கைகேயி அலங்காரத்தை அழித்தல் (1580-1583)

1580. கூனி போனபின், குல மலர்க்
குப்பை நின்று இழிந்தாள்;
சோனை வார் குழல் கற்றையில்
சொருகிய மாலை,
வான வார் மழை நுழைதரு
மதி பிதிர்ப்பாள் போல்,
தேன் அவாவுறு வண்டினம்
அலமரச், சிதைத்தாள்
1

1581. விளையும் தன் புகழ் வல்லியை
வேர் அறுத்து என்ன,
கிளை கொள் மேகலை சிந்தினள்;
கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில்
மறுத் துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல்
திலதமும் அழித்தாள்.
2

1582. தா இல் மா மணிக் கலன்
மற்றும் தனித் தனி சிதறி,
நாவி நன் குழல் நால் நிலம்
தைவரப் பரப்பிக்,
காவி உண் கண்கள் அஞ்சனம்
கான்றிடக் கலுழாப்,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப்,
புவி மிசைப் புரண்டாள்.
3

1583. நவ்வி வீழ்ந்து என,
நாடக மயில் துயின்று என்னக்,
கவ்வை கூர்தரச், சனகியாம்
கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி
வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் எனக், கிடந்தனள்,
கேகயன் தனயை.
4

தயரதன் கைகேயியின் மனைக்குப் போதல்

1584. நாழிகை கங்குலின்
நள் அடைந்த பின்றை,
யாழ் இசை அஞ்சிய
அம் சொல் ஏழை கோயில்,
‘வாழிய! ‘என்று அயில்
மன்னர் துன்ன, வந்தான்
ஆழி நெடுங்கை மடங்கல்
ஆளி அன்னான்.
5

தயரதன் கைகேயியை அடைதல

1585. வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகிப்,
பாயல் துறந்த படைத் தடம் கண் மென் தோள்
ஆயிழை தன்னை அடைந்த ஆழி மன்னன்
6

்தயரதன் கைகேயியை எடுத்தல்

1586. அடைந்து, அவள் நோக்கி,
‘அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது? ‘எனத் துயர்கொண்டு
சோரும் நெஞ்சன்,
மடந்தையை மானை எடுக்கும்
ஆனையே போல்
தடம் கைகள் கொண்டு
தழீஇ, எடுக்கல் உற்றான்.
7

கைகேயி பேசாது நெட்டுயிர்த்தல்

1587. நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கல் உற்றாள்
மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி அன்னாள்.
8

தயரதன் நிகழ்ந்ததை வினாதல்

1588. அன்னது கண்ட அலங்கல் மன்னன்,
அஞ்சி,
“என்னை நிகழ்ந்தது? இஞ் ஞாலம்
ஏழில் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்!
உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி!
சொல்லிடு!“ என்றான்.
9

கைகேயி வரம் கேட்டல்

1589. வண்டு உளர் தாரவன்
வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி
கொங்கை கோப்ப,
‘உண்டு கொலாம் அருள் என் கண்?
உன் கண் ஒக்கில்
பண்டைய இன்று பரிந்து
அளித்தி ‘என்றாள்.
10

தயரதன் தருவேன் எனல்

1590. கள் அவிழ் கோதை
கருத்து உணராத மன்னன்,
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின்
மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்து அது செய்வென்;
ஒன்று உலோவேன்;
வள்ளல் இராமன் உன்
மைந்தன் ஆணை! ‘என்றான்.
11

இரண்டு வரங்களையும் ஈக எனல்

1591. ஆன்றவன் அவ் கூற,
ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம்
துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர் குலம் ஆக,
மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும்
ஈதி! ‘என்றாள்.
12

இப்பொழுதே ஈவேன் எனல்

1592. ‘வரம் கொள இத்துணை
மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை;
ஈவன்; என் பால்
பரம் கெட இ பொழுது ஏ;
பகர்ந்திடு! ‘என்றான்;
உரம் கொள் மனத்தவள்
வஞ்சம் ஓர்கிலாதான்.
13

கேட்ட வரம் இவையெனல்

1593. ‘ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.
14

அது கேட்ட தயரதன் நிலை (1594-1598)

1594. நாகம் எனும் கொடியாள் தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.
15

1595. பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்.
16

1596. உலர்ந்தது நா; உயிர் ஓடல்
உற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த
பொங்கு சோரி;
சலம் தலை மிக்கது – ‘தக்கது
என்கொல்? என்று என்று
அலந்து, அலையுற்ற
அரும் புலன்கள் ஐந்தும்.
17

1597. மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;
ஆவி பதைப்ப அலக்கண் எய்துகின்றான்.
18

1598. பெண் என உற்ற பெரும்
பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
உயிர்த்து உலாவும்;
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்;
வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும்
ஆனை போல்வான்.
19

கைகேயி மனம் மாறாமை (1599-1600)

1599. கம்ப நெடுங் களி யானை
அன்ன மன்னன்,
வெம்பி விழுந்து அழும்
விம்மல் கண்டு வெய்து உற்று,
உம்பர் நடுங்கினர்;
ஊழி பேர்வது ஒத்தது;
அம்பன கண்ணவள் உள்ளம்
அன்னதேயால்.
20

1600. அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால்;
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர்.
21

தயரதன் மீட்டும் வினாதல்

1601. இந்நிலை நின்றவள் தன்னை
எய்த நோக்கி
நெய்ந் நிலை வேலவன்,
‘நீ திசைத்தது உண்டோ?
பொய்ந்நிலையோர்கள்
புணர்த்த வஞ்சம் உண்டோ?
அந்நிலை சொல் எனது
ஆணை உண்மை ‘என்றான்.
22

கைகேயியின் மறுமாற்றம்

1602. ‘திசைத்ததும் இல்லை; எனக்கு
வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த
இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின் இன்று
கொள்வென்; அன்றேல்,
வசைத் திறம் நின் வயின்
வைத்து மாள்வென் ‘என்றாள்.
23

தயரதன் வருந்தல் (1603-1607)

1603. இந்த நெடும் சொல் அவ்
ஏழை கூறும் முன்னே,
வெந்த கொடும் புணில்
வேல் நுழைந்தது ஒப்பச்,
சிந்தை திரிந்து, திகைத்து,
அயர்ந்து வீழ்ந்தான்,
மைந்தன் அலாது உயிர்
வேறு இலாத மன்னன்.
24

1604. ‘ஆ! கொடியாய்! ‘எனும்;
ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ! கொடிதே அறம்! ‘என்னும்;
‘உண்மை ஒன்றும்
சாக! ‘எனா எழும்;
மெய் தளாடி வீழும்;
மாகமும் நாகமும் மண்ணும்
வென்ற வாளான்.
25

1605. ‘நாரியர் இல்லை இஞ்
ஞாலம் ஏழும் என்னக்
கூரிய வாள் கொடு
கொன்று நீக்கி யானும்
பூரியர் எண் இடை
வீழ்வன் ‘என்று பொங்கும்;
வீரியர் வீரம் விழுங்கி
நின்ற வேலான்.
26

1606. கையொடு கையைப் புடைக்கும்;
வாய் கடிக்கும்;
‘மெய் குற்றம் ‘எனப்
புழுங்கி விம்மும்,
நெய் எரி உற்றென
நெஞ்சு அழிந்து சோரும்;
வையகம் முற்றும் நடந்த
வாய்மை மன்னன்.
27

1607. ‘ஒறுப்பினும் அந்தரம்;
உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம் ‘
என்று வாய்மை மன்னன்,
‘பொறுப்பினும் அந்நிலை
போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது
இரப்பது ‘என்று எழுந்தான்.
28

தயரதன் கைகேயியின் காலில் வீழ்தல்

1608. கோல் மேல் கொண்டும்
குற்றம் அகற்றக் குறி கொண்டார்
போல், மேல் உற்றது உண்டு எனின்
நன்று ஆம் பொறை என்னாக்,
கால் மேல் வீழ்ந்தான்,
கந்து கொல் யானைக் களி மன்னர்,
மேல் மேல் வந்து முந்தி
வணங்க மிடைதாளான்.
29

தயரதன் வேண்டுகோள் (1609-1612)

1609. ‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு;
அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நால் நிலம்;
ஞாலம் தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத
உவக்கும் புகழ் கொள்ளாய்,
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு
என் பயன்? ‘என்றான்.
30

1610. ‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்;
இனி மற்று என்
ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ்
அரசு ஆள்வாய்?
யானே சொல்லக் கொள்ள இசைந்தான்,
முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும்
தரை ‘என்றான்.
31

1611. ‘கண்ணே வேண்டும் என்னினும்
ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும்
இன்றே உனது அன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!
பெறுவாயேல்
மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
மற ‘என்றான்.
32

1612. ‘வாய் தந்தேன் என்றேன்;
இனி, யான் ஓ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை
நோவன செய்து நுவலாதே;
தாய் தந்து என்னத்
தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்து ஈயும்;
நீ இது தந்தால் பிழை ஆமோ?
33

கைகேயி மறுமொழி

1613. இன்னே இன்னே பன்னி
இரந்தான் இகல் வேந்தன்;
தன் நேர் இல்லாத் தீயவள்
உள்ளம் தடுமாறாள்
‘முன்னே தந்தாய், இவ் வரம்
நல்காய் முனிவாயேல்,
என்னே மன்னா! யார் உளர்
வாய்மைக்கு இனி? ‘என்றாள்.
34

மறுமொழி கேட்ட மன்னன் கூறல் (1614-1616)

1614. அச்சொல் கேளா ஆவி புழுங்கா
அயர்கின்றான்
பொய்ச் சொல் பேணா வாய் மொழி
மன்னன் பொறை கூர
‘நச்சுத் தீயே, பெண் உரு அன்றாம் ‘
என நாணா
முச்சு அற்றார் போல் பின்னும்
இருந்தே மொழிகின்றான்.
35

1615. ‘நின் மகன் ஆள்வான்;
நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே; ஆளுதி;
தந்தேன்; குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர்,
எல்லா உயிர்கட்கும்
நல் மகன், இந்த நாடு இறவாமை
அய! ‘என்றான்.
36

1616. ‘மெய்யே என் தன் வேர் அற நூறும்
வினை நோக்கி,
நையா நின்றேன்; ‘நாவும் உலர்ந்தேன்;
நளினம்போல்
கையான் இன்று என் கண் எதிர் நின்றும்
கழிவானேல்
உய்யேன்; நங்காய்! உன் அபயம்
என் உயிர் ‘என்றான்.
37

கைகேயியின் மறுமொழி

1617. இரந்தான் சொல்லும் இன்
கொள்ளாள்; முனிவு எஞ்சாள்;
மரம் தான் என்னும் நெஞ்சினள்,
நாணாள்; வசை பாராள்;
“சரம் தாழ் வில்லாய்! தந்த
வரத்தைத் தவிர்க என்றல்
உரம் தான் அல்லால், நல் அறம்
ஆமோ? ‘‘ என்றாள்.
38

தயரதன் துன்பச்சொல் (1618-1624)

1618. கொடியாள் இன்ன கூறினள்;
கூறக் குல வேந்தன்,
‘முடி சூடாமல் காத்தலும்
மொய் கான் இடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும்
என் ஆவி இனி ‘என்னா,
இடி ஏறு உண்ட மால் வரை போல்
மண் இடை வீழ்ந்தான்.
39

1619. வீழ்ந்தான்; வீழா வெம் துயரத்தின்
கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா அக்கடலுக்கு
ஓர் கரை காணான்,
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள்,
சொல் கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை
நோக்கிப் புலர்கின்றான்.
40

1620. ‘ஒன்றா நின்ற ஆர் உயிரோடும்
உயிர் கேள்வர்
பொன்ற முன்னம் பொன்றினர்;
என்னும் புகழ் அல்லால்,
இன்று ஓர் காறும் எல் வளையார்,
தம் இறையோரைக்
கொன்றார் இல்லை; கொல்லுதியோ
நீ கொடியோளே! ‘
41

1621. ‘ஏவம் பாராய்; இன முறை
நோக்காய்; அறம் எண்ணாய்;
ஆ! னுன்பாயோ அல்லை;
மனத்தால் அருள் கொன்றாய்;
நா அம்பால் என் ஆர் உயிர்
உண்டாய்; இனி, ஞாலம்
பாவம் பாராது இன் உயிர்
கொள்ளப்படுகின்றாய்! ‘
42

1622. ‘ஏண்பால் ஓவா நாண் மடம்
அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர்
நல்லார், புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர்
தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே பெண்பாலாரோடு
அடைவு; அம்மா! ‘
43

1623. ‘மண் ஆள்கின்றார் ஆகி,
வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும்
எல்லா இகலாலும்
விண்ணோர் காறும் வென்ற
எனக்கு, என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம்;
என்னப் பெறுவேனோ? ‘
44

1624. என்று என்று உன்னும்; பன்னி
இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று, இன்று! ‘என்னும் வண்ணம்
மயங்கும்; இடியும்; பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது
என்னக் குவி தோளான்.
45

கைகேயி கூற்று (1625-1626)

1625. ஆழிப் பொன் தேர் மன்னவன்
இவ்வாறு அயர்வு எய்திப்
பூழிப் பொன் தோள் முற்றும்
அடங்கப் புரள் போழ்தில்,
“ஊழில் பொய்த்தால் என்
இன்றே உயிர் மாய்வென்;
பாழிப் பொன் தார் மன்னவ! ‘‘
என்றாள்; பசையற்றாள்.
46

1626. ‘அரிந்தான் முன் ஓர் மன்னவன்
அன்றே அருமேனி?
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை
வளர்ப்பான்; வரம் நல்கிப்
பரிந்தால் என் ஆம்? ‘என்றனள்;
பாயும் கனலே போல்
எரிந்து ஆறாதே இன் உயிர்
உண்ணும் எரி அன்னாள்.
47

தயரதன் தந்தேன் எனல்

1627. வீந்தாளே இவ் வெய்யவள்
என்னா மிடல் வேந்தன்,
‘ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம்;
என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
ஆள்வென், வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும்
நெடிது; ‘ என்றான்.
48

தயரதன் செயலறுதலும் கைகேயி துயிலுறுதலும்

1628. கூறாமுன்னம், கூறுபடுக்கும்
கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர்
ஆகத்திடை மூழ்கத்
தேறான் ஆகிச் செய்கை மறந்தான்;
செயல் முற்றி
ஊறாநின்ற சிந்தையினாளும்
துயில்வு உற்றாள்.
49

கங்குலின் கழிவு

1629. சேண் உலாவிய நாள் எலாம்
உயிர் ஒன்று போல்வன செய்து, பின்
ஏண் உலாவிய தோளினான்
இடர் எய்த ஒன்றும் இரங்கிலா,
வாள் நிலா நகை மாதராள்
செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள்
நளிர் கங்குல் ஆகிய நங்கையே.
50

கோழி கூவுதல்

1630. எண் தரும் கடை சென்ற யாமம்
இயம்புகின்றன ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
மயங்கி விம்மிய ஆறு எலாம்
கண்டு, நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன
காமர் துணைக் கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி
விளிப்ப போன்றன கோழியே.
51

பறவைகளின் ஒலி

1631. தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை
துள்ளி மீது எழும்புள் எலாம்,
தேய்கை ஒத்த மருங்குல் மாதர்
சிலம்பின் நின்று சிலம்புவ,
கேகயத்து அரசன் பயந்த விடத்தை
இன்னது ஒர் கேடு சூழ்
மா கயத்தியை உள் கொதித்து
மனத்து வைவன போன்றவே.
52

யானைகள் துயிலெழல்

1632. சேமம் என்பன பற்றி, அன்பு
திருந்த இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையோடு
வனத்துள், யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும் ‘என்று
நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம்மண் இறத்தும் ‘என்பன
போல் எழுந்தன யானையே.
53

விண்மீன் மறைதல்

1633. சிரித்த பங்கயம் ஒத்த செங்கண்
இராமனைத் திருமாலை, அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து,
உயர் காப்பு நாண் அணிதற்குமுன்,
வரித்த தண் கதிர் முத்து அது ஆகி,
இம் மண் அனைத்தும் நிழற்ற, மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என
மீன் ஒளித்தன வானமே.
54

காலை முரசொலி கேட்டுக் காரிகையார் எழுதல்

1634. ‘நாம வில் கை இராமனைத் தொழும்
நாள் அடைந்தது; உமக்கு எலாம்
காம விற்கு உடை கங்குல் மாலை
கழிந்தது; ‘ என்பது கற்பியாத்
தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி
சாரல் மாரி தழங்கலா
மா மயில் குலம் என்ன முன்னம்
மலர்ந்து எழுந்தனர் மாதரே.
55

தனெ்றல் வீசுதல்

1635. இன மலர்க் குலம் வாய் விரித்து
இள வாச மாருதம் வீச, முன்
புனை துகில் கலை சோர நெஞ்சு
புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விடத் தனித்தனி
வள்ளலைப் புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க
மயங்கினார் சில கன்னிமார்.
56

குமுதம் குவிந்தமை

1636. சாய் அடங்க நலம், கலந்து
தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடும் பழி
கொண்டு அரும்புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்
கண்டு, சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து
குவிந்த வண் குமுதங்களே
57

காலைப் பாட்டு

1637. மொய் அராகம் நிரம்ப, ஆசை
முருங்கு தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும்,
வால் நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர, வெதும்பும்
மாதர்தம் மென் செவிப்,
பை அரா நுழைகின்ற போன்றன,
பண் கனிந்து எழு பாடலே.
58

மைந்தர் துயிலெழல்

1638. ‘ஆழியான் முடி சூடும் நாள், இடை
ஆன பாவி இது ஓர் இரா
ஊழி ஆயின ஆறு! ‘எனா, ‘உயர்
போதின் மேல் உறை பேதையும்,
ஏழு லோகமும் எண் தவஞ் செய்த
கண்ணும், எங்கள் மனங்களும்
வாழும் நாள் இது! ‘எனா, எழுந்தனர்;
மஞ்சு தோய் புய மஞ்சரே.
59

மாதர் துயில் எழுதல்

1639. ஐ உறும் சுடர் மேனியான் எழில்
காண மூளும் அவாவினால்,
கொய் உறும் குல மா மலர்க் குவை
நின்று எழுந்தனர், கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடுங்கண்
முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார், குழல்
வண்டு பொம் என விம்மவே.
60

ஊடியவர் கூடாது எழுதல்

1640. ஆடகம் தரு பூண் முயங்கிட
அஞ்சி அஞ்சி அநந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட,
யாம பேரி இசைத்தலால்,
சேடு அகம் புனை கோதை மங்கையர்,
சிந்தையில் செறி திண்மையால்,
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர்,
நையும் மைந்தர்கள் உய்யவே.
61

காலை ஒலிகள்

1641. தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
யாழ் ஒலித்தன; எங்கணும்
மழை ஒலித்தன போல் கலித்த
மனத்தின் முந்து உறு வாசியே.
62

விளக்கொளி மழுங்கல்

1642. வையம் ஏழும் ஒர் ஏழும் ஆர்
உயிரோடு கூட வழங்கும் அம்
மெய்யன், வீரருள் வீரன், மா மகன்
மேல் விளைந்தது ஓர் காதலால்,
நைய நைய நல் ஐம்புலன்கள்
அவிந்து அடங்கி நடுங்குவான்
தயெ்வ மேனி படைத்த சேயொளி
போல் மழுங்கின தீபமே.
63

பல்வகை வாத்திய ஒலிகள்

1643. வங்கியம் பல தேன் விளம்பின;
வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின;
பம்பை பம்பின; பல் வகை
பொங்கு இயம் பலவும் கறங்கின;
நூபுரங்கள் புலம்ப வெண்
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின
சாம கீதம் நிரந்தவே.
64

சூரியன் தோன்றுதல்

1644. தூபம் முற்றிய கார் இருள் பகை
துள்ளி ஓடிட, உள் எழும்
தீபம் முற்றவும் நீத்து அகன்று என,
சேயது ஆர் உயிர் தேய, வெம்
பாபம் முற்றிய பேதை செய்த
பகைத் திறத்தினில், வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன்
ஒத்தனன், குண குன்றிலே.
65

தாமரை மலர்தல்

1645. மூவராய் முதலாகி மூலமது ஆகி
ஞாலமும் ஆகும் அத்
தேவதேவர் பிடித்த போர் வில்
ஒடித்த சேவகர், சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேர் எழில்
காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம்
மலர்ந்த பங்கய ராசியே.
66

கவிக்கூற்று

1646. இன்ன வேலையின், ஏழு வேலையும்
ஒத்தபோல இரைத்து எழுந்து,
அன்ன மாநகர், ‘மைந்தன் மா முடி
சூடும் வைகல் இது ஆம் ‘எனாத்,
துன்னு காதல் துரப்ப வந்தவை
சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும்,
உற்ற பெற்றி உணர்த்துவாம்.
67

மங்கையர் புனைவு

1647. குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்
பஞ்சினை அணிவார்; பால் வளை தரெிவார்;
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார்.
68

மைந்தர் மகிழ்ச்சி

1648. பொங்கிய உவகை வெள்ளம்
பொழிதரக், கமலம் பூத்த
சங்கை இல் முகத்தார், நம்பி
தம்பியர் அனையர் ஆனார்,
செங்கயல் நறவம் மாந்திக்
களிப்பன சிவணும் கண்ணார்
குங்குமச் சுவடு நீங்காக்
குவவுத் தோள் குமரர் எல்லாம்.
69

நகர மக்கள் மகிழ்ச்சி

1649. மாதர்கள், கற்பின் மிக்கார்,
கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்;
வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள்
திருவினை ஒத்தாள்; அவ் ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம்
தயரதன் தன்னை ஒத்தார்.
70

அரசர் கூட்டம் வருகை

1650. இமிழ் திரைப் பரவை ஞாலம்
எங்கணும் வறுமை கூர,
உமிழ்வது ஒத்து உதவு காதல்
உந்திட வந்தது அன்றே,
குமிழ் முலைச் சீதை கொண்கன்
கோ முடி புனைதல் காண்பான்
அமிழ்து உணக் குழுமுகின்ற
அமரரின் அரசர் வெள்ளம்.
71

தரெுவில் மக்கள் நெருங்குதல் (1651-1652)

1651. பாகு இயல் பவளச் செவ்வாய்ப்
பணை முலைப் பரவை அல்குல்
தோகையர் குழாமும், மைந்தர்
சும்மையும் துவன்றி, எங்கும்,
‘ஏகுமின் ஏகும் ‘என்று என்று,
இடை இடை நிற்றல் அல்லால்,
போகில மீளகில்லா,
பொன் நகர் வீதியெல்லாம்.
72

1652. ‘வேந்தரே பெரிது ‘என்பாரும்,
‘வீரரே பெரிது ‘என்பாரும்,
‘மாந்தரே பெரிது ‘என்பாரும்,
‘மகளிரே பெரிது ‘என்பாரும்,
‘போந்ததே பெரிது ‘என்பாரும்,
‘புகுவதே பெரிது ‘என்பாரும்,
தேர்ந்ததே தேரின் அல்லால்,
யாவரே தரெியக் கண்டார்?
73

மகளிர் குழூமுதல்

1653. குவளையின் எழிலும் வேலின்
கொடுமையும் குழைத்துக் கூட்டித்,
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த
நஞ்சினைத் தரெியத் தீட்டித்,
தவள ஒண் மதியுள் வைத்த
தன்மை சால் தடங்கண் நல்லார்,
துவளும் நுண் இடையார் ஆடும்
தோகை அம் குழாத்தில் தொக்கார்.
74

முடிபுனை விழாவிற்கு வாராதோர்

1654. நலம் கிளர் பூமி என்னும்
நங்கையை நறும் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம்
காண வந்து அடைந்து இலாதார்,
இலங்கையில் நிருதரே,
இவ் ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும், ஆசை நின்ற
விடா மத விலங்கலே ஆல்.
75

மன்னர் முடிசூடும் மண்டபத்துப் புகுதல்

1655. சந்திரர் கோடி என்னத்
தரள வெண் கவிகை ஓங்க,
அந்தரத்து அன்னம் எல்லாம்
ஆர்ந்து எனக் கவரி துன்ன,
இந்திரற்கு உவமை சாலும்
இருநிலக் கிழவர் எல்லாம்
வந்தனர், மௌலி சூட்டும்
மண்டபம் மரபில் புக்கார்.
76

அந்தணர் புகுதல்

1656. முன் பயந்து எடுத்த காதல்
புதல்வனை முறையினோடும்
இல் பயன் சிறப்பிப்பாரின்
ஈண்டிய உவகை தூண்ட,
அற்புதன் திருவைச் சேரும்
அருமணம் காணப் புக்கார்,
நல் பயன் தவத்தின் உய்க்கும்
நான்மறைக் கிழவர் எல்லாம்.
77

பல்வகை நிகழ்ச்சிகள்

1657. விண்ணவர் விசும்பு தூர்த்தார்;
விரி திரை உடுத்த கோல
மண்ணவர் திசைகள் தூர்த்தார்;
மங்கலம் இசைக்கும் சங்கம்,
கண் அகன் முரசின் ஓதை,
கண்டவர் செவிகள் தூர்த்த;
எண் அரும் கனக மாரி
எழு திரைக் கடல்கள் தூர்த்த.
78

பல ஒளிகள்

1658. விளக்கு ஒளி மறைத்த மன்னர்
மின் ஒளி; மகுடம் கோடி
துளக்கு ஒளி விசும்பின் ஊரும்
சுடரையும் மறைத்த; சூழ்ந்த
அளக்கர் வாய் முத்த மூரல்
முறுவலார் அணியின் சோதி,
வளைக்கலாம் என்று அவ் வானோர்
கண்ணையும் மறைத்த அன்றே.
79

வசிட்டன் வருகை

1659. ஆயது ஓர் அமைதியின்கண்,
ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும்
இயையக் கொண்டு,
தூய நால் மறைகள் வேத
பாரகர் சொல்லத், தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க,
மாதவக் கிழவன் வந்தான்.
80

வசிட்டன் செயல்கள்

1660. கங்கையே முதல ஆய
கன்னி ஈறு ஆன தீர்த்த
மங்கலப் புனலும், நாலு
வாரியின் நீரும், பூரித்து,
அங்கியின் வினையிற்கு ஏற்ற
யாவையும் அமைத்து, வீரச்
சிங்க ஆதனமும் வைத்துச்,
செய்வன பிறவும் செய்தான்.
81

மன்னனைக் கொணரச் சுமந்திரன் போதல்

1661. கணிதம் நூல் உணர்ந்த மாந்தர்,
‘காலம் வந்து அடுத்தது ‘என்னப்,
பிணி அற நோற்றுநின்ற
பெரியவன், “விரைவின் ஏகி,
மணி முடி வேந்தன் தன்னை
வல்லையில் கொணர்தி‘‘ என்னப்,
பணி தலைநின்ற காதல்
சுமந்திரன் பரிவின் சென்றான்.
82

கைகேயி இராமனைக் கொணர்க எனல்

1662. விண் தொட நிவந்த கோயில்
வேந்தர் தம் வேந்தன் தன்னைக்
கண்டிலன் வினவக் கேட்டான்,
கைகயள் கோயில் நண்ணித்
தொண்டை வாய் மடந்தைமாரில்
சொல்ல, மற்று அவரும் சொல்லப்
பெண்டிரில் கூற்றம் அன்னாள்,
‘பிள்ளையைக் கொணர்க! ‘என்றாள்.
83

சுமந்திரன் இராமனிடம் கூறத் தொடங்கல்

1663. ‘என்றனள் ‘என்னக் கேட்டான்,
எழுந்த பேர் உவகை பொங்கப்
பொன் திணி மாடவீதி
பொருக்கென நீங்கிப் புக்கான்;
தன் திரு உள்ளத்து உள்ளே
தன்னையே நினையும் மற்றக்
குன்று இவர் தோளினானைத்
தொழுது வாய் புதைத்துக் கூறும்.
84

சுமந்திரன் சொல்

1664. ‘கொற்றவர், முனிவர், மற்றும்
குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல
பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க
எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப்
போதுதி விரைவின் ‘என்றான்.
85

இராமன் புறப்பாடு

1665. ஐயனும் அச் சொல் கேளா,
ஆயிர மௌலியானைக்
கை தொழுது, அரசவெள்ளம்
கடல் எனத் தொடர்ந்து சுற்றத்,
தயெ்வ கீதங்கள் பாடத்,
தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்,
தையலார் இரைத்து நோக்கத்,
தாரணி தேரில் சென்றான்.
86

இராமனைக் கண்ட மக்கள் மகிழ்ச்சி ((1666-1682))

1666. திரு மணி மகுடம் சூடச்
சேவகன் செல்கின்றான் என்று,
ஒருவரின் ஒருவர் முந்தக்,
காதலோடு உவகை உந்த,
இரு கையும் இரைத்து மொய்த்தார்;
இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்
பொரு அரு தேரில் செல்லப்
புறத்திடைக் கண்டார் போல்வார்.
87

1667. துண் எனும் சொல்லாள் சொல்லச்
சுடர் முடி துறந்து, தூய
மண் எனும் திருவை நீங்கி
வழி கொளா முன்னம், வள்ளல்,
பண் எனும் சொல்லினார்தம்
தோள் எனும் பணைத்த வேயும்,
கண் எனும் கால வேலும்,
மிடை நெடுங்கானம் புக்கான்.
88

1668. சுண்ணமும் மலரும் சாந்தும்
கனகமும் தூவ வந்து,
வண்ண மேகலையும் நாணும்
வளைகளும் தூவுவாரும்;
புண் உற அனங்கன் வாளி
புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உறப் பொழிந்த காம
வெம் புனல் கழுவுவாரும்.
89

1669. ‘அம் கணன் அவனி காத்தற்கு
ஆம் இவன் ‘என்னல் ஆமோ?
‘நம் கண் அன்பு இலன்; ‘ என்று
உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்;
‘செங்கணும் கரிய கோல
மேனியும் தேரும் ஆகி,
எங்கணும் தோன்றுகின்றான்
எனைவரோ இராமன்? ‘என்பார்.
90

1670. இனையர் ஆய் மகளிர் எல்லாம்
இரைத்தனர் நிரைத்து மொய்த்தார்;
முனைவரும் நகர மூதூர்
முதியரும் இளைஞர் தாமும்
அனையவன் மேனி கண்டார்;
அன்பினுக்கு எல்லை காணார்
நினைவினர் மனத்தால் வாயால்
நிகழ்ந்தது நிகழ்த்தல் உற்றாம்.
91

1671. ‘உய்ந்தது இவ் உலகம்! ‘என்பார்;
‘ஊழி காண்கிற்பாய்! ‘என்பார்;
‘மைந்த! நீ கோடி எங்கள்
வாழ்க்கைநாள் யாவும்! ‘என்பார்;
‘ஐந்து அவித்து அரிதில் செய்த
தவம் உனக்கு ஆக! ‘என்பார்;
‘பைந்துழாய்த் தரெியலாய்க்கே
நல்வினை பயக்க! ‘என்பார்.
92

1672. ‘உயர் அருள் ஒண் கண் ஒக்கும்
தாமரை, நிறத்தை ஒக்கும்
புயல் பொழி மேகம், என்ன
புண்ணியம் செய்த? ‘என்பார்;
‘செயல் அருந்தவங்கள் செய்து இச்
செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம்
யாம் தக்கது? ‘என்பார்.
93

1673. ‘வாரணம் அரற்ற வந்து,
கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த
நம்பிதன் கருணை! ‘என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா
ஐயனை அணுகி நோக்கிக்,
காரணம் இன்றியேயும்,
கண்கள் நீர் கலுழ நிற்பார்.
94

1674. ‘நீல மா முகில் அனான்தன்
நிறையினோடு அறிவும் நிற்க,
சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்!
தேவரின் அடங்குவானோ?
காலமாக் கணிக்கும் நுண்மைக்
கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய், முடிவு இலாத
மூர்த்தி இம் முன்பன்! ‘என்பார்.
95

1675. ‘ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில்
கொணர்ந்தோர், முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப்
பொருது வென்றோர்,
பேர் கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ்
நிற்பது ஐயன்,
தரர் கெழு திரள் தோள் தந்த புகழினைத்
தழுவி! ‘என்பார்.
96

1676. ‘சந்தம் இவை, தா இல் மணி
ஆரம் இவை யாவும்,
சிந்துரமும், இங்கு இவை
செறிந்த மத வேழப்
பந்திகள், வயப்பரி, பசும்பொனின்
வெறுக்கை,
மைந்த! வறியோர் கொள
வழங்கு! ‘என நிரைப்பார்.
97

1677. மின் பொருவு தேரின் மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொரு இல் கன்று
தனி தாவி வரல் கண்டு, ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்
என்பு உருகி நெஞ்சு உருகி
நஞ்சு உருகி நிற்பார்.
98

1678. ‘சத்திரம் நிழற்ற நிமிர்
தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருேளாடு
அவனி ஆள்வார்,
புத்திரர் இனிப் பெறுதல்
புல்லிது; ‘ என நல்லோர்,
சித்திரம் எனத் தனி
திகைத்து உருகி நிற்பார்.
99

1679. ‘கார் மினொடு உலாயது என
நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில்
கடிது ஏகுதல் செய்வானோ?
கூர் கனக ராசியொடு
கோடி மணியாலும்
தூர்மின் நெடு வீதியினை! ‘
என்று சொரிவாரும்.
100

1680. ‘தாய் கையில் வளர்ந்திலன்;
வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம்
இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ்
இயற்கை இது; என்றால்,
தோகை இவள் பேர் உவகை
சொல்லல் அரிது! ‘என்பார்.
101

1681. ‘பாவமும் அரும் துயரும் வேர்
பறியும்! ‘என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று
பொது! ‘என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல்
தறெும்! ‘என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம்
யாவது கொல்? ‘என்பார்.
102

1682. ஆண்டு இனையர் ஆய் இனைய கூற,
அடல் வீரன்,
தூண்டு புரவிப் பொரு இல்
சுந்தர மணித் தேர்
நீண்ட கொடி மாட நிரை வீதி
நிறையப் போய்ப்,
பூண்ட புகழ் மன்னன்
உறை கோயில் புகலோடும்.
103

அரண்மனையில் அரசனைக் காணாமை

1683. ஆங்கு வந்து அடைந்த அண்ணல்,
ஆசையின் கவரி வீசப்,
பூங்குழல் மகளிர் ஆடும்
புதுக் களி ஆட்டம் நோக்கி,
வீங்கு இரும் காதல் காட்டி,
விரி முகக் கமல பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி,
உவகை வீற்று இருப்ப காணான்.
104

இராமன் கைகேயியின் கோயில் புகுதல்

1684. வேத்து அவை முனிவரோடு
விருப்பொடு களிக்கும், மெய்மை
ஏத்து அவை இசைக்கும், செம்பொன்
மண்டபம் இனிதின் எய்தான்
ஓத்து அவை உலகத்து எங்கும்
உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான்
சிற்றவை கோயில் புக்கான்.
105

மக்கள் பேச்சு

1685. புக்கவன் தன்னை நோக்கிப்
புரவலர், முனிவர் யாரும்
‘தக்கதே நினைந்தான்; தாதை
தாமரைச் சரணம் சூடித்
திக்கினை நிமிர்த்த கோல் அச்
செல்வனே செம் பொன் சோதி
மிக்கு உயர் மகுடம் சூட்டச்
சூடுதல் விழுமிது ‘என்றார்.
106

இராமன்முன் கைகேயி வருதல்

1686. ஆயன நிகழும் வேலை,
அண்ணலும் அயர்ந்து தேறாத்,
தூயவன் இருந்த சூழல்
துருவினன் வருதல் நோக்கி,
‘நாயகன் யான் வாயால்,
நான் இது பகர்வேன் ‘என்னாத்
தாய் என நினைவான் முன்னே
கூற்று எனத் தமியள் வந்தாள்.
107

இராமன் கைகேயியை வணங்கி நிற்றல்

1687. வந்தவள் தன்னைச் சென்னி
மண் உற வணங்கி, வாய்த்த
சிந்துரப் பவளச் செவ்வாய்
செங்கையில் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை
மடக்கு உறத், துவண்டு நின்றான்;
அந்தி வந்து அடைந்த தாயைக்
கண்ட ஆன் கன்றின் அன்னான்.
108

கைகேயி கூற்று

1688. நின்றவன் தன்னை நோக்கி
இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும்
பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது
ஏயதே என்னின் ஆகும்;
ஒன்று உனக்கு உந்தை, மைந்த!
த்தது ஓர் உண்டு ‘என்றாள்.
109

இராமன் கூறுதல

1689. “எந்தையே ஏவ, நீரே செய
இயைவது உண்டேல்,
உய்ந்தனன் அடியேன்; என்னில்
பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது என் தவத்தின் ஆய
வரு பயன் மற்று ஒன்று உண்டோ?
தந்தையும் தாயும் நீரே;
தலைநின்றேன் பணிமின்!‘‘ என்றான்.
110

்கைகேயி கட்டளை இதுவெனல்

1690. “‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன்‘‘ என்றாள்.
111

கவிக் கூற்று ((1691-1692))

1691. இப்பொழுது எம் அனோரால்
இயம்புதற்கு எளிதே! யாரும்
செப்ப(அ)ரும் குணத்து இராமன்
திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பு அவ்
வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தா
மரையினை வென்றது அம்மா!
112

1692. தரெுள் உடை மனத்து மன்னன்
ஏவலில் திறம்பல் அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும்
இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருள் உடைச் சகடம் பூட்ட
உடையவன் உய்த்த கார் ஏறு
அருள் உடை ஒருவன் நீக்க
அப்பரம் அகன்றது ஒத்தான்.
113

இராமன் விடைபெறுதல் ((1693-1694))

1693. ‘மன்னவன் பணி அன்று ஆகில்
நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி
தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே
போகின்றேன்; விடையும் கொண்டேன். ‘
114

இராமன் கோசலைபால் செல்லுதல் ((1994-1695))்

1694. என்று கொண்டு இனைய கூறி,
அடி இணை இறைஞ்சி மீட்டும்,
தன் துணைத் தாதை பாதம்
அத்திசை நோக்கித் தாழ்ந்து,
பொன் திணி போதினாளும்
பூமியும் புலம்பி நையக்,
குன்றினும் உயர்ந்த தோளான்
கோசலை கோயில் புக்கான்.
115

 

Previous          Next