நீ ‘என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த அருத்தியன், ‘தேவனும் மீனும் அமுதினுக்கு அமைந்த ஆகத் திருத்தினென், கொணர்ந்தேன்; என் கொல் திரு உளம் ‘? என்ன, வீரன், விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான். 41 குகன் கையுறையை இராமன் பாராட்டுதல் 2057. ‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த, காதல் தரெிதரக் கொணர்ந்த, என்றால் அமுதினும் சீர்த்த! அன்றே பரிவினில் தழீஇய என்னில், பவித்திரம்; எம் அனோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனெம்; அன்றே ‘என்றான். 42 கங்கை கடக்க நாவாயொடு வழிநாள் வருமாறு குகனிடம் இராமன் கூறுதல் 2058. சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், ‘யாம் இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப் பொங்கும் நின் சுற்றத்தோடும் போய், உவந்து, இனிது உன் ஊரில் தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல் ‘என்றான். 43 குகன் வேண்டுகோள் 2059. கார் குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்துவான், ‘இப் பார் குலாம் செல்வ! நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை ‘என்றான். 44 குகன் கருத்தறிந்த இராமன் கூறுதல் 2060. கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான், சீதையை நோக்கித் தம்பி திரு முகம் நோக்கித் ‘தீராக் காதலன் ஆகும் ‘என்று கருணையின் மலர்ந்த கண்ணன், ‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மொடு ‘என்றான். 45 திருநகர் தீர்ந்த செய்தியறிந்து குகன் வருந்தல் 2061. திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தரெித்தி! என்னப் பருவரல் தம்பி கூறப் பரிந்தவன் பையுள் எய்தி, இரு கண் நீர் அருவி சோரக் குகனும் ஆண்டு இருந்தான்; ‘என்னே! பெரு நிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் ‘என்னா. 46 கதிரவன் மறைதல் 2062. விரி இருள் பகையை ஓட்டித் திசைகளை வென்று, மேல் நின்று, ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும் இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள் புரிந்து வீந்த செரு வலி வீரன் என்னச் செம் கதிர்ச் செல்வன் சென்றான். 47 சீதாபிராட்டியும் இராமனும் தருப்பைப்புல்லில் உறங்க இலக்குவன் காத்து நிற்றல் 2063. மாலை வாய் நியமம் செய்து, மரபுளி இயற்றி, வைகல் வேலை வாய் அமிர்து அன்னாளும் வீரனும் விரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர், வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான். 48 குகன் இராமலக்குவர்களை நோக்கி வருந்திநிற்றல் 2064. தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன், வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன், தம்பி நின்றானை நோக்கித் தலை மகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றில் நின்றான். 49 கதிரவன் தோற்றம் 2065. துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும் மறக்குமா நினையல்; அம்மா! ‘வரம்பு இல தோற்றும் மாக்கள் இறக்கும் ஆறு இது ‘என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின்னாள் ‘பிறக்கும் ஆறு இது ‘என்பான்போல் பிறந்தனன் பிறவா வெய்யோன். 50 கதிரவன் தோன்றூம் காலை நிகழ்ச்சி 2066. செம் செவ்வே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும் வெம் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஒர் அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 51 இராமன் குகனை விரைவில் நாவாய் கொணர்க எனல 2067. நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான், ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, ‘ஐய! கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்; என்றான். 52 ்இராமனிடம் குகன் வேண்டுகோள் (2068-2072) 2068. ஏவிய மொழி கேளா, இழி புனல் பொழி கண்ணான், ஆவியும் உலைகின்றான், அடியிணை பிரிகல்லான், காவியின்மலர் காயா கடல் மழை அனையானைத் தேவியொடு அடிதாழாச் சிந்தனை செய்வான். 53 2069. ‘பொய்ம் முறை இலரால் எம் புகலிடம் வனமேயால்; கொய்ம் முறை உறு தாராய்! குறைவு இலெம்; வலியேமால்; செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை இம்முறை உறவு என்னா இனிது இரு, நெடிது எம் ஊர். 54 2070. ‘தேன் உள, தினை உண்டால், தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள, துணை நாயோம் உயிர் உள, விளையாடக் கான் உள, புனல் ஆடக் கங்கையும் உளது, அன்றோ நான் உள தனையும் நீ இனிது இரு; நாட, எம்பால் ‘. 55 2071. ‘தோல் உள துகில் போலும், சுவை உள தொடர் மஞ்சம் போல் உள பரண், வைகும் புரை உள, கடிது ஓடும் கால் உள, சிலை பூணும் கை உள, கலி வானின் மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால். 56 2072. ‘ஐயிருபத்தோடு ஐந்தாயிரர் உளர் ஆணை செய்குநர், சிலை வேடர், தேவரின் வலியாரால், உய்குதும் அடியோம், எம் குடில் இடை ஒருநாள் நீ வைகுதி எனின், மேல் ஓர் வாழ்வு இலை பிறிது ‘என்றான். 57 குகனிடம் இராமன் கூறுதல் 2073. அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான், வெள் நிற நகை செய்தான், ‘வீர! நின் உழை யாம் அப் புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று எண்ணிய சில நாளில் குறுகுதும்; இனிது ‘என்றான். 58 குகன் கொணர்ந்த ஓடத்தில் இராமன் முதலியோர் ஏறுதல் 2074. சிந்தனை உணர்கிற்பான், சென்றனன், விரைவோடு தந்தனன் நெடுநாவாய்; தாமரை நயனத்தான் அந்தணர் தமை எல்லாம் ‘அருளுதிர் விடை ‘என்னா, இந்துவின் நுதலாேளாடு இளவலொடு இனிது ஏறா. 59 இராமன் குகன் நாவாயில் கங்கை கடத்தல் (2075-2076) 2075. ‘விடுநதி கடிது ‘என்றான்; மெய் உயிர் அனையானும் முடுகினன் நெடு நாவாய்; முரி திரை நெடுநீர்வாய்க் கடிதினின் மட அன்னக் கதி அது செல, நின்றார் இடர் உற, மறையோரும் எரி உறும் மெழுகு ஆனார். 60 2076. பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும் சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாடத் தோல் உடை நிமிர் கோலில் துழவிட, எழும் நாவாய் கால் உடை நெடு ஞெண்டில் சென்றது கடிது; அம்மா! 61 ஓடம் கங்கையின் தனெ்கரை சேர்தல் 2077. சாந்து அணி புளினத்தின் தடம் முலை உயர் கங்கை காந்து இன மணி மின்னக் கடி கமழ் கமலத்தில் சேந்து ஒளி விரியும் தெள் திரை எனும் நிமிர் கையால் ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால். 62 இராமன் குகனிடம் சித்திரகூடத்துக்குச் செல்லும் நெறி வினவுதல் 2078. அத்திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கிச் ‘சித்திரகூடத்தில் செல் நெறி பகர் ‘என்னப் பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா, ‘உத்தம! அடி நாயேன் ஓதுவது உளது ‘என்றான். 63 தன்னை உடனழைத்துச் செல்லுமாறு இராமனிடம் குகன் வேண்டுதல் (2079-2082) 2079. ‘நெறி இடுநெறி வல்லேன்; நேடினென் வழுவாமல் நறியன கனி காயும் நறவு இவை தரவல்லேன்; உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடிவரை உம்மைப் பிறிகிலென்; உடன் ஏகப் பெறுகுவென் எனில், நாயேன். ‘ 64 2080. ‘தீயன அவை யாவும் திசைதிசை செல நூறித் தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன், மேயின பொருள் நாடித் தருகுவென், வினைமற்றும் ஏயின செய வல்லேன், இருளினும் நெறி செல்வேன். ‘ 65 2081. ‘கல்லுவென் மலை மேலும் கவலையின் முதல் யாவும், செல்லுவென் நெறி தூரம், செறி புனல் தரவல்லேன், வில்லினம் உளென், ஒன்றும் வெருவலென், இருபோதும் மல்லினும் உயர் தோளாய்! மலர் அடி பிரியேனால். 66 2082. ‘திருவுளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார் மருவலர் எனின், முன்னே மாள்குவென்; மிகை அல்லேன்; பொரு அரு மணி மார்பா! போதுவென் உடன் ‘என்றான். 67 குகனை நோக்கி இராமன் கூறுதல் (2083-2086) 2083. அன்னவன் கேளா, அமலனும் நேர்வான், என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந் நல் நுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் ‘ 68 2084. ‘துன்பு உளது எனின் அன்றே சுகம் உளது; அது அன்றிப் ‘பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது ‘என உன்னேல்; முன்பு உளெம் ஒரு நால்வேம், முடிவு உளது என உன்னா அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம். ‘ 69 2085. ‘படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம்; இடர் உறு தகையாயோ? யான் என உரியாய் நீ; சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன், நான் வடதிசை வரும் அந்நாள் நின் உழை வருகின்றேன். ‘ 70 2086. ‘அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி; இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? செய்யாய்; உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ? என் கிளை இது கா என் ஏவலின் இனிது ‘என்றான். 71 குகன் விடை பெறுதலும் இராமன் முதலியோர் கானகத்துப் புகுதலும் 2087. பணிமொழி கடவாதான், பருவரல் இகவாதான், பிணி உடையவன் என்னும் பேதினன், விடை கொண்டான்; அணி இழை மயிலோடும், ஐயனும், இளையோனும், திணி மரம் நிறை கானில் சேண் உறும் நெறி சென்றார். 72

Previous          Next