தூதுவர் இராவணனிடம் சொல்ல ஓடுதல் 9324. ஓத ரோதன வேலை கடந்துளார் பூதரோதரம் புக்கென போர்த்து இழி சீதரோதக் குருதித் திரை ஒரீஇ தூதர் ஓதவெங் காலின் துதைந்துளார். 1 தூதுவர் இராவணனை அடைதல் 9325. அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ ‘இன்று இலங்கை அழிந்தது ‘என்று ஏங்குவார் சென்று இலங்கு ஐயில் தாதையைச் சேர்ந்துளார். 2 தூதுவர் இராவணனிடம் இந்திரசித்து இறந்ததைத் தரெிவித்தல் 9326. பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார் ‘இல்லை ஆயினன்; உன்மகன் இன்று ‘எனச் சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார். 3 வானவர் முதலோர் ஓடி ஒளிதல் 9327. மாடு இருந்தவர் மாதவர் வானவர் ஆடல் நுண்ணிடையார் மற்றும் யாவரும் ‘வீடும் ‘இன்று இவ் உலகு ‘என விம்முவார். ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர். 4 சொன்ன தூதுவரை இராவணன் வாளால் வீசுதல் 9328. சுடர்க் கொழும்புகை தீவிழி தூண்டிட தடற்று வாள் உருவித் தரும் தூதரை மிடற்று வீசல் உறா விழுந்தான் அரோ கடல் பெருந்திரைபோல் கரம் சோரவே. 5 இராவணன் கண் தீ உகுத்தல் 9329. ‘வாய்ப் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் காய்ப்பு உறும் தறு கண்ணிடைக் காந்தியும் போய்ப் பிறந்து இவ் உலகைப் பொதியும்வெந் தீப் பிறந்துளது இன்று ‘எனச் செய்ததால். 6 9330. படம்பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து இடம்பிறங்கி வலம் பெயர்ந்து ஈடு அற உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து ஓங்கு தீ விடம் பிறந்த கடல் என வெம்பினான். 7 9331. திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும் பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட இருபது என்னும் எரிபுரை கண்களும்; உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர். 8 இராவணன் பற்களைக் கடித்துக்கொண்டு கைகளால் தரையை மோதல் 9332. கடித்த பற்குலம் கற்குலம் கண் அற இடித்த காலத்து உரும் என எங்கணும் அடித்த கைத் தலம் அம் மலை ஆழிநீர் வெடித்த வாய்தொறும் பொங்கின மீச்செல. 9 இராவணன் வாய்திறந்து அரற்றல் 9333. ‘மைந்தவோ! ‘எனும் : மாமகனே! ‘எனும்; ‘எந்தையோ! ‘எனும் ‘என் உயிரே! ‘எனும் ‘உந்தினேன் உனை யான் உளனே ‘எனும் வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான். 10 9334. ‘புரந்தரன் பகை போயிற்று அன்றோ! ‘எனும்; ‘அரந்தை வானவர் ஆர்த்தனரோ! ‘எனும்; ‘கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்; நிரந்தரம் பகை நீங்கினரோ! ‘எனும். 11 9335. நீறு பூசியும் நேமி அம் கையனும் மாறு குன்றொடு வேலை மறைந்துளார் ஊறு நீங்கினராய் உவணத்தினோடு ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால். 12 9336. ‘வான மானமும் வானவர் ஈட்டமும் போன போன திசை இடம்புக்கன தானம் ஆனவை சார்கில; சார்குவது ஊன மானிடர் வென்றி கொண்டோ? ‘எனும். 13 9337. ‘கெட்ட தூதர் கிளத்தினர் பொய்; ஒரு கட்ட மானிடன் கொல்ல என்காதலன் பட்டு ஒழிந்தனனே? ‘எனும்; பன்முறை விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால். 14 9338. எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய் விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால் உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 15 இராவணனுடைய ஒவ்வொரு தலையும் சொல்வன 9339. ‘அய்யனே! ‘எனும் ஓர்தலை; ‘யான் இனம் செய்வெனே அரசு! ‘என்னும் அங்கு ஓர்தலை; ‘கய்யனேன். உனைக் காட்டிக் கொடுத்து நான் உய்வெனே! ‘என்ன க்கும் அங்கு ஓர்தலை. 16 9340. ‘எழுவின் கோலம் எழுதிய தோள்களால் தழுவிக் கொள்ளலையோ ‘எனும் ஓர்தலை; ‘உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே! செழுவில் சேவகனே! ‘எனும் ஓர்தலை. 17 9341. ‘நீலம் காட்டிய கண்டனும் நேமியும் ஏலும் காட்டின் எறிந்த படை எலாம் தோலும் காட்டித் துரந்தனை மீண்டநின் கோலம் காட்டிலையோ! ‘எனும் ஓர் தலை. 18 9342. ‘துஞ்சினாய்கொல்? துணைபிரிந்தேன் ‘எனும்; ‘வஞ்சமோ; ‘ எனும்; ‘வாரலையோ! ‘எனும்; ‘நெஞ்சு நோவ நெடுந்தனியே கிடந்து அஞ்சினேன்! ‘என்று அரற்றும்; அங்கு ஓர்தலை. 19 9343. ‘காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ பாக சாதனன் மோலி பறித்திட ஓகை மாதவர் உச்சியின் வைத்தநின் வாகை நாள் மலர்? ‘என்னும்; மற்று ஓர்தலை. 20 9344. ‘சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார் மேல் இனித் தவிர்கிற்பர்கொல் வீர! நின் கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம் தாலியைத் தொடல்? ‘என்னும் மற்று ஓர்தலை. 21 9345. ‘கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம் தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய்! ‘என்று க்கும் அங்கு ஓர்தலை. 22 9346. இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழிநாள் பொன்னின் வான் அன்ன போர்க்களம் புக்கனன். நன் மகன் தனது ஆக்கையை நாடுவான். 23 தேவர் முதலிய சேவகர் பின் சென்று அஞ்சி இரங்குதல் 9347. தேவரே முதலாகிய சேவகர் யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் ‘மூவகைப் பேர் உலகின் முறைமையும் ஏவது ஆகும்? ‘என்று எண்ணி இரங்குவார். 26 இராவணனைக் கண்ட பறவைகளும் பேய்களும் பட்ட பாடு 9348. அழுதவால் சில; அன்பின போன்று அடி தொழுதவால் சில; தூங்கினவால் சில; உழுத ஆனைப் பிணம் புக்கு ஒளித்தவால் கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும். 25 இராவணன் பிணங்களைக் கிளறி மகனைத் தேடுதல் 9349. கோடி கோடிக் குதிரையின் கூட்டமும் ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும் ஓடை யானையும் தேரும் உருட்டினான் நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம். 26 இராவணன் இந்திரசித்தின் கையினைக் காணுதல் 9350. மெய் கிடந்த விழிவழி நீர் விழ நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் மொய்கிடந்த சிலையொடு மூரிமாக் கய்கிடந்தது கண்டனன் கண்களால். 27 இந்திரசித்தின் தோளை இராவணன் தலைமேற் கொள்ளுதல் 9351. பொங்கு தோள்வளையும் கணைப்புட்டிலும் அங்கதங்களும் அம்பும் இலங்கிட வெம் கண் நாகம் எனப் பொலி வெய்ய கை செங்கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான். 28 இராவணன் இந்திரசித்தின் கையோடு கவலுதல் 9352. கல்திண் மார்பில் தழுவும்; கழுத்தினில் சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுடர்க் கண்ணோடு ஒற்றும்; மோக்கும்; உருகும்; உளைக்குமால்; முற்றும் நாளில் விடும் நெடு மூச்சினான். 29 இந்திரசித்தின் உடம்பைக் கண்டு அதன் மேல் வீழ்ந்து அழுதல் 9353. கய்கண்டான் பின் கருங்கடல் கண்டு அன மெய்கண்டான் அதன்மேல் விழுந்தான் அரோ பெய்கண் தாரை அருவிப் பெருந்திரை மொய்கொண்டு ஆர்திரை வேலையை மூடவே. 30 இந்திரசித்தின் உடம்பைத் தழுவி யரற்றுதல் 9354. அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன் அப்பு மாரி அழுது இழி யாக்கையின் அப்பும்; மாரில் அணைக்கும் அரற்றுமால்; அப் புமான் உற்றது யாவர் உற்றார் அரோ! 31 அவன் மார்பில் தைத்துள்ள அம்புகளைப் பறித்து வெகுளல் 9355. பறிக்கும் மார்பின் பகழியை; பல்முறை முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்; எறிக்கும் வெங்கதிரோடு உலகு ஏழையும் கறிக்கும் வாயின் இட்டு இன்று எனக் காந்துவான். 32 இராவணனது பெருஞ் சீற்றத் தன்மை 9356. ‘தேவரோடும் முனிவு அருஞ் சீரியோர் ஏவரோடும் இயம்பிய மூர்த்திகள் மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும் போவதே கொல் முனிவு? ‘எனும்; பொம்மலான். 33 இந்திரசித்தின் தலையைக் காணாது இராவணன் அரற்றுதல் 9357. கண்டிலன் தலை; ‘காதிய மானிடன் கொண்டு இறந்தனன் ‘என்பது கொண்டவன் புண் திறந்தன நெஞ்சன் பொருமலன் விண் திறந்திட விம்மி அரற்றினான். 34 இராவணனது அரற்றல் (9357-9361) 9358. ‘நிலையும் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் கண்ணான் மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் மைந்தன் தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க, புலையெனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்! 35 9359. ‘எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை எல்லாம் பொரி உண; உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம்! அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை நரி உணக் கண்டேன், ஊணின் நாயுணும் உணவு நன்றால். 36 9360. ‘பூண்டு ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் போனார் மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும் ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க்களத்து, ஆரும் இன்னும் மாண்டிலர்; இனிமற்று உண்டோ, இராவணன் வீர வாழ்க்கை. 37 9361. ‘கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னிமார்கள், செந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் நல்லார், வந்து உற்று ‘எம் கணவன்தன்னைக் காட்டு ‘என்று, மருங்கில் வீழ்ந்தால், அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் கொண்டேன். 38 9362. ‘சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி, நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால், எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, உனக்கு நான் செய்வது ஆனேன்! என்னின் யார் உலகத்து உள்ளார். 39 இராவணன் இந்திரசித்தின் உடம்பினை யெடுத்துக்கொண்டு இலங்கைக்குள் புகுதல் 9363. என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து இரங்கி, ஏங்கி, அன்பினால் மகனைத் தாங்கி அரக்கியர் அரற்றி வீழ, பொன்புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் பூசல், ஒன்பது திக்கும், மற்றை ஒருதிக்கும், உற்றது அன்றே. 40 துயர்பொறுக்காத அரக்கர்களின் செயல்கள் 9364. கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் தடிகின்றாரும், புண்கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் போக்கு வாரும், பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும், எண்களில் பெரியர் அந்த இருந்துயர் பொறுக்கலாதார். 41 அரக்கியர் கண்ணீர் 9365. மாதிரம் கடந்த திண்தோள் மைந்தன் தன் மகுடச் சென்னி போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் கண்டார், ஓதநீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ளக் காதல் நீர் ஓடி, ஆடல் கருங்கடல் மடுத்தது அன்றே. 42 இராவணன் அரண்மனைக்குள் புகுதல் 9366. ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வராய தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின்மேல் தளிர்க்கை சேர்த்தி, ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக் கோ இயல் கோயில் புக்கான், குருதிநீர்க் குமிழிக் கண்ணான். 43 மண்டோதரி கலங்கி வருதல் 9367. கருங்குழல் கற்றைப் பாரம் கால்தொட, கமலப் பூவால் குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி, ‘அருங்கலச் சும்மை தாங்க, அகல் அல்குல் அன்றி, சற்றே மருங்குலும் உண்டு உண்டு ‘என்ன, மயன் மகள் மறுகி வந்தாள். 44 மண்டோதரி மகன்மேல் வீழ்தல் 9368. தலையின்மேல் சுமந்த கையள். தழலின்மேல் மிதிக்கின்றாள்போல் நிலையின்மேல் பதைக்கும் தாளள், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள, மலையின்மேல் மயில் வீழ்ந்து என்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 45 மண்டோதரியின் துன்பநிலை 9369. உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; ‘உயிர் இலள் கொல்லோ ‘என்னப் பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; பில்கி யாதும் வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல, அயர்த்திலள் அரிதின் தேறி, வாய்திறந்து, அரற்றல் உற்றாள். 46 மண்டோதரி இந்திரசித்தினை விளித்துப் புலம்புதல் (9369-9375) 9370. ‘கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே உன், சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவம்முன் செய்தேன்; தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! அந்தோ! ‘ நிலை இலா வாழ்வை இன்னும் நினைவெனோ, நினைவு இலாதேன்? 47 9371. ‘அய்யனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! ஆழிக் கய்யனே, மழுவனே, என்று அவர் வலி கடந்த கால மொய்யனே! முளரி அன்ன நின்முகம் கண்டிலாதேன், உய்வெனே? உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே! 48 9372. ‘தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில், கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து, கோபம் மூளுறப் பொருத்தி, மாட முன்றிலின் முறையின் ஓடி மீளுற விளையாட்டு இன்னும் காண்பெனோ, விதியிலாதேன்! 49 9373. ‘அம்புலி! அம்ம வா! ‘என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் இம்பர் வந்தானை ‘அஞ்சல் ‘ என இருகரத்தின் ஏந்தி வம்பு உறும் மறுவைப் பற்றி முயல் என வாங்கும் வண்ணம் எம் பெருங்களிறே! காண வேசற்றேன்; எழுந்திராயோ! 50 9374. ‘இயக்கியர் அரக்கி மார்கள் விஞ்சையர், ஏழை மாதர் முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் நின்னை மயக்கிய முயக்கம் தன்னால், மலர் அணை அமளி மீதே அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது அலசினாயோ? 51 9375. ‘முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும், புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம், மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? மான மேரு உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! 52 9376. ‘பஞ்சு எரி, உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல, விளிந்ததே மீண்டது இல்லை; அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமிழ்தால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? ‘ 53 இராவணன் சீதையை வாளால் வெட்ட விரைதல் 9377. என்று அழைத்து இரங்கி ஏங்க, ‘இத்துயர் நமர்கட்கு எல்லாம் பொன் தழைத்து அனைய அல்குல் சீதையால் புகுந்தது ‘என்ன ‘வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால் கொன்று இழைத்திடுவென் ‘என்னா, ஓடினன், அரக்கர் கோமான். 54 இராவணனை மகோதரன் தடுத்தல் 9378. ஓடுகின்றானை நோக்கி ‘உயர்பெரும் பழியை உச்சிச் சூடுகின்றான் ‘என்று அஞ்சி, மகோதரன், துணிந்த நெஞ்சன், மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, ‘நின் புகழ்க்கு மன்னா கேடு வந்து அடுத்தது ‘என்னா, இனையன கிளத்தலுற்றான். 55 மகோதரன் சொன்னது (9378-9382) 9379. ‘நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உள தனையும், நீண்ட பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், காலின் பேர் உளதனையும், பேராப் பெரும்பழி பிடித்தி போலாம் போர் உளதனையும் வென்று, புழ்க உளதனையும் உள்ளாய். 56 9380. ‘தெள்ளருங் கால கேயர் சிரத்தொடும், திசைக்கை யானை வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள்வாள், வள்ளி அம்மருங்குல், செவ்வாய், மாதர்மேல் வைத்தபோது கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது அல்லால்? 57 9381. ‘மங்கையை குலத்து உளாளை, தவத்தியை, முனிந்து, வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால். ‘குலத்துக்கே தக்கான் ‘, என்று கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத் தோனும், செங்கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால் ‘சிறியன் ‘என்னா. 58 9382. ‘நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி அன்று; தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல் அதுவும் அன்று; புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய விரதம் பூண்டாய்! வலத்து இயல்பு அன்று; மாயாப் பழிகொள மறுகு வாயோ? 59 9383. ‘இன்று நீ இவளை வாளால் எறிந்து போய், இராமன் தன்னை வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ பொன்றினள் சீதை என்றே? ‘புரவல! புதல்வன் தன்னைக் கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை போலும் ‘என்றான். 60 மகோதரன் சொல்லைக் கேட்டு இராவணன் வாளினைத் தரையிலிட்டு வஞ்சினங் கூறுதல் 9384. என்னலும் எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு, மீண்டு மன்னவன் ‘மைந்தன் தன்னை மாற்றலர் வலியிற் கொண்ட சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேரேன்; தொல் நெறித் தயிலத் தோணி வளர்த்துமின் ‘என்னச் சொன்னான். 61 தூதுவர் அரக்கர் சேனை வந்து நிறைந்ததைச் சொல்லுதல் 9385. அத்தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும் பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர், ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், ‘இலங்கை உன் ஊர்ப் பத்தியின் அமைந்த தானைக்கு இடம் இலை; பணி என்? என்றார். 1  

Previous          Next