தயரதன் மந்திராலோசனை மண்டபத்தை அடைதல்

1400. மண் உறும் முரசு இனம்
மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சினப்
பரும யானையான்,
கண் உறு கவரியின்
கற்றை சுற்று உற,
எண் உறு சூழ்ச்சியின்
இருக்கை எய்தினான்.
1

தயரதன் தனித்திருத்தல்

1401. புக்க பின் ‘நிருபரும் பொரு இல் சுற்றமும்
பக்கமும் பெயர்க ‘எனப் பரிவின் நீக்கினான்;
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான்.
2

வசிட்டன் முதலிய அமைச்சர்களை வரவழைத்தல்

1402. சந்திரற்கு உவமைசெய் தரள வெண் குடை
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை ‘வருக‘! என்று ஏவினான்.
3

வசிட்டன் வருகை

1403. பூ வரு பொலன் கழல் பொரு இல் மன்னவன்
காவலின் ஆணை செய் கடவுள் ஆம் எனத்
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான்.
4

அமைச்சர்களின் பெருமை (1404-1408)

1404. குலம் முதல் தொன்மையும்,
கலையின் குப்பையும்,
பல முதல் கேள்வியும்,
பயனும், எய்தினார்,
நலம் முதல் நலியினும்
நடுவு நோக்குவார்,
சலம் முதல் அறுத்து,
அரும் தருமம் தாங்கினார்.
5

1405. உற்றது கொண்டு மேல் வந்து
உறு பொருள் உணரும் கோளார்;
மற்று அது வினையின் வந்தது
ஆயினும், மாற்றல் ஆற்றும்
பெற்றியர்; பிறப்பின் மேன்மைப்
பெரியவர்; அரிய நூலும்
கற்றவர்; மானம் நோக்கின்
கவரிமா அனைய நீரார்.
6

1406. காலமும் இடனும் ஏற்ற
கருவியும் தரெிந்து கற்ற
நூலுற நோக்கித் தயெ்வம்
நுனித்து, அறம் குறித்து, மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும்
செய்கையும் தரெிந்துகொண்டு,
பால் வரும் உறுதி யாவும்
தலைவற்கு பயக்கும் நீரார்.
7

1407. தம் உயிர்க்கு உறுதி எண்ணார்,
தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி
விடாது நின்று க்கும் வீரர்;
செம்மையில் திறம்பல் செல்லாத்
தேற்றத்தார், தரெியும் காலம்
மும்மையும் உணர வல்லார்,
ஒருமையே மொழியும் நீரார்.
8

1408. நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்;
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியில்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்.
9

அமைச்சர்களின் வருகை (1409-1410)

1409. அறுபதின் ஆயிரர் எனினும்,
ஆண் தகைக்கு
உறுதியில், ஒன்று இவர்க்கு
உணர்வு என்று உன்னலாம்
பெறல் அரும் சூழ்ச்சியர்;
திருவின் பெட்பினர்;
மறி திரைக் கடல் என
வந்து சுற்றினார்.
10

1410. முறைமையின் எய்தினர் முந்தி அந்தம் இல்
அறிவனை வணங்கித் தம் அரசைக் கை தொழுது
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார்.
11

தயரதன் தன் கருத்தைக் கூறுதல் (1411-1429)

1411. அன்னவன் அருள் அமைந்து
இருந்த ஆண்டையின்,
மன்னவன் அவர் முகம்
மரபின் நோக்கினான்;
‘உன்னியது அரும் பெறல்
உறுதி ஒன்று உளது;
என் உணர்வு அனைய
நீர் இனிது கேட்க ‘எனா.
12

1412. ‘வெய்யவன் குலம் முதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐயிரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்.
13

1413. ‘கன்னியர்க்கு அமைவரும்
கற்பின், மாநிலம்
தன்னை இத்தகை தரத்
தருமம் கைதர,
மன் உயிர்க்கு உறுவதே
செய்து வைகினேன்,
என் உயிர்க்கு உறுவதும்
செய்ய எண்ணினேன். ‘
14

1414. ‘விரும்பிய மூப்பு எனும்
வீடு கண்ட யான்,
இரும் பியல் அனந்தனும்,
இசைந்த யானையும்,
பெரும் பெயர்க் கிரிகளும்,
பெயரத் தாங்கிய
அரும் பொறை இனிச் சிறிது
ஆற்ற ஆற்றலேன். ‘
15

1415. ‘நம் குலக் குரவர்கள்
நவையின் நீங்கினார்,
தம் குலப் புதல்வரே
தரணி தாங்கப் போய்,
வெம் குலப் புலன் கெட
வீடு நண்ணினார்,
எங்கு உலப்பு உறுவர்? என்று
எண்ணி நோக்குகேன். ‘
16

1416. ‘வெள்ள நீர் உலகினில்,
விண்ணில், நாகரில்,
தள் அரும் பகை எலாம்
தவிர்த்து நின்ற யான்,
கள்ளரில் கரந்து உறை
காமம் ஆதியாம்
உள் உறை பகைஞருக்கு
ஒதுங்கி வாழ்வெனோ? ‘
17

1417. ‘பஞ்சி மென் தளிர் அடிப்
பாவை கோல் கொள,
வெம் சினத்து அவுணர் தேர்
பத்தும் வென்று உளேற்கு,
எஞ்சல் இல் மனம்
எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது
அருமை ஆவதே? ‘
18

1418. ‘ஒட்டிய பகைஞர் வந்து
உருத்த போர் இடைப்
பட்டவர் அல்லரேல்,
பரம ஞானம் போய்த்
தடெ்டவர் அல்லரேல்,
செல்வம் ஈண்டென
விட்டவர் அல்லரேல்,
யாவர் வீடு உளார்? ‘
19

1419. ‘இறப்பு எனும் மெய்மையை
இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல்
கேடு மற்று உண்டோ?
துறப்பு எனும் தபெ்பமே
துணை செயாவிடின்
பிறப்பு எனும் பெரும் கடல்
பிழைக்கல் ஆகுமோ? ‘
20

1420. ‘அரும் சிறப்பு அமைவரும்
துறவும், அவ்வழித்
தரெிஞ்சு உறவு என மிகும்
தெளிவும், ஆய் வரும்
பெரும் சிறகு உள எனில்,
பிறவி என்னும் இவ்
இரும் சிறை கடத்தலின்
இனியது யாவதே?
21

1421. ‘இனியது போலும் இவ்
அரசை எண்ணுமோ
துனி வரும் நலன் எனத்
தொடர்ந்து? தோற்கலா
நனி வரு பெரும் பகை
நவையின் நீங்கி, அத்
தனி அரசாட்சியில்
தாழும் உள்ளமே? ‘
22

1422. ‘உம்மை யான் உடைமையின்
உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி நல்
அறமும் செய்தனென்;
இம்மையின் உதவி நல்
இசை நடாய நீர்,
அம்மையும் உதவுதற்கு
அமைய வேண்டுமால். ‘
23

1423. ‘இழைத்த தீ வினையையும்
கடக்க எண்ணுதல்,
தழைத்த பேர் அருள் உடை
தவத்தின் ஆகுமேல்,
குழைத்தது ஓர் அமுது உடைக்
கோரம் நீக்கி, வேறு
அழைத்த தீ விடத்தினை
அருந்தல் ஆகுமோ?
24

1424. ‘கச்சை அம் கட கரிக் கழுத்தின்கண் உறப்
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ?
25

1425. ‘மைந்தரை இன்மையின்
வரம்பு இல் காலமும்
நொந்தனென், இராமன் என்
நோவை நீக்குவான்
வந்தனன்; இனி அவன்
வருந்த, யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர்
உறுதி எண்ணினேன்.
26

1426. ‘இறந்திலன் செருக் களத்து
இராமன் தாதை தான்
அறம் தலை நிரம்ப மூப்பு
அடைந்த பின்னரும்
துறந்திலன் என்பது ஓர் சொல்
உண்டான பின்
பிறந்திலன் என்பதில்
பிறிது உண்டாகுமோ? ‘
27

1427. ‘பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திருமகள் மணவினை தரெியக் கண்ட யான்
அருமகன் நிறை குணத்து அவனிமாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்.
28

1428. ‘நிவப்பு உறு நிலன் எனும்
நிரம்பும் நங்கையும்,
சிவப்பு உறு மலர் மிசைச்
சிறந்த செல்வியும்,
உவப்பு உறு கணவனை
உயிரின் எய்திய
தவப் பயன் தாழ்ப்பது
தருமம் அன்று அரோ. ‘
29

1429. ‘ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குவான்
மா தவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன்;
யாது நும் கருத்து? ‘என இனைய கூறினான்.
30

மன்னன் மாற்றம் கேட்ட அமைச்சர் நிலை

1430. திரண்ட தோளினன் இப்படிச்
செப்பலும், சிந்தை
புரண்டு மீது இடப்
பொங்கிய உவகையர், ஆங்கே
வெருண்டு, மன்னவன் பிரிவு எனும்
விம்முறும் நிலையால்,
இரண்டு கன்றினுக்கு இரங்கும்
ஓர் ஆ என இருந்தார்.
31

மன்னன் கருத்திற்கு அமைச்சர் இசைதல்

1431. அன்னர் ஆயினும், அரசனுக்கு
அது அலது உறுதி
பின்னர் இல் எனக் கருதியும்,
பெரும் நில வரைப்பில்
மன்னும் மன் உயிர்க்கு இராமனின்
மன்னவர் இல்லை
என்ன உன்னியும், விதியது
வலியினும், இசைந்தார்.
32

வசிட்டன் மொழியத் தொடங்கல்

1432. இருந்த மந்திரக் கிழவரது
எண்ணமும், தன்பால்
பரிந்த சிந்தை அம் மன்னவன்
கருதிய பயனும்,
பொருந்தும் மன் உயிர்க்கு உறுதியும்,
பொது உற நோக்கித்
தரெிந்து, நால் மறைத் திசைமுகன்
திரு மகன் செப்பும்.
33

வசிட்டன் வாய்மொழி (1433-1439)

1433. ‘நிருப! நின் குல மன்னவர்
நேமி பண்டு உருட்டிப்
பெருமை எய்தினர் யாவரே
இராமனைப் பெற்றார்?
கருமமே இது; கற்று உணர்ந்தோய்க்கு
இனிக் கடவ
தருமமும் இது; தக்கதே
நினைத்தனை, தகவோய்! ‘
34

1434. ‘புண்ணியம் தொடர் வேள்விகள்
யாவையும் புரிந்த
அண்ணலே! இனி அருந்தவம்
இயற்றவும் அடுக்கும் ‘
வண்ண மேகலை நிலமகள்
மற்று உனைப் பிரிந்து
கண் இழந்திலள் எனச் செயும்,
நீ தந்த கழலோன். ‘
35

1435. ‘புறத்து நாம் ஒரு பொருள் இனிப்
புகல்கின்றது எவன் ஓ?
அறத்தின் மூர்த்தி வந்து
அவதரித்தான் என்பது அல்லால்,
பிறத்து யாவையும் காத்து அவை
பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருத்திய
திருத்தும் அத் திறலோன். ‘
36

1436. ‘பொன் உயிர்த்த பூ மடந்தையும்,
புவி எனும் திருவும்,
இன் உயிர்த் துணை இவன்
என நினைக்கின்ற இராமன்,
என் உயிர்க்கு என்கை புல்லிது;
இங்கு இவற் பயந்து எடுத்த
உன் உயிர்க்கு என நல்லன்,
மன் உயிர்க்கு எலாம்; உரவோய்! ‘
37

1437. “வாரம் என் இனிப் பகர்வது?
வைகலும் அனையான்
பேரினால் வரும் இடையுறு
பெயர்கின்ற பயத்தால்,
வீர! நின் குல மைந்தனை
வேதியர் முதலோர்
யாரும், ‘யாம் செய்த நல்
அறப் பயன் ‘என இருப்பார்.“
38

1438. “மண்ணினும் நல்லள்;
மலர் மகள், கலைமகள், கலையூர்
பெண்ணினும் நல்லள்;
பெரும் புகழ்ச் சனகி; பேர் உலகின்
கண்ணினும் நல்லன்;
கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும்,
உயிரினும், அவனையே உவப்பார்.‘‘
39

1439. “மனிதர் வானவர் மற்று உேளார்
அற்றம் காத்து அளிப்பார்,
இனி இம் மன் உயிர்க்கு
இராமனில் சிறந்தவர் இல்லை;
அனையது ஆதலின்,
அரச! நிற்கு உறு பொருள் அறியில்,
புனித மாதவம் அல்லது
ஒன்று இல்‘‘ எனப் புகன்றான்.
40

வசிட்டன் வாய்மொழியால் தயரதன் மகிழ்தல்

1440. மற்று அவன் சொன்ன
வாசகம் கேட்டலும், மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன்
பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும், எறி மழு
வாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியது ஓர்
உவகையன் ஆனான்.
41

மன்னன் வசிட்டனைப் பாராட்டுதல் (1441-1442)

1441. அனையது ஆகிய உவகையன்,
கண்கள் நீர் அரும்ப,
முனிவன் மா மலர்ப் பாதங்கள்
முறைமையின் இறைஞ்சி,
‘இனிய சொல்லினை; எம்பெருமான்
அருள் விழியின்
தனியன் நால் நிலம் தாங்கியது;
அவற்கு இது தகாதோ?‘
42

1442. ‘எந்தை நீ உவந்து இதம் சொல,
எம் குலத்து அரசர்,
அந்தம் இல் அரும் பெரும் புகழ்
அவனியில் நிறுவி,
முந்து வேள்வியும் முடித்துத் தம்
இரு வினை முடித்தார்;
வந்தது அவ் அருள் எனக்கும் ‘என்று
செய்து மகிழ்ந்தான்.
43

சுமந்திரன் சொல்லத் தொடங்குதல்

1443. பழுது இல் மாதவன் பின் ஒன்றும்
பணித்து இலன் இருந்தான்;
முழுதும் எண் உறும் மந்திரக்
கிழவர், தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம்,
இறை மகற்கு ஏறத்
தொழுத கையினன், சுமந்திரன்,
முன் நின்று சொல்லும்.
44

சுமந்திரன் கூற்று (1444-1445)

1444. “உறத் தகும் அரசு இராமற்கு என்று
உவக்கின்ற மனத்தைத்
துறத்தி நீ எனும் சொல் சுடும்;
நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை
மறப்பதும் வழக்கு அன்று;
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல்
ஆவது ஒன்று யாதே?‘‘
45

1445. “புரைசை மாக் கரி நிருபர்க்கும்,
புரத்து உறைவோர்க்கும்,
செய் மந்திரக் கிழவர்க்கும்,
முனிவர்க்கும், உள்ளம்
முரைசம் ஆர்ப்ப, நின்
முதல் மணிப் புதல்வனை முறையால்
அரைசன் ஆக்கிப் பின்
அப்புறத்து அடுத்தது புரிவாய்.‘‘
46

தயரதன் இராமனைக் கொண்டுவரச் சுமந்திரனை
அனுப்புதல்

1446. என்ற வாசகம் சுமந்திரன்
இயம்பலும், இறைவன்,
‘நன்று சொல்லினை; நம்பியை
நளி முடி சூட்டி
நின்று, நின்றது செய்வது;
விரைவினில் நீயே
சென்று, கொண்டு அணை திரு மகள்
கொழுநனை ‘என்றான்.
47

சுமந்திரன் இராமனை அடைதல்

1447. அலங்கல் மன்னனை அடி தொழுது,
அவன் மனம் அனையான்
விலங்கல் மாளிகை வீதியில்
விரைவொடு சென்றான்,
தலங்கள் யாவையும் பெற்றனன்
தான் எனத் தளிர்ப்பான்,
பொலன் கொள் தேரொடும்
இராகவன் திரு மனை புக்கான்.
48

சுமந்திரன் இராமனைக் காண்டல்

1448. பெண்ணின் இன் அமுது அன்னவள்
தன்னொடும், பிரியா
வண்ண வெம் சிலைக் குரிசிலும்
மருங்கு இனிது இருப்ப,
அண்ணல் ஆண்டு இருந்தான்
அழகு அரு நறவு என்னக்
கண்ணும் உள்ளமும் வண்டு எனக்
களிப்பு உறக் கண்டான்.
49

இராமன் தேர்மேல் கொள்ளல்

1449. கண்டு கை தொழுது “ஐய! இக்
கடல் இடைக் கிழவோன்
‘உண்டு ஒர் காரியம், வருக ‘என
த்தனன்“ எனலும்
புண்டரீகக் கண் புரவலன்
பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல் போல் அவன் கொடி நெடும்
தேர் மிசைக் கொண்டான்.
50

இராமன் தேரில் செல்லல்

1450. முறையின் மொய்ம் முகில் என
முரசு ஆர்த்திட, மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட,
இமையவர் ‘எங்கள்
குறை முடிந்தது ‘என்று ஆர்த்திடக்,
குஞ்சியைச் சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திடத்
தேர்மிசை நடந்தான்.
51

இராமனைக் கண்ட பெண்டிர் செயல்

1451. பணை நிரந்தன, பாட்டு ஒலி
நிரந்தன; அனங்கன்
கணை நிரந்தன; நாண் ஒலி
கறங்கின; நிறைப் பேர்
அணை நிரந்தன அறிவு எனும்
பெரும் புனல்; அனையார்
பிணை நிரந்து எனப்
பரந்தனர், நாணமும் பிரிந்தார்.
52

1452. நீள் எழுத் தொடர் வாயினும்
குழையொடும் நெகிழ்ந்த;
ஆளகத்தினொடு அரமியத்
தலத்தினும் அலர்ந்த;
வாள் அரத்தம் வேல்
வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரத்தினும் பூத்தன;
தாமரை மலர்கள்.
53

1453. மண் தலம்தரு மதி கெழு
மழை முகில் அனைய
அண்டர் நாயகன், வரை புரை
அகலத்துள் அலங்கல்,
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும்
நாணொடும் தொடர்ந்த
கெண்டையும் உள கிளை பயில்
வண்டொடும் கிடந்த.
54

1454. சரிந்த பூ உள, மழையொடு
கலை உறத் தாழ்வ;
பரிந்த பூ உள, பனிக் கடை
முத்து இனம் படைப்ப;
எரிந்த பூ உள, இள முலை
இழை இடை நுழைய,
விரிந்த பூ உள, மீன் உடை
வான் நின்றும் வீழ்வ.
55

1455. வள் உறை கழித்து ஒளிர்வன
வாள் நிமிர் மதியம்
தள்ளுறச் சுமந்து எழுதரும்
தமனியக் கொம்பில்,
புள்ளி நுண் பனி பொடிப்பன,
பொன் இடைப் பொதிந்த,
எள் உடைப் பொரி விரவின,
உள சில இளநீர்.
56

இராமன் தயரதன் பக்கல் சார்தல்

1456. ஆயது அவ்வழி நிகழ்தர,
ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என
நின்று உயிர் தளிர்ப்பத்
தூய தம்பியும், தானும், அச்
சுமந்திரன் தேர் மேல்
போய், அகம் குளிர் புரவலன்
இருந்துழிப் புக்கான்.
57

இராமனைத் தயரதன் தழுவுதல் (1457-1458)

1457. மா தவன் தனை வரன்முறை
வணங்கி, வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன்;
பணிதலும், அனையான்,
காதல் பொங்கிடக் கண் பனி
உகுத்திடக் கனி வாய்ச்
சீதை கொண்கனைத் திரு உறை
மார்பகம் சேர்த்தான்.
58

1458. நலம் கொள் மைந்தனைத்
தழுவினன் என்பது என்? நளி நீர்
நிலங்கள் தாங்குறும் நிலையினை
நிலையிட நினைந்தான்,
விலங்கல் அன்ன திண் தோளையும்,
மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது
தோள் மார்பு கொண்டு அளந்தான்.
59

தயரதன் இராமனை வேண்டுதல் (1459-1467)

1459. ஆண்டு தன் மருங்கு இரீஇ, உவந்து,
அன்பு உற நோக்கிப்
பூண்ட போர் மழு உடையவன்
நெடும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய! நின் பயந்து
எடுத்த யான் நின்னை
வேண்டி எய்திட விரைவது
ஒன்று உளது ‘என விளம்பும்.
60

1460. ‘ஐய! சாலவும் அலசினென்;
அரும் பெரும் மூப்பும்
மெய்யது ஆயது; பியல் இடம்
பெரும் பரம் விசித்த
தொய்யல் மாநிலச் சுமை உறு
சிறை துறந்து, இனி, யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக
உதவிட வேண்டும்.
61

1461. உரிமை மைந்தரைப் பெறுகின்றது
உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது,
பெரியவர் இயற்கை;
தருமம் அன்ன நின் தந்த யான்,
தளர்வது தகவோ?
கருமம் என் வயின் செய்யில்,
என் கட்டுரை கோடி. ‘
62

1462. ‘மைந்த! நம் குல மரபினில்
மணி முடி வேந்தர்,
தம் தம் மக்களே கடைமுறை
நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு ஆகிய முப்பகை
மருங்கு அற அகற்றி,
உய்ந்து போயினர்; ஊழி நின்று
எண்ணினும் உலவார். ‘
63

1463. ‘முன்னை ஊழ்வினைப் பயத்தினும்,
முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும்,
அரிதின் நிற் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல்
இடும்பையன் என்றால்,
நின்னை ஈன்று உள பயத்தினில்
நிரம்புவ து யாதோ? ‘
64

1464. ‘ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப்
பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று இயல்வரக்
குழைந்து இடர் உழக்கும்
வருத்தம்நீங்கி, அவ் வரம்பு
அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு, எனக்கு;
ஐய! ஈது அருளிட வேண்டும். ‘
65

1465. ‘ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
அமைதி இன்று ஆக,
நாளும் நம் குல நாயகன்
நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத்
தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு ஏற்றினான்,
ஒரு மகன் மேல் நாள். ‘
66

1466. ‘மன்னர் ஆனவர் அல்லர்,
மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல் புரந்தரன்
போலியர் அல்லர்,
பின்னும் மா தவம் தொடங்கி
நோன்பு இழைத்தவர் அல்லர்,
சொல் மறா மகப் பெற்றவர்
அரும் துயர் துறந்தார். ‘
67

1467. அனையது ஆதலின், அரும் துயர்ப்
பெரும் பரம் அரசன்
வினையின் என்வயின் வைத்தனன்
எனக் கொளவேண்டா;
புனையும் மா முடி புனைந்து
இந்த நல் அறம் புரக்க
நினையல்வேண்டும்; யான் நின்
வயின் பெறுவது ஈது ‘என்றான்.
68

தந்தை பணியை மைந்தன் உடன்படல்

1468. தாதை அப் பரிசு செயத்
தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்;
கடன் இது என்று உணர்ந்தும்,
‘யாது கொற்றவன் ஏவியது
அது செயல் அன்றோ
நீதி எற்கு? ‘என நினைந்தும்,
அப் பணி தலை நின்றான்.
69

தயரதன் தன் கோயில் செல்லுதல்

1469. குருசில் சிந்தையை மனம் கொண்ட
கொற்ற வெண் குடையான்,
‘தருதி இவ் வரம் ‘எனச் சொலி,
உயிர் உறத் தழுவிச்
சுருதி அன்ன தன் மந்திரச்
சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும் பொரு அரும்
கோயில் போய்ப் புக்கான்.
70

இராமன் தன் கோயிலுக்குச் செல்லுதல்

1470. நிவந்த அந்தணர், நெடுந்தகை
மன்னவர், நகரத்து
உவந்த மைந்தர்கள், மடந்தையர்,
உழையர் பின் தொடரச்
சுமந்திரன் தடம் தேர் மிசைச்
சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனும், தன் நெடும்
கோயில் சென்று அடைந்தான்.
71

தயரதன் வேந்தர்க்கு ஓலை போக்கிய பின்
வசிட்டனை முடி புனைதற்கு வேண்டுவ அமைக்க எனல்

1471. வென்றி வேந்தரை ‘வருக ‘என்று,
உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்
பெறல் இலச்சினை போக்கி,
‘நன்று சித்திர நளி முடி
கவித்தற்கு, நல்லோய்!
சென்று வேண்டுவ வரன் முறை
அமைக்க ‘எனச் செப்ப.
72

இராமனுக்கு முடி புனைதலை மன்னவர்க்குத் தயரதன் கூறல்

1472. உரிய மா தவன், ‘ஒள்ளிது ‘என்று
உவந்தனன், விரைந்து, ஓர்
பொருவு இல் தேர்மிசை
அந்தணர் குழாத்தொடும் போக,
‘நிருபர்! கேண்மின்கள்; இராமற்கு
நெறி முறைமையினால்
திருவும், பூமியும், சீதையில்
சிறந்தன ‘என்றான்.
73

தயரதன் மொழிகேட்டு நிருபர்கள் மகிழ்தல்

1473. இறைவன் சொல் எனும்
இன் நறவு அருந்தினர் யாரும்
முறையின் நின்றிலர்,
முந்து உறு களி இடை மூழ்கி,
நிறையும் நெஞ்சு இடை
உவகை போய் மயிர் வழி நிமிர,
உறையும் விண் அகம்
உடலொடும் எய்தினர் ஒத்தார்.
74

மன்னவர் மகிழ்ச்சியால் தயரதனுக்குக் கூறுதல் (1474-1475)

1474. ஒத்த சிந்தையர், உவகையர்,
ஒருவரின் ஒருவர்,
தம் தமக்கு உற்ற அரசு எனத்
தழைக்கின்ற மனத்தார்,
முத்த வெண் குடை மன்னனை
முறை முறை தொழுதார்,
‘அத்த! நன்று ‘என அன்பினோடு
அறிவிப்பது ஆனார்.
75

1475. “மூவெழு முறைமை எம் குலங்கள் முற்று உறப்
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவது இவ் உலகம்; ஈது அறன்;“ என்றார் அரோ.
76

தயரதன் மீண்டும் கூறத் தொடங்குதல்

1476. வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது
கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன்
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்
மாறும் ஓர் அளவைசால் வாய்மை கூறினான்.
77

மன்னர் கருத்துணரத் தயரதன் வினாதல்

1477. ‘மகன் வயின் அன்பினால்
மயங்கி யான் இது
புகல, நீர் புகன்ற இப்
பொம்மல் வாசகம்,
உகவையின் மொழிந்ததோ?
உள்ளம் நோக்கியோ?
தகவு என நினைந்ததோ?
தன்மை என்? ‘என்றான்.
78

இராமனிடம் மக்கள் செய்யும் அன்பினை மன்னர்
கூறல் (1478-1481)

1478. இவ்வகை செய இருந்த வேந்தர்கள்
‘செவ்விய நின் திரு மகற்குத் தேயத்தோர்
அவ் அவர்க்கு அவ் அவர் ஆற்ற ஆற்றுறும்
எவ்வம் இல் அன்பினை இனிது கேள் ‘எனா.
79

1479. ‘தானமும் தருமமும் தவமும் தன்மை சேர்
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும்
மானவ! வையம் நின் மகற்கு வைகலும்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே.
80

1480. ‘ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் நுகர் பழுமரம் பழுத்தது ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?
81

1481. ‘பனைஅவாம் நெடும் கரப்
பரும யானையாய்!
நினை அவாம் தன்மையை
நினைந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன்,
ஈண்டு அவற்கு,
அனையவாறு அன்பின
அவையும் ‘என்றனர்.
82

மன்னர் சொல் கேட்டுத் தயரதன் மகிழ்தல்

1482. மொழிந்தது கேட்டலும்
மொய்த்து நெஞ்சினைப்
பொழிந்த பேர் உவகையான்,
பொங்கு காதலான்,
கழிந்தது ஓர் இடரினான்,
களிக்கும் சிந்தையான்,
வழிந்த கண் நீரினான்,
மன்னன் கூறுவான்.
83

தயரதன் இராமனை மன்னவர் கையடையாக்கல்

1483. “செம்மையில், தருமத்தில்,
செயலில், தீங்கின்பால்
வெம்மையில் ஒழுக்கத்தில்
மெய்ம்மை மேவினீர்!
என் மகன் என்பது என்?
நெறியின் ஈங்கு இவன்
நும் மகன்; கையடை
நோக்கும் ஊங்கு‘‘ என்றான்.
84

தயரதன் இராமனுக்கு முடி புனைநாள் பார்க்கப் போதல்

1484. அரசரை விடுத்தபின் ஆணை மன்னவன்
புரை தபு நாெளாடு பொழுதும் நோக்குவான்
தரெி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டப மருங்கு போயினான்.
85

கோசலையின் பணிப்பெண்கள் சிலர் மகிழ்தல்

1485. ஆண்டு அவன் நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர்
ஈண்ட ஓடினர் இட்டிடை இற்றிலர்.
86

அம்மங்கையர் கோசலையை அடைதல் கோசலை வினாதல்

1486. ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர் சொல்லுவது ஓர்கிலார்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே.
87

கோசலை வினாதல்

1487. கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை
‘உண்டு பேர் உவகைப் பொருள் : அன்னது
தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு‘ என்றாள்.
88

இராமன் முடிசூடுதலைத் தரெிவித்தல்

1488. “‘மன் நெடும் கழல் வந்து வணங்கிடப்
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என
நின் நெடும் புதல்வன்தனை நேமியான்
தொல் நெடு முடி சூட்டுகின்றான்“ என்றார்.
89

கோசலை மகிழ்வும் நடுக்கமும் அடைதல்

1489. ‘சிறக்கும் செல்வம் மகற்கு ‘எனச் சிந்தையில்
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.
90

கோசலை திருமால் கோயிலுக்குச் செல்லுதல்

1490. அன்னள் ஆயும் அரும் பெறல் ஆரமும்
நல் நிதிக் குவையும் நனி நல்கித் தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய்
மின்னும் நேமியன் மேவு இடம் மேவினாள்.
91

கோசலை திருமாலை வணங்கல்

1491. மேவி மெல் மலராள் நிலம் மாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும் அறிவும் முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள்.
92

கோசலை, இறைவனை வேண்டல்

1492. ‘என் வயிற்று அரு மைந்தற்கு இனி அருள்
உன் வயிற்றது ‘என்றாள் உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள்.
93

கோசலை கோதானம் புரிதல்

1493. என்று இறைஞ்சி அவ் இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நால் மறை ஓதிய பூசனை
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம்
கன்று உடைப் பசுவின் கடல் நல்கினாள்.
94

கோசலை அன்ன தானம் முதலியன செய்தல்

1494. பொன்னும் மா மணியும் புனை சாந்தமும்
கன்னிமாரொடு காசினி ஈட்டமும்
இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு
அன்ன தானமும் ஆடையும் நல்கினாள்.
95

கோசலை நோன்பிருத்தல்

1495. நல்கி நாயகன் நாள் மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி வணங்கிப் புரை இலா
மல்லல் மாளிகைக் கோயில் வலம் கொளாத்
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள்.
96

 

Previous          Next