இராவணன் வினவச் சேனை காப்பாளன் சொல்லத் தொடங்குதல் 6939. வைதனெக் கொல்லும் வில் கை மானிடர், மகர நீரை நொய்தினின் அடைத்து, மானத் தானையான் நுவன்ற நம் ஊர் எய்தினர் என்ற போதின், வேறு இனி எண்ண வேண்டும் செய்திறன் உண்டோ? என்ன, சேனை காப்பாளன் செப்பும். 1 சேனை காவலன் மறுமொழி (6940-6943) 6940. ‘விட்டனை மாதை என்ற போதினும், “வெருவி, வேந்தன் பட்டது ‘‘ என்று இகழ்வர் விண்ணோர்; பற்றி இப்பகையைத் தீர, ஒட்டல் ஆம் போரில் ஒன்னார் ஒட்டினும், உம்பி ஒட்டான்; கிட்டிய போது, செய்வது என்? இனிக் கிளத்தல் வேண்டும். 2 6941. ஆண்டு சென்று அரிகேளாடு மனிசரை அமரில் கொன்று மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேல் கொண்டோமேல், ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ? வேண்டியது எய்தப் பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ! 3 6942. ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானை ஐய! தேயினும் ஊழி நூறு வேண்டுமால்; சிறுமை என்னோ? நாயினம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் நீ உருத்து எழுந்த போது, குரங்கு எதிர் நிற்பது உண்டோ? 4 6943. வந்தவர், தானையோடு மறிந்து மாக் கடலில் வீழ்ந்து சிந்தினர் இரிந்து போகச் சேனையும் யானும் சென்று, வெம் தொழில் புரியும் ஆறு காணுதி; விடை ஈக என்னா, இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய்ந்த சொன்னான். 5 மாலியவான் அறிவுரை (6944-6954) 6944. மதி நெறி அறிவு சான்ற மாலியவான், “ நல் வாய்மை பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமை ‘என்னா, ‘விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், மீண்டு செது நெறி நிலையினாரே ‘ என்பது தரெியச் சொல்லும். 6 6945. “‘பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி வேலித் தேசத்துக்கு இறைவன் ஆன தசெரதன் சிறுவனாகி, மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் ஈசற்கும் ஈசன் வந்தான் ‘‘ என்பதோர் வார்த்தை இட்டார். 7 6946. அன்னவற்கு இளவல் தன்னை, “அருமறை, ‘பரம் ‘என்று ஓதும் நல்நிலை நின்று, தீர்ந்து, நவை இலா உயிர்கள் தோறும் தொல்நிலை பிரிந்தான் என்னப் பலவகை நின்ற தூயோன் இன் அணை ‘‘ என்ன யாரும் இயம்புவர்; ஏது யாதோ? 8 6947. “‘அவ்வவர்க்கு அமைந்த வில்லும், குலவரை அவற்றின் ஆன்ற வெவ் வலி வேறு வாங்கி, விரிஞ்சனே விதித்த, மேல் நாள்; செவ் வழி நாணும், சேடன்; தரெிகணை ஆகச் செய்த கவ்வு அயில், கால நேமிக் கணக்கையும் கடந்தது ‘‘ என்பார். 9 6948. “‘வாலி மா மகன் வந்தானை, “வானவர்க்கு இறைவன் “ என்றார்; நீலனை, ‘உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் “ என்றார்; காலனே ஒக்கும் தூதன் “காற்று எனும் கடவுள் “ என்றார்; மேலும் ஒன்று த்தார் : “அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்“ என்றார். 10 6949. “‘அப்பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் வேர் அறுப்பதாக இப்பதி எய்தினான் அவ் இராமன் ‘‘ என்று எவரும் சொன்னார்; ஒப்பினால் க்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ? செப்பி என்? “குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் ‘என்றார். 11 6950. ‘ஆயது தரெிந்தோர், தங்கள் அச்சமோ? அறிவோ? ‘யார்க்கும் சேயவள், ‘எளியள் ‘என்னா, சிந்தையின் இகழல் அம்மா! “தூயவள் அமிழ்தினோடும் தோன்றினாள், என்றும் தோன்றாத் தாய் அவள், உலகுக்கு எல்லாம் ‘‘ என்பதும், சாற்றுகின்றார். 12 6951. “‘கானிடை வந்ததேயும் வானவர் கடாவவேயாம்; மீன் உடை அகழி வேலை விலங்கல் மேல் இலங்கை வேந்தன் தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின் தலைவர் தாமே மானுட வடிவம் கொண்டார் ‘‘ என்பது ஓர் வார்த்தை இட்டார். 13 6952. “ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு உள அடுத்த “ என்றார்; “தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, தக்கோன் ஏயின தூதன் எற்ற, பற்று விட்டு, இலங்கைத் தயெ்வம் போயினது ‘‘ என்றும் சொன்னார்; ‘‘புகுந்தது போரும் ‘‘ என்றார். 14 6953. “‘அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் ‘என்ன, நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய் இலாதான், உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞானத் தம்பியே சாற்றிப் போனான் ‘‘ என்பதும் சமையச் சொன்னார். 15 6954. ‘ஈது எலாம் உணர்ந்தேன் ஆயும், என்குலம் இறுதி உற்றது ஆதியின் இவனால் என்றும், உன்தன் மேல் அன்பினாலும், வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன், சீதையை விடுதி ஆயின், தீரும் இத்தீமை ‘என்றான். 16 மாலியவான் மொழிகளை இராவணன் இகழ்ந்துரைத்தல் (6955-6960) 6955. ‘மற்று எலாம் நிற்க, வந்த மனிதர் வானரங்கள், வானில் இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை சொற்றவாறு அன்றியேயும், “தோற்றி நீ “ என்றும் சொன்னாய் கற்றவா நன்று போ ‘என்று, இனையன கழறல் உற்றான். 17 6956. ‘பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக, பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப்புறத்தது ஆக, காது வெஞ்செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும், சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ? 18 6957. ‘ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம் வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; “வெம்போர் முன்தருக ‘என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் சென்றன; இன்று வந்த குரங்கின்மேல் செல்கலாவோ? 19 6958. ‘சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும், ஓர் குரங்காய்த் தோன்றி ஏலுமேல், இடைவது அல்லால் என்செய வல்லன் என்னை? வேலை நீர் கடைந்த மேல் நாள் உலகு எலாம் வெருவ வந்த ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? அம்மா! 20 6959. ‘அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன எறி சுடர் நேமியான் வந்து ஏற்கிலும், என் கை வாளி, பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போக்கு இலாத மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண? 21 6960. ‘கொற்ற வாள் இமையோர் கோமான் குரங்கினது உருவம் கொண்டால், அற்றை நாள், அவன்தான் விட்ட அயில் படை அறுத்து மாற்ற, இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப் பொற்றை மால் வரைகேளா, என் புயநெடும் பொருப்பும்? என்றான். 22 இருள் நீங்குதல் 6961. உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப் புள் கவற்சி நீங்க, கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கொடிற்றில் கொண்ட வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே. 23 கதிரவன் தோன்றுதல் 6962. இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி, பொன்மதில் புறத்து நாளும் போகின்றான், ‘போர் மேற்கொண்டு மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால் ‘என்று, தானும் தொல் நகர் காண்பான் போல, கதிரவன் தோற்றம் செய்தான். 24 இராமன் தன் பரிவாரங்களுடன் சுவேலமலைமேல் ஏறுதல் 6963. ‘அருந்ததி அனைய நங்கை அவ் வழி இருந்தாள் ‘என்று பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர் காண்பான் போல, பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல, இருந்த மா மலையின் உச்சி ஏறினன் இராமன், இப்பால். 25 மலைமேல் ஏறிய இராமனது தோற்றப் பொலிவு (6964-6967) 6964. செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல, இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் கையான், பொரு வலி வய வெஞ்சீயம் யாவையும் புலியும் சுற்ற, அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி அரசு அனையன் ஆனான். 26 6965. கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனைகடல் உலகம் எல்லாம் புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் புரமும், பொற்பும், சிதைவு செய் குறியைக் காட்டி வடதிசைச் சிகரக் குன்றின், உதயம் அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு ஒத்தான். 27 6966. துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை சொரியத் தோன்றும் விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன், அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன, கமலத் திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான். 28 6967. மல் குவடு அனைய திண் தோள் மானவன், மானம் இல்லாக் கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த காட்சி நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான், பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக் குன்றம் போன்றான். 29 மலைமேல் நின்று இலங்கை நகரத்தினைக்கண்ட இராமன் அதன் எழில்மிக்க பலவகைக் காட்சிகளையும் இலக்குவனுக்கு எடுத்துரைத்தல் 6968. அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன், பிணை நெடுங் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த பின்னை, துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான், இணை நெடுங் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான். 30 இராமன் இலங்கையின் எழில்கண்டு இலக்குவனுக்குக் காட்டுதல் (6969-6985) 6969. ‘நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை, இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்; அந்தரம் உணர்தல் தேற்றார், அருங் கவிப் புலவர் அம்மா! 31 6970. பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடைப் பரிதி நாண முழுது எரி மணியின் செய்து முடிந்தன, முனைவராலும் எழுத அருந் தகைய ஆய மாளிகை, இயையச் செய்த தொழில் தரெிகிலவால், தங்கண் சுடர்மணிக் கற்றை சுற்ற. 32 6971. விரிகின்ற கதிர ஆகி, மிளிர்கின்ற மணிகள் வீச, சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும் தோற்றம், அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி மடுத்த தீயால் எரிகின்றது ஆயே காண், இக் கொடி நகர் இருந்தது இன்னும். 33 6972. ‘மாசு அடப் பரந்த மான மரகதத் தலத்து வைத்த காசு இடைச் சமைந்த மாடம், கதிர்த் தழைக் கற்றை சுற்ற ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல்மனை அன்னம் ஆக, பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்! 34 6973. தீச் சிகை சிவணுஞ் சோதிச் செம்மணி செறியச் செய்த தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை தோன்றா மீச் செலும் மேகம் எல்லாம், விரிசுடர் இலங்கை வேவ, காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, காணாய். 35 6974. வில் படி திரள் தோள் வீர! நோக்குதி வெங் கண் யானை அல் படி நிறத்த வேனும், ஆடகத் தலத்தை ஆழ, கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி, கையால் பொன் பொடி மெய்யின் வீசி, பொன் மலை என்னப் போவ. 36 6975. ‘பூசல் வில் குமர! நோக்காய் புகர் அற விளங்கும் பொற்பின் காசுடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவு கின்ற வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த மேக மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ போல்வ மாதோ! 37 6976. நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்திக் கோல் படு மனைகள் ஆய குலமணி எவையும் கூட்டி, சால் படுத்து அரக்கன் மாடத் தனி மணி நடுவண் சார்த்தி, மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இம் மூதூர். 38 6977. நல் நெறி அறிஞ! நோக்காய் நளி நெடுந் தரெுவின் நாப்பண் பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால் தம் நிறம் தரெிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத, இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி எல்லாம். 39 6978. ‘வீர! நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற; மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி சேர்தலும் தரெிவ; அன்றேல், தரெிகில; தரெிந்த காட்சி நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர. 40 6979. ‘கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! குளிர் வெண் திங்கள் கால் நிறக் கதிரின் கற்றை தறெ்றிய அனைய காட்சி வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த, பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, பாராய். 41 6980. ‘கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! கொள்ள நோக்காய் நாள் அவாம் மின்தோய் மாடத்து உம்பர், ஓர் நாகர் பாவை, காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில் கவ்வி வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம். 42 6981. ‘கொற்ற வான் சிலைக் கை வீர! கொடி மிடை மாடக் குன்றை உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது உம்பர்ச் செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்காரத்தின் கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ, காணாய்! 43 6982. ‘வாகை வெஞ் சிலைக்கை வீர! மலர்க்குழல் புலர்த்த, மாலைத் தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற, வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் போர்த்த தையல் பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்! 44 6983. ‘காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த, ஈவது தரெியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த பாவ பண்டாரம் அன்ன செய் குன்றம் பலவும் பாராய்! 45 6984. ‘பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட, பிடியுண்டு, அன்பின் துணைவரைப் பிரிந்து போந்து, மருங்கு எனத் துவளும் உள்ளப் பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர், பருவம் நோக்கும் கண மயில் குழுவின், நம்மைக் காண்கின்றார் தம்மைக் காணாய்! 46 6985. ‘நாழ் மலர்த் தரெியல் வீர! நம் படை காண, வானத்து யாழ் மொழித் தரெிவை மாரும் மைந்தரும் ஏறுகின்றார், ‘வாழ்வு இனிச் சமைந்தது அன்றே ‘ என்று மா நகரை எல்லாம் பாழ் படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்! 47 வானர சேனையைக் காண எண்ணி, இராவணன் கோபுரத்தின் மேல்நிலையை அடைத்தல் 6986. இன்னவாறு இலங்கை தன்னை இளையவற்கு இராமன் காட்டி, சொன்னவா சொல்லா வண்ணம் அதிசயம் தோன்றும் காலை, அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை காண்பான், சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான். 48  

Previous          Next