342. திங்கள் மேவும் சடைத்
தேவன் மேல் மாரன் வேள்,
இங்கு நின்று எய்யவும்,
எரி தரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுடப்,
பூளை வீ அன்னதன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு,
அனங்கனே ஆயினான்.
1

343. வாரணத்து உரிவையான், மதனனைச்
சினவும் நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால்,
இவண் எலாம்
ஆரணத்து உறையுளாய்! அங்கநாடு;
இதுவும் அக்
காரணக் குறி உடைக்
காமன்ஆச்சிரமமே.
2

காமனாச்சிரமத்தின் பெருமை

344. பற்று அவா வேர் ஒடு உம்
பகை அறப் பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல்
முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு
செய்தனன் எனில்
சொற்ற ஆம் அளவதோ
மற்று இதன் தூய்மையே.
3

விசுவாமித்திரன் இராமன் இலக்குவன்
மூவரும் சுரஞ் சார்தல்

345. என்று அவ் அந்தணன் இயம்பலும்
வியந்து அவ் வயின்
சென்று, உவந்து எதிர் எழும்
செந்நெறிச் செல்வரொடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப்
பருதி மண்டிலம் அகன்
குன்றில் நின்று இவர் ஓர்
சுடு சுரம் குறுகினார்.
4

பாலைநில வருணனை (346-353)

346. பருதி வானவன் நிலம்
பசை அறப் பருகுவான்
விருது மேல் கொண்டு, உலாம்
வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால்,
எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும்;
காணில் வேம் நயனமும
5

347. படியின் மேல் வெம்மையைப்
பகரினும் பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும்
வான் முகடும் வேம்
விடியுமேல் வெயிலும் வேம்; மழையும்
வேம்; மின்னினோடு
இடியும் வேம் என்னில், வேறு
யாவை வேவாதவே.
6

348. விஞ்சுவான் மழையின்மேல் அம்பும்
வேலும் படச்
செஞ்சவே செரு முகத்து அமர்
செயும் திறன் இலா
வஞ்சர் தீ வினையினால் மான
மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல் என்றும்
ஆறாது அரோ,
7

349. பேய் பிளந்து ஒக்க நின்று உலர்
பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும்
தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும்
விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே
வனம் எலாம்.
8

350. பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது அரோ சூரியன்
தேரும் ஓடாது மா மாகம் மீது ஏறி நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது அரோ.
9

351. கண் கிழித்து உமிழ் விடக்
கனல் அரா அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின்
அனைய பன்மணி வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள்,
மண் மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே
போலுமே.
10

352. புழுங்கு வெம் பசியொடு
புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர்
விரித்த வாயின் வாய்
முழங்கு திண் கரி புகும்;
முடுகி மீ மிசை
வழங்கு வெம் கதிர் சுட
மறைவு தேடியே.
11

353. ஏக வெம் கனல் அரசு இருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கதிர் எனும் வடவை தீச் சுட
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே;
12

பேய்த் தேரின் தோற்றம்

354. கானகக் அத்து இயங்கிய
கழுதின் தேர்க் குலம்,
தான் அகம் கரிதலில்
தலைக்கொண்டு ஓடிப் போய்
மேல் நிமிர்ந்து எழுந்திடில்
விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர்
வளைந்தது ஒத்ததே.
13

355. ஏய்ந்த அக் கனல் இடை
எழுந்த கானல் தேர்
காய்ந்த அக் கடும் வனம்
காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு
வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் கால் உடைப்
பளிக்குப் பீடமே.
14

பாலைவனத்தின் பசையற்றநிலை

356. தா வரும் இரு வினை செற்றுத் தள்ளரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலைப்
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே.
15

357. பொரி பரல் படர் நிலம்
பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி
விளங்கித் தோன்றலால்
அரி மணிப் பணத்து அரா
அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு
இயங்கல் ஆயதே.
16

பாலையின் வெப்பத்தால் அரசிளங்குமரர்
வருந்துவர் என விசுவாமித்திரர் எண்ணுதல்

358. எரிந்து எழு கொடும் சுரம்
இனையது எய்தலும்,
அருந்தவன், இவர் பெரிது
அளவில் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும்,
பூவின் மெல்லியர்,
வருந்துவர் சிறிது, என
மனத்தில் நோக்கினான்.
17

விசுவாமித்திரன் பலை அதிபலை என்னும்
அருமறைகள் இரண்டையும் அரசிளங்குமரர்க்கு உபதேசித்தல்

359. நோக்கினன் அவர் முகம்,
நோக்க நோக்கு உடை
கோக் குமரரும் அடி
குறுக, நான்முகன்
ஆக்கிய விஞ்சைகள் இரண்டும்
அவ்வழி
ஊக்கினன்; அவை அவர்
உள்ளத்து உள்ளினார்.
18

360. உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெஞ்சுரம்
தெள்ளு தண் புனல் இடை சேறல் ஒத்தது
வள்ளலும் முனிவனை வணங்கிக் கூறுவான்.
19

இராமன் வினவுதல்

361. ‘சுழி படு கங்கை அம் தொங்கல் மௌலியான்
விழிபட வெந்ததோ? வேறுதான் உண்டோ?
பழிபடர் மன்னவன் படைத்த நாட்டின் ஊங்கு
அழிவது என் காரணம்? அறிஞ! கூறு ‘என்றான்.
20

விசுவாமித்திரன் தாடகை வரலாறு கூறுதல்

362. என்றலும் இராமனை நோக்கி இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்; கூற்றின் தோற்றத்தள்;
அன்றியும் ஐயிரு நூறு மையல் மா
ஒன்றிய வலியினள்; உறுதி கேள் எனா?
21

தாடகை உருவ வருணனை (363-365)

363. மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்;
எண் உருத் தரெிவு அரும் பாவம் ஈண்டி ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்.
22

364. பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும்
உரும் உறழ் முழக்கொடும் ஊழித் தீயொடும்
இரு பிறை செறிந்து எழு கடல் உண்டாம் எனின்
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே.
23

365. சூடக அரவு உறழ் சூலக் கையினள்
காடு உறை வாழ்க்கையள் கண்ணில் காண்பரேல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!
தாடகை என்பது அச் சழக்கி நாமமே.
24

தாடகை வரலாறு கூறுதல்

366. கல் நவில் தோளினாய்!
கமலத்தோன் அருள்
மன் உயிர் அனைத்தையும்
வாரி வாய் மடுத்து
இன் உயிர் வளர்க்கும் ஓர்
எரிகொள் கூற்றம் நேர்
அன்னவள் யாவள் என்று
அறையக் கேட்டியால்!
25

சுகேதுவின் வரலாறு (367-371)

367. இயக்கர்தம் குலத்து உளான்,
உலகம் எங்கணும்
வியக்குறு மொய்ம்பினான், எரியின்
வெம்மையான்,
மயக்கிலன், சரன் எனும்
வலத்தினான் அருள்
துயக்கிலன், சுகேது என்று உளன்,
ஓர் தூய்மையான்.
26

சுகேது தவஞ் செய்தது

368. அன்னவன் மகவு இலாது
அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை
மலரின் வைகுறும்
நல்நெடு முதல்வனை வழுத்தி,
நல் தவம்
பன் நெடும் பகல் எலாம்
பயின்ற பான்மையான்.
27

பிரமன் வரமளித்தல்

369. முந்தினன், அரும் மறை கிழவன்
‘முற்றும் நின்
சிந்தனை என்? ‘எனச்‘
சிறுவர் இன்மையால்
நொந்தனன், அருள்க! ‘என,‘
நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள்
உண்டாம் ‘என்றான்.
28

பிரமன் வரங்கொடுத்து மறைதல்

370. ‘பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்
ஏமுறும் மத மலை ஈத் ஐஞ்ஞாறு உடை
தாமிகு வலி ஒடு உம் தனயை தோன்றும் நீ
போ! ‘என மலர் அயன் புகன்று போயினான்.
29

சுகேது தன்மகளைச் சுந்தனுக்கு மணமுடித்தல்

371. ஆயவன் அருள் வழி அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு ‘இவட்கு
ஆயவன் யார்கொல்? ‘என்று ஆய்ந்து தன் கிளை
நாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான்.
30

சுந்தனும் தாடகையும் மணக்களிப்பெய்துதல்

372. காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம் என இயக்கனும் அணங்கு அ(ன்)னாளும் வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்த்
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார்.
31

சுவாகு மாரீசர்கள் தோன்றுதல்

373. பற்பல நாள் செலீஇப் பதுமை போன்று ஒளிர்
பொற்பினாள் வயிறு இடை புவனம் ஏங்கிட
வெற்பு அணி புயத்து மாரீசனும் விறல்
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார்.
32

மக்கள் வன்மைகண்டு சுந்தன் களித்தல்

374. மாயமும் வஞ்சமும் வரம்பில் ஆற்றலும்
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வொணாது
ஆய் அவர் வளர்வுழி அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும் களிப்பின் மேன்மையான்.
33

சுந்தன் அகத்தியராச்சிரமத்தில் மரங்களைப்பறித்து வீசுதல்

375. தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர
மோது உறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடும்
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.
34

அகத்தியர் விழிக்கச் சுந்தன் சாம்பராதல்

376. விழைவு உறு மா தவம்
வெஃகினோர் விரும்பு
உழை கலை இரலையை
உயிர் உண்டு ஓங்கிய
வழை முதல் மரன் எலாம்
மடிப்ப, மாதவன்
தழல் எழ விழித்தனன்,
சாம்பர் ஆயினான்.
35

கணவன் இறந்தமை கேட்டுத் தாடகை
மக்கேளாடு அகத்தியராச்சிரமம் அடைதல்

377. மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொன் தொடி கேட்டு வெம் கனலிற் பொங்குறா
‘முற்றுற முடிக்குவன் முனியை ‘என்று எழா
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.
36

தாடகையின் குமாரர்கள் அகத்தியரை அணுகுதல்

378. இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிடக்
கடி கெட அமரர்கள் கதிரும் உட்கு உறத்
தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும்
வெடி பட அதிர்த்து எதிர் விளித்து மண்டவே.
37

அகத்தியன் சபித்தல்

379. தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக“ என த்தனன் அசனி எஞ்சவே.
38

தாடகைமுதலியோர் அரக்கராதல்

380. வெருக் கொள உலகையும்
விண் உேளாரையும்
முருக்கி எவ் உயிரும் உண்டு
உழலும் மூர்க்கர் ஆம்
அரக்கர்கள் ஆயினர்
அக்கணத்தினில்,
உருக்கிய செம்பு என
உமிழ்கண் தீயினர்.
39

சுபாகு மாரீசர்கள் சுமாலியோடு உறவு கொள்ளுதல்

381. ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும்
தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின்
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து ‘நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர் ‘என்று உறவு கூர்ந்தனர்.
40

சுபாகு மாரீசர்கள் இராவணனுக்கு மாமனாய்
உலகிற்குத் தீமை புரிதல்

382. அவனொடும் பாதலத்து அனேக நாள் செலீஇத்
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் எனப் புடைத்து அழித்து உலகம் எங்கணும்
பவனனில் திரிகுநர் பதகி மைந்தர்கள்.
41

மக்களைப் பிரிந்த தாடகை இங்கு வசிக்கின்றாள் எனல்

383. மிகும் திறல் மைந்தரை வேறு நீங்கு உறாத்
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே
வகுந்துவின் வசு அரி வதிந்தது இவ்வனம்
புகுந்தனள் அழலெனப் புழுங்கு நெஞ்சினாள்.
42

தாடகையால் இவ்வனம் வளம் அழிந்தது எனல்

384. உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்பு அரும் குணங்களை அழிக்கும் ஆறு போல்
கிளப்பு அரும் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப்பரு மருதம் வைப்பு அழித்து மாற்றினாள்.
43

இராவணன் ஆணையால் இவள்
இன்னல் செய்கின்றாள் எனல்

385. ‘இலங்கை அரசன் பணி அமைந்து
ஒர் இடையூறா
விலங்கல் வலி கொண்டு எனது
வேள்வி நலிகின்றாள் :
அலங்கல் முகிலே! இவள் இவ்
அங்க நிலம் எங்கும்
குலங்கெளாடு அடங்க நனி
கொன்று திரிகின்றாள்.
44

தாடகை உயிரினத்தையே ஒழித்து விடுவாள் எனல்

386. ‘முன் உலகு அளித்து
முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது
தன்மையினள், மைந்த!
என் இனி உணர்த்துவது?
இனிச் சிறிது நாளில்,
மன் உயிர் அனைத்தையும்
வயிற்றின் இடும் ‘என்றான்.
45

தாடகை எங்கிருப்பவள் என்று இராமன் வினாவுதல்

387. அங்கு இறைவன் அப்பரிசு ப்ப,
அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க்
குழல் துளக்கா.
‘எங்கு உறைவது இத்தொழில் இயற்றுபவள்?‘
என்றான்.
சங்கு உறை கரமத்து ஒரு தனிச்
சிலை தரித்தான்.
46

தாடகை வருதல் (388-389)

388. கை வரை எனத் தகைய
காளை கேளா,
ஐவரை அகத்து இடை
அடைத்த முனி, ‘ஐய!
இவ்வரை இருப்பது அவள்‘
என்பதனின் முன்பு, ஓர்
மைவரை நெருப்பு எரிய
வந்தது என வந்தாள்.
47

389. சிலம்புகள் சிலம்பு இடை
செறித்த கழலோடு
நிலம்புக மிதித்தனள்;
நெளித்த குழி வேலைச்
சலம்புக, அனல் தறுகண்
அந்தகனும் அஞ்சிப்
பிலம்புக, நிலை கிரிகள்
பின் தொடர, வந்தாள்.
48

தாடகை சினத்தோடு விழித்துப் பார்த்தல்

390. இறைக்கடை துடித்த புருவத்தள்,
எயிறு என்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்த
பில வாயள்,
மறைக்கடை அரக்கி, வடவை
கனல் இரண்டாய்
நிறைக்கடல் முளைத்து என
நெருப்பு எழ விழித்தாள்.
49

தாடகை ஆர்ப்பரித்தல்

391. கடம் கலுழ் தடம் களிறு
கையொடு கை தறெ்றா
வடம் கொள நுடங்கும் இடையாள்,
மறுகி வானோர்
இடங்களும் நெடுந் திசையும்
ஏழ் உலகும் எங்கும்
அடங்கலும் நடுங்க, உரும்
அஞ்ச, நனி ஆர்த்தாள்.
50

தாடகை இராம லக்குமணர்களைப்
பார்த்துப் பேசுதல் (392-393)

392. ஆர்த்து, அவரை நோக்கி,
நகை செய்து, எவரும் அஞ்சக்,
கூர்த்த நுதி முத்தலை அயில்
கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று,
பகு வாய் முழை திறந்து, ஓர்
வார்த்தை செய்தனள்,
இடிக்கும் மழை அன்னாள்.
51

393. ‘கடக்க அரும் வலத்து எனது
காவல் இதில் யாவும்
கெடக் கரு அறுத்தனன்;
இனிச் சுவை கிடக்கும்
விடக்கு அரிது எனக் கருதியோ?
விதி கொடு உந்தப்
பட கருதியோ? பகர்மின் வந்த
பரிசு! ‘என்றே.
52

தாடகை இராம லக்குமணர்களை நோக்கிச் சினத்தல்

394. மேகம் அவை இற்று உக
விழித்தனள்; புழுங்கா
மாக வரை இற்று உக
உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு
அதுக்கி, அயில் பற்றா,
‘ஆகம் உற உய்த்து எறிவன்‘
என்று எதிர் அழன்றாள்.
53

இராமன் அவளைப் பெண்ணென
எண்ணிக் கணை தொடாமை

395. அண்ணல் முனிவற்கு அது
கருத்து எனினும், ‘ஆவி
உண் ‘என வடி கணை
தொடுக்கிலன்; உயிர்க்கே
துண் எனும் வினைத் தொழில்
தொடங்கி உளள் ஏனும்,
பெண் என மனத்திடை
பெரும் தகை நினைந்தான்.
54

முனிவன் இராமன் கருத்தறிந்து மொழிதல்

396. வெறிந்த செம் மயிர்
வெள் எயிற்றாள், ‘தனை
எறிந்து கொல்வென் ‘என்று
ஏற்கவும் பார்க்கிலாச்
செறிந்த தார் அவன்,
சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நால் மறை
அந்தணன் கூறுவான்.
55

தாடகையைப் பெண்ணல்லள் எனல்

397. ‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘
56

ஆடவர் ஆண்மை இவள் பேர் சொன்னாலும்
அகலும் எனல்

398. ‘நாண்மையே உடையார்ப் பிழைத்தால் நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமால்;
ஆண்மை என்னும் அது ஆர் இடை வைகுமே? ‘
57

ஆடவர்க்கும் தாடகைக்கும் வேறுபாடின்றெனல்

399. ‘இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்
தந்திரம் படத் தானவர் வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு
அந்தரம் இனி யாது கொல் ஆம்? ஐயா!
58

விசுவாமித்திரர் மேலும் சில கூறுதல்

400. ‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் க்கின்றது யாது எனின்
முன்னோர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது ‘
என்ன ஓதல் உற்றான் தவத்து ஈறு இலான்.
59

திருமால் கியாதியைக் கொன்ற வரலாறு கூறுதல்

401. ‘பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு
உருகு காதல் உற உறவு ஆதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான்.
60

இந்திரன் குமதியைக் கொன்ற வரலாறு கூறுதல்

402. ‘வானகம் தனில் மண்ணினின் மன் உயிர்
போனகம் தனக்கு என்று எணும் புந்தியள்
தானவள் குமதிப் பெயராள் தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர் கோன்.
61

திருமாலுக்கும் இந்திரனுக்கும் தீமையா
விளைந்தது? எனல்

403. ‘ஆதலால் அரிக்கு ஆகண்டலன் தனக்கு
ஓது கீர்த்தி உண்டாயது அல்லாது இடை
ஏதம் என்பன எய்தியோ? சொலாய்!
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!
62

இவள் பெண் அல்லள் எனல்

404. ‘கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியாரொடும்
மறம் கொடு இத் தரை மன் உயிர் மாய்த்து நின்று
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ!
63

இவள் கூற்றினும் கொடியள் எனல்

405. ‘சாற்றும் நாள் அற்றது எண்ணித்,
தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி,
இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன
நயப்பது ஓர்
கூற்று உண்டோ? சொலாய்!
கூற்று உறழ் வேலினாய்!
64

இவளைப் பெண் எனல் எளிமையாம் என்றல்

406. ‘மன்னும் பல் உயிர் வாரித்
தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமை
எதோ? ஐய!
பின்னும் தாழ் குழல்
பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை
எளிமையின் பாலதே!
65

விசுவாமித்திரன் தாடகையைக் கொல்லுக எனல்

407. ‘ஈறு இல் நல் அறம் பார்த்து
இசைத்தேன், இவள்
சீறி நின்று இது
செப்புகின்றேன் அலேன் :
ஆறி நின்றது அறன்
அன்று; அரக்கியைக்
கோறி! ‘என்று எதிர்
அந்தணன் கூறினான்
66

இராமன் இசைதல்

408. ஐயன் அங்கு அது கேட்டு,
‘அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க
என்று ஏவினால்,
மெய்ய! நின் வேதம்
எனக் கொடு
செய்கை அன்றோ அறஞ்
செயும் ஆறு? ‘என்றான்.
67

தாடகை இராமன்மேல் சூலத்தை வீசுதல்

409. கங்கைத் தீம் புனல் நாடன்
கருத்து எலாம்
மங்கைத் தீ அனையாளும்
மனம் கொளாச்,
செங்கைச் சூல வெம்
தீயினைத் தீய தன்
வெம் கண் தீயொடு
மேல் செல வீசினாள்.
68

தாடகைவீசிய சூலம் இராமனைநோக்கி வருதல்

410. புதிய கூற்று அனையாள்
புகைந்து ஏவிய
கதிர் கொள் மூவிலைக்
கால வெம் தீ, முனி
விதியை மேல் கொண்டு
நின்றவன்மேல், உவா
மதியின் மேல் வரும்
கோள் என, வந்தவே.
69

இராமபிரான் தாடகையின் சூலத்தை
இருதுண்டாக்குதல்

411. மாலும் அக் கணம் வாளியைத் தொட்டதும்
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட;
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.
70

தாடகை மலைகளை வீசுதலும்
இராமன் அவற்றை விலக்குதலும்

412. அல்லின் மாரி அனைய நிறத்தவள்
சொல்லின் மாத்திரையில் கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள்; அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்.
71

இராமபாணம் தாடகையின்
மார்பில் ஊடுருவிச் சென்றது எனல்

413. சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு
சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம்
கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் எனப் போயிற்று அன்றே.
72

இராமபாணம் பட்டுத் தாடகை கீழே வீழ்தல்

414. பொன் நெடுங் குன்றம் அன்னான்
புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
அடித்தலும், இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்யக்
கடை உகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே
போல வீழ்ந்தாள்.
73

தாடகை இறந்தது இராவணனுக்கு
ஓர் உற்பாதமாம் எனல்

415. பொடி உடைக் கானம் எங்கும் குருதிநீர்
பொங்க வீழ்ந்த
தடி உடை எயிற்றுப் பேழ்வாய்த்
தாடகை, தலைகள் தோறும்
முடி உடை அரக்கற்கு அந்நாள்
முந்தி உற்பாதம் ஆகப்
படி இடை அற்று வீழ்ந்த வெற்றியம்
பதாகை ஒத்தாள்.
74

காடுமுழுதும் குருதி பரவுதல்

416. கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை
கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாய்
ஊடு ஒழுகிய குருதி வெள்ளம்.
ஆன்ற அக் கானம் எல்லாம்
ஆயினது; அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம்
தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்ததே.
75

கூற்றுவன் அரக்கர் குருதிச்சுவை அறிந்தான் எனல்

417. வாச நாள் மலரோன் அன்ன
மா முனி பணி மறாத
காசு உலாம் கனகப் பசும் பூண்
காகுத்தன் கன்னிப் போரில்
கூசி வாள் அரக்கர் தங்கள்
குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும்
சுவை சிறிது அறிந்தது அன்றே.
76

தேவர் மகிழ்ச்சி

418. ‘யாமும் எம் இருக்கை பெற்றேம், உனக்கு
இடையூறும் இல்லை,
கோ மகற்கு இனிய தயெ்வப் படைக்கலம்
கொடுத்தி ‘என்னா
மா முனி த்துப், பின்னர் வில்கொண்ட
மழை அனான்மேல்
பூ மழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர்
போயினாரே.
77

 

Previous          Next