318. நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதிமிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான்.
1
தசரதன் அரியணையில் அமர்ந்த தோற்றம்
319. தூய மெல் அரியணைப் பொலிந்து
தோன்றினான்;
சேய் இரு விசும்பு இடைத் திரியும்
சாரணர்,
‘நாயகன் இவன் கொல்? ‘என்று அயிர்த்து,
‘நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை ‘என்று
ஐயம் நீங்கினார
2
விசுவாமித்திரன் வருதல்
320. மடங்கல் போல் மொய்ம்பினான்
முன்னர், “மன் உயிர்
அடங்கலும் உலகும் வேறு
அமைத்துத் தேவரோடு
இடம் கொள் நான்முகனையும்
படைப்பென் ஈண்டு‘‘ எனாத்
தொடங்கிய கோசிக முனிவன்
தோன்றினான்.
3
தசரதன் விசுவாமித்திர முனிவனை
வரவேற்றல் (321-322)
321. வந்து முனி எய்துதலும்,
மார்பின் அணி ஆரம்
அந்தரம் தலத்து இரவி
அஞ்ச ஒளி விஞ்சக்
கந்த மலரில் கடவுள்
தன் வரவு காணும்
இந்திரன் எனக் கடிது
எழுந்து, அடி பணிந்தான்.
4
தசரதன் முனிவற்கு இருக்கை ஈந்து
வழிபட்டு இன்மொழி கூறல் (322-323)
322. பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர்
பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, அதின்
அருத்தியொடு இருத்தி
இணைந்த கமலச் சரண் அருச்சனை
செய்து ‘இன்றே
துணிந்தது என் வினைத் தொடர்பு ‘எனத்
தொழுது சொல்லும்.
5
323. நிலம் செய் தவம் என்று உணரின் அன்று,
நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று,
நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது,
முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற,
முனி கூறும்.
6
விசுவாமித்திர முனிவன் தசரதனைப் புகழ்தல் (324-325)
324. என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையர் ஆனால்
பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரையும்
பால் கடலும் பதும பீடத்து
தன் நகரும் கற்பக நாட்டு அணி நகரும்
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ?
இகல் கடந்த புலவு வேலோய்!
7
325. இன் தளிர்க் கற்பகம் நறும் தேன்
இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து
நின் தளிக்கும் தனிக் குடையின்
நிழல் ஒதுங்கிக், குறை இரந்து நிற்ப, நோக்கிக்
குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு,
அன்று அளித்த, அரசு அன்றோ புரந்தரன் இன்று
ஆள்கின்றது; அரச! என்றான்.
8
தசரதன் முனிவன்பால் யான்செய்வது அருளுக என்றல்
326. செய்த அளவில் அவன் முகம் நோக்கி,
உள்ளத்தின் ஒருவராலும்
கரை செய்தல் அரியது ஒரு பேர் உவகைக்
கடல் பெருகக் கரங்கள் கூப்பி,
‘அரைசு எய்தி இருந்த பயன் எய்தினன்; மற்று
இனிச் செய்வது அருளுக ‘என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன்மொழியப் பின்
மொழியும் முனிவன் ஆங்கே.
9
முனிவன் , வேள்வி காக்க இராமனைத் தருதி எனல்
327. “தரு வனத்துள் யான் இயற்றும்
தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.
10
தசரதன் துயர் உறுதல்
328. எண் இலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்,
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல்
நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர்
உயிர் நின்று ஊசல் ஆடக்
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடும் துயரம் கால வேலான்.
11
தசரதன் யானேகாப்பேன் , வேள்விக்கு எழுக எனல்
329. தொடை ஊற்றில் தேன் துளிக்கும் நறும்
தாரான் ஒரு வண்ணம் துயரம் நீங்கிப்
‘படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும் நான்முகனும்
புரந்தரனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறு ஆ, யான் காப்பென்
பெரு வேள்விக்கு எழுக ‘என்றான்.
12
விசுவாமித்திர முனிவன் வெகுளுதல்
330. என்றனன்; என்றலும், முனிவோடு
எழுந்தனன், மண் படைத்த முனி; ‘இறுதி காலம்
அன்று ‘என ‘ஆம்‘ என இமையோர்
அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மீ நிவந்த கொழுங்
கடைப் புருவம், நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்;
இருண்டன போய்த் திசைகள் எல்லாம்.
13
வசிட்ட முனிவன் தசரதனுக்கு உறுதிகூறுதல் (331-332)
331. கறுத்த மா முனி கருத்தை உன்னி ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? ‘எனா வசிட்டன் கூறினான்.
14
332. ‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறு போல்
ஐய! நின் மகற்கு அளவில் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது ‘என்னவே.
15
தசரதன் அழைக்க இராமன் வருதல்
333. குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்
‘திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்று ‘என
“வருக என்றனன் ” என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான்.
16
இராம லக்குமணரைத் தசரதன்
விசுவாமித்திரனிடம் ஒப்படைத்தல்
334. வந்த நம்பியைத் தம்பி தன்னோடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி ‘நல்
தந்தை நீ தனித் தாயும் நீ இவர்க்கு
எந்தை! தந்தனன்; இயைந்த செய்க ‘என்றான்.
17
இராமலக்குவருடன் விசுவாமித்திர முனிவன்
புறப்படுதல்
335. கொடுத்த மைந்தரைக் கொண்டு சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல்
‘அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் ‘எனா
நடத்தல் மேயினான் நவை கண் நீங்கினான்.
18
இராமன் படைக்கலம் தாங்குதல்
336. வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல்
என்றும் தேய்வு உறாத் தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர் தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கினான்; உலகம் தாங்கினான்.
19
இராமன் இலக்குமணனுடன் முனிவன்பின் செல்லுதல்
337. அன்ன தம்பியும் தானும் ஐயனாம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டால் எனச்
சொன்ன மாதவன் தொடர்ந்த சாயை போல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்.
20
மூவரும் சரயு என்னும் ஆற்றை அடைதல்
338. வரங்கள் மாசு அறத் தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்.
21
மூவரும் ஒருசோலையை அடைதல்
339. கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
வரம்பு மீதிடும் மருத வேலிவாய்
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை வைகினார்.
22
சூரியாத்தமன காலத்தில் மூவரும் சரயுவைக் கடத்தல்
340. தாழும் மா மழை தழுவும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சிப் பச்சை மா
ஏழும் ஏறப் போய் ஆறும் ஏறினார்.
23
இராமன் எதிர்ப்பட்ட சோலையைப் பற்றி வினவுதல்
341. தேவு மாதவன் தொழுது தேவர்தம்
நாவுள் ஆவுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவும் சோலை கண்டு
‘யாவது? ஈது? ‘என்றான் எவர்க்கும் மேல் நின்றான்.
24