32. வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான், தீம் கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்; ஆங்கு அவன், புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி, மூங்கையான் பேசல் உற்றான் என்ன யான் மொழியல் உற்றேன

33. வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மாநீர்க் குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை; பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க் கரம்பு எலாம் செந்தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.

34. ஆறு பாய் அரவம்; மள்ளர் ஆலை பாய் அமலை; ஆலைச் சாறு பாய் ஒதை; வேலைச் சங்கின் வாய் பொங்கும் ஓசை; ஏறு பாய் தமரம்; நீரில் எருமை பாய் துழனி; இன்ன மாறு மாறு ஆகி தம்மின் மயங்கும் மா மருத வேலி.

35. தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண் விழித்து நோக்கத் தணெ்டிரை எழினி காட்டத் தேம் பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ!

36. தாமரைப் படுவ வண்டும் தகைவு அரும் திருவும்; தண் தார்க் காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்; மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்; நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும்; மன்னோ.

37. நீர் இடை உறங்கும் சங்கம்; நிழல் இடை உறங்கும் மேதி; தார் இடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்; தூர் இடை உறங்கும் ஆமை; துறை இடை உறங்கும் இப்பி; போர் இடை உறங்கும் அன்னம்; பொழில் இடை உறங்கும் தோகை.

38. படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும், இடறிய பரம்பில் காந்தும் இனம் மணித் தொகையும், நெல்லும் மிடை பசும் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும், கடைசியர் முகமும், போதும், கண் மலர்ந்து ஒளிரும் மாதோ.

39. தெள் விளிச் சிறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி வள் விசிக் கருவி பம்ப வயின் வயின் வழங்கு பாடல் வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும் பொன் பள்ளி எள் அரும் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே.

40. ஆலை வாய்க் கரும்பின் தேனும் அரி தலைப் பாளைத் தேனும், சோலை வாய்க் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும், மாலை வாய் உகுத்த தேனும், வரம்பு இகந்து ஓடி, வங்க வேலை வாய் மடுப்ப, உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ.

41. பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை, உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகலாது உலாவி நிற்பார்; பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்.

42. புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த கதுப்பு உறு வெறியே நாறும் கருங்கடல் தரங்கம் என்றால், மதுப் பொதி மழலைச் செவ்வாய் வாள் கடைக் கண்ணின் மைந்தர் விதுப்பு உற நோக்கும் அன்னார் மிகுதியை விளம்பல் ஆமே!

43. வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும் குண்டலக் கோல மைந்தர் குடைந்த நீர்க் கொள்ளை சாற்றில், தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் வண்டல் இட்டு ஓடும் மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ!

44. சேல் உண்ட ஒண் கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம் மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக், கனைப்பச் சோர்ந்த பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை..

45. குயில் இனம் வதுவை செய்யக் கொம்பு இடைக் குனிக்கும் மஞ்ஞை அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்யப் பயில் சிறை அரச அன்னம் பன்மலர்ப் பள்ளி நின்றும் துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை.

46. பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும் மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும்

47. கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி உறுப்பு உறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை மறுப் பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்.

48. எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை, சீற்றத்து உரும் இவை என்னத் தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும்.

49. முள் அரை முளரி வெள்ளி முளை இற முத்தும் பொன்னும் தள் உற, மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில் துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை சுரிப்பத் தூம்பின்- உள் வரால் ஒளிப்ப, மள்ளர் உழுபகடு உரப்புவாரும

50. முந்து முக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின் செந் தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின் தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும் அந்தணர் அமுதர் உண்டி அயிறலும் அமலைத்து எங்கும்.

51. முறை அறிந்து, அவாவை நீக்கி, முனி உழி முனிந்து, வெஃகும் இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப் பொறை தவிர்ந்து உயிர்க்கும் தயெ்வப் பூதலம் தன்னில், பொன்னின் நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடுமுதுகு ஆற்றும் நெய்தல

52. எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் குறிகளும் போத்தின் கொல்வார், கொன்ற நெல் குவைகள் செய்வார், வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் நெறிகளும் புதையப் பண்டி நிரைத்து மண் நெளிய ஊர்வார்.

53. கதிர்படு வயலின் உள்ள, கடி கமழ் பொழிலின் உள்ள, முதிர்பலம் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார்.

54. பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண் பெடை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று வைகலும் மருத வேலியின் வைகின வண்டு அரோ.

55. வேளை வென்ற உழத்தியர் வெம்முலை ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஒர்பால் பாளை தந்த மதுப் பருகிப் பரு வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.

56. ஈர நீர் படிந்து இந் நிலத்தே சில கார்கள் என்ன வரும் கருமேதிகள் ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை தாரை கொள்ளத் தழைப்பன சாலியே.

57. முட்டில் அட்டில் முழங்குற வாக்கிய நெடும் உலைக் கழுநீர் நெடு நீத்தம் தான் பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய் நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே.

58. சூடு உடைத் தலைத் தூநிற வாரணம் தாள் துணைக் குடையும் தகை சால் மணி மேட்டு இமைப்பன மின் மினியாம் எனக் கூட்டின் உய்க்கும் குருவிக் குழாம் அரோ.

59. தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் தேயும் நுண் இடை சென்று வணங்கவும் ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.

60. குற்ற பாகு கொழிப்பன; கோள் நெறி கற்றிலாத கரும் கண் நுளைச்சியர் முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில் சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.

61. துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் உரும் இடித்து எனத் தாக்குறும் ஒல் ஒலி வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே.

62. தினைச் சிலம்புவ தீம் சொல் இளம் கிளி; நனைச் சிலம்புவ நாகு இள வண்டு; பூம் புனைச் சிலம்புவ புள் இனம்; வள்ளியோர் மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே.

63. கன்று உடைப் பிடி நீக்கிக் களிற்று இனம் வன் தொடர்ப் படுக்கும் வன வாரி சூழ் குன்று உடைக் குல மள்ளர் குழூஉக் குரல் இன் துணைக் களி அன்னம் இரிக்குமே.

64. வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி; துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி; புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள் பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே. 65. கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் கன்று உறக்கும் குரவை; கடைசியர் புன் தலைப் புனம் காப்பு உடைப் பொங்கரில் சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி.

66. சேம்பு கால்பொரச் செங்கழுநீர்க் குளத் தூம்பு காலச் சுரி வளை மேய்வன காம்பு கால் பொர கண் அகல் மால்வரைப் பாம்பு நான்று எனப் பாய் பசுந்தேறலே.

67. பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விழைவன யாவையே.

68. பிறை முகத் தலைப் பெட்பின் இரும்பு போழ் குறை கறித் திரள் குப்பை, பருப்பொடு நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை. உறைவ, கோட்டம் இல் ஊட்டிடம் தோறெலாம்.

69. கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம் சுரக்கும் ஒழுக்கம்; குடிக்கு எலாம்.

70. கூற்றம் இல்லை ஒர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லை தம் சிந்தையில் செவ்வியால்; ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.

71. நெறிகடந்து பரந்தன நீத்தமே; குறி அழிந்தன குங்குமத் தோள்களே; சிறிய மங்கையர் தேயும் மருங்குலே; வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே.

72. அகில் இடும் புகை அட்டில் இடும் புகை நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை புகலும் வேள்வியில் பூம் புகையொடு அளாய் முகிலின் விம்மி முழங்கின எங்கணும்.

73. இயல்புடை பெயர்வன மயில்; மணி இழையின் வெயில் புடை பெயர்வன; வெறி அலர் குழலின் புயல் புடை பெயர்வன பொழில்; அவர் விழியின் கயல் புடை பெயர்வன கடி கமழ் கழனி.

74. இடை இற மகளிர்கள் எறிபுனல் மறுகக் குடைபவர் துவர் இதழ் அலர்வன குமுதம்; மடைபெயர் அனம் என மட நடை அளகக் கடைசியர் முகம் என மலர்வன கமலம்.

75. விதியினை நகுவன அயில் விழி; பிடியின் கதியினை நகுவன அவர்நடை; கமலப் பொதியினை நகுவன புணர் முலை; கலை வாழ் மதியினை நகுவன வனிதையர் வதனம்.

76. பகலினொடு இகலுவ படர்மணி; மடவார் நகிலினொடு இகலுவ நனிவளர் இளநீர்; துகிலினொடு இகலுவ சுதைபுரை நுரை; கார் முகிலினொடு இகலுவ கடிமண முரசம்.

77. காரொடு நிகர்வன கடி பொழில்; கழனிப் போரொடு நிகர்வன பொலன் வரை; பணை சூழ் நீரொடு நிகர்வன நிறை கடல்; நிதி சால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்.

78. நெல் மலை அல்லன நிரைவரு தரளம் சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் நல் மலை அல்லன நதி தரு நிதியம் பொன் மலை அல்லன மணி படு புளினம்.

79. பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர் கந்தனை அனையவர் கலை தரெி கழகம் சந்தனம் வனம் அல சண்பகம் வனம் ஆம்; நந்தன வனம் அல நறை விரி புறவம்.

80. கோகிலம் நவில்வன இளையவர் குதலைப் பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே கேகயம் நவில்வன; கிளர் இள வளையின் நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம்.

81. பழையர்தம் மனையன பழம் நறை நுகரும் உழவர்தம் மனையன உழுதொழில் புரியும் மழவர்தம் மனையன மண ஒலி இசையின் கிழவர்தம் மனையன கிளை பயில் வளை யாழ

82. கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்; பாதைகள் சொரிவன பரும் மணி கனகம்; ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்; காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்.

83. இடம் கொள் சாயல்கண்டு இளைஞர் சிந்தை போல், தடம் கொள் சோலைவாய் மலர் பெய் தாழ்குழல், வடம் கொள் பூண்முலை மடந்தைமாரொடும், தொடர்ந்து போவன; தோகை மஞ்ஞைகள்.

84. வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

85. எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் தள்ளும் நீர்மையில் தலை மயங்குமே.

86. உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப் பெயரும் பல் கதி பிறக்குமாறு போல் அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்த் தயிரும் வேரியும் தலை மயங்குமே.

87. கூறு பாடலும் குழலின் பாடலும் வேறு வேறு நின்று இசைக்கும் வீதி வாய் ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் எனச் சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

88. மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர் தாக்கில் தாக்குறும் பறையும் தண்ணுமை வீக்கி்த் தாக்குறும் விளியும் மள்ளர் தம் வாக்கில் தாக்குறும் ஒலியில் மாயுமே.

89. தாலி ஐம்படை தழுவும் மார்பு இடை மாலை வாய் அமுது ஒழுகும் மக்களைப் பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம் வால் நிலா உறக் குவிவ மானுமே.

90. பொற்பில் நின்றன பொலிவு; பொய் இலா நிற்பின் நின்றன நீதி; மாதரார் அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே.

91. சோலை மா நிலம் துருவி யாவரே வேலை கண்டு தாம் மீள வல்லவர்; சாலும் வார்புனல் சரயுவும் பல காலின் ஓடியும் கண்டது இல்லையே.

92. வீடு சேர நீர் வேலை கால் மடுத்து ஊடு பேரினும் உலைவு இலா நலம் கூடு கோசலம் என்னும் கோது இலா நாடு கூறினாம். நகரம் கூறுவாம்.

Previous          Next