இராமன், தான்குறித்த கால எல்லையில் சுக்கிரீவன் வராமையால் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல் (4374-4381)

4374. அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னம் வீரன் இளவலை ‘மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினன்;
மன்னன் வந்திலன்; என் செய்த ஆறு அரோ?
1

4375. ‘பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்
திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.
2

4376. ‘நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து பொய்த்து உளான்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்.
3

4377. “வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு; அரும் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு “ என்று சொல்லு நம் ஆணையே.
4

4378. ‘நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.
5

4379. “‘ஊரும் ஆளும் அரசும் நும்சுற்றமும்
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும்; வாரலிராம் எனின் வானரப்
பேரும் மாளும் “ எனும் பொருள் பேசுவாய்.
6

4380. “இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை “ எனத் துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்
நின்னலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்.
7

4381. ‘நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தரத்தக்கனை;
போதி ஆதி ‘என்றான் புகழ்ப் பூணினான்.
8

இராமனது ஆணையை மேற்கொண்டு இலக்குவன் செல்லுதல் (4382-4388)

4382. ஆணைசூடி அடிதொழுது ஆண்டு இறை
பாணியாது படர்வெரிந் பாழ்படாத்
தூணி தூக்கி தொடுசிலை தொட்டு அருஞ்
சேணின் நீங்கினன் சிந்தையுள் நீங்கலான்.
9

4383. மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறுசென்று நெடுநெறி நீங்கிட
வேறு சென்றனன்; மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான்.
10

4384. விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின மாதிரம்;
கண் உறத் தரெிவுற்றது கட்செவி;
ஒண் நிறம் கழல் சேவடி ஊன்றலால்.
11

4385. வெம்பு கான் இடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பு போன்றனன் அன்று அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே.
12

4386. மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று கெடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றது நண்ணிய கால்பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான்.
13

4387. உருக் கொள் ஒண்கிரி
ஒன்றின் நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன்,
பொன் ஒளிர் மேனியான்
அருக்கன், மா உதயத்தின்
நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை
எய்திய பண்பினால்.
14

4388. தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின் நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன்.
15

இலக்குவன் வெகுண்டு வருதலைக் கண்டு அஞ்சிய வானரர், அங்கதனுக்கு அவனது வருகையைத் தரெிவித்தல்

4389. கண்ட வானரம் காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி மகற்கு ‘அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்
சண்ட வேகத்தினால் ‘என்று சாற்றுலும்.
16

அங்கதன், இலக்குவனது குறிப்புணர்ந்து சுக்கிரீவனது அரண்மனையை அடைதல்

4390. அன்ன தோன்றலும் ஆண் தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்திலான்;
மன்னன் மைந்தன் மனம் கருத்து உட் கொளா
பொன்னின் வார்கழல் தாதை இல் போயினான்.
17

அரண்மனையின் உள்ளே சுக்கிரீவன் இருந்த நிலை
(4391-4395)

4391. நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தள மலர்த்தகைப் பள்ளியில் தாழ்குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்;
18

4392. தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்;
19

4393. சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில் ‘சாயலர் தாழ் குழல்
கந்த மாமலர்க் காடுகள் தாவிய
மந்த மாருதம் வந்து உற வைகுவான்;
20

4394. தித்தியா நின்ற செங்கிடை வாய்ச்சியர்
முத்த வாள்நகை முள்ளெயிறு ஊறுதேன்
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்குவான்;
21

4395. மகுட குண்டலம் ஏய் முக மண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க்கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால்வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான்;
22

அங்கதன், சுக்கிரீவனை அணுகித் துயில் எழுப்புதல் (4396-4398)

4396. கிடந்தனன் கிடந்தானைக் கிடைத்து இரு
தடங்கை கூப்பினன்; தாரை முன்நாள் தந்த
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான்
தொடங்கினான் அவனைத் துயில் நீக்குவான்.
23

4397. ‘எந்தை! கேள் : அவ் இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திருமுகம்
தந்து அளிப்ப தடுப்ப அரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக் கருத்து யாது? ‘என்றான்.
24

4398. இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
நினைவு இலான் நெடுஞ் செல்வம் நெருக்கவும்
நனை நறுந்துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல் அணைத் தங்கினான்.
25

அங்கதன் அநுமனிடம் செல்லுதல்

4399. ஆதலால் அவ் அரசு இளம் கோளரி
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்
கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் போதகமே அனான்.
26

அங்கதன், அநுமனுடன் தாரையின் மாளிகையை அடைதல்

4400. மந்திரத் தனி மாருதி தன்னொடும்
வெம் திறல் படைவீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னைதன் கோயிலை
இந்திரற்கு மகன்மகன் எய்தினான்.
27

மேல் செயத்தக்கது என் ‘என வினாவிய அங்கதன் முதலியோரை நோக்கித் தாரை, கூறுதல் (4401-4405)

4401. எய்தி ‘மேல்செயத் தக்கது என்? ‘என்றலும்
‘செய்திர் செய்தற்கு அருநெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும் உதவி கொன்றீர்? ‘எனா.
28

4402. மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் : “படை
கூட்டும் ‘என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் நும்நாள் திறம்பும் “ எனக்
கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால்.
29

4403. ‘வாலியார் உயிர் காலனும் வாங்க வில்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம்புறத்து இருப்பார்? இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.
30

4404. ‘தேவி நீங்க அத்தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது பருகுதிர் போலும் நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல்நீர்.
31

4405. ‘திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
நிறம்பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்? ‘என்கின்ற போதின்வாய்
32

குரங்குகள், கிட்கிந்தை வாயிலின் கதவைத் தாளிட்டுப் பெரும் பாறைகளைப் பெயர்த்து அடுக்கிப் போர் செய்தற்கு ஆயத்தமாதல் (4406-4407)

4406. கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம்
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள் உறுத்தி தடவரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்.
33

4407. சிக்குறக் கடை சேமித்த செய்கைய
தொக்குறுத்த மரத்த; துவன்றின;
‘புக்கு உறுக்கிப் புடைத்தும் ‘என புறம்
மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன.
34

இலக்குவன் சினந்து உதைக்க, காவல் மதிலும் கதவு முதலியனவும் சிதைந்து அழிதல் (4408-4409)

4408. ‘காக்கவோ கருத்து? ‘என்று கதத்தினால்
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
நூக்கினான் அக்கதவினை நொய்தினின்.
35

4409. காவல் மாமதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.
36

குரங்குகள் அஞ்சிச் சிதறியோடுதல் (4410-4413)

4410. நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை
ஐ இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரக்கும் வெருக் கொளா.
37

4411. பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடித்தலை
நெரிய நெஞ்சு பிளப்ப நெடுந்திசை
இரியல் உற்றன; இற்றில இன் உயிர்.
38

4412. பகரவேயும் அரிது; பரிந்து எழு
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்
சிகர மால்வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது மாநகர்.
39

4413. வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அக் கார்வரை
மீன் நெருங்கிய வானகம் மீன் எலாம்
போனபின் பொலிவு அற்றது போன்றதே.
40

வாயிற் கதவினைத் தள்ளி நகரத்தினுள் இலக்குவன் வருதல் கண்டு அங்கு நின்றோர், ‘இனி என் செய்வது? ‘எனத் தாரையை வினவுதல்

4414. அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர்.
41

அநுமன் தக்கதோர் உபாயம் கூறுதல்

4415. ‘அனை! எதிர்ந்து இவண் ஆய் வளையாரொடும்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலான்;
வினையம் ஈது ‘என்று அனுமன் விளம்பினான்.
42

தாரை, மகளிர் கூட்டத்துடன் இலக்குவனை நோக்கிச் சென்று, அவன் வரும் வழியினைத் தடை செய்து நிற்றல் (4416-4418)

4416. ‘நீர் எலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவன் ‘என்றலும்
பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத்
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும்.
43

4417. செய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலைப்
புரசை யானை அ(ன்)னான் புகலோடும் அவ்
விரைசெய் வார்குழல் தாரை விலங்கினாள்.
44

4418. விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள்.
45

இலக்குவனை நோக்கி வந்த மகளிர் குழாத்தின் தோற்றம்

4419. வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட
மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ
பல்வகைப் புருவக் கொடி பம்பிட
வல்லி ஆயம் வலத்தினின் வந்ததே.
46

இலக்குவன், மகளிர் கூட்டத்தைப் பார்க்க அஞ்சித் திரும்பி நிற்றல்

4420. ஆர்க்கும் நூபுரங்கள் பேரி,
அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப,
மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர,
முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப்
பருவரை அனைய தோளான்.
47

நாணத்தால் தலை குனிந்து நின்ற இலக்குவனை நோக்கித் தாரை கூறுதல்

4421. தாமரை வதனம் சாய்த்து,
தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
நடுங்குவாள், இனைய சொன்னாள்.
48

4422. ‘அந்தம் இல் காலம் நோற்ற
ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோர்க்கும் எய்தல்
ஆம் இயல்பிற்று ஆமே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம்
மனைவரப் பெற்று வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்;
உறுதிவேறு இதனின் உண்டோ?
49

4423. ‘வெய்தின் நீ வருதல் நோக்கி,
வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது,
“திருவுளம் தரெித்தி “ என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன்
அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை? ‘என்றாள்
இசையினும் இனிய சொல்லாள்.
50

இலக்குவன் தாரையை நோக்குதலும் தாயரை நினைந்து வருந்தலும் (4424-4425)

4424. ‘ஆர் கொலோ செய்தார்? ‘என்று
அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள்,
பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை,
இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன்,
தாயரை நினைந்து நைந்தான்.
51

4425. மங்கல அணியை நீக்கி,
மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி,
குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக்
கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
நயனங்கள் பனிப்ப நின்றான்.
52

தாரைக்கு இலக்குவன் த்த மாற்றம் (4426-4427)

4426. ‘இனையராம், என்னை ஈன்ற
இருவரும் ‘என்ன வந்த
நினைவினான், அயர்ப்புச் சென்ற
நெஞ்சினன், நெடிது நின்றான்;
‘வினவினாட்கு எதிரொர் மாற்றம்
விளம்பவும் வேண்டும் ‘என்று, அப்
புனை குழலாட்கு வந்த
காரியம் புகல்வது ஆனான்.
53

4427. “‘சேனையும் யானும் தேடித்
தேவியைத் தருவென் “ என்று,
மானவற்கு த்த மாற்றம்
மறந்தனன், அருக்கன் மைந்தன்;
“ஆனவன் அமைதி வல்லை
அறிக “ என, அருளின் வந்தேன்;
மேல்நிலை அனையான் செய்கை
விளைந்தவா விளம்புக ‘‘ என்றான்.
54

தாரையின் மறுமொழி (4428-4432)

4428. ‘சீறுவாய் அல்லை ஐய!
சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய், நீ அலால் மற்று
ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறுவேறு உலகம் எங்கும்
தூதரை விடுத்து அவ் எல்லை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்;
உதவி மாறு உதவி உண்டோ?
55

4429. ‘ஆயிர கோடி தூதர்,
அரிகணம் அழைப்ப, ஆணை
போயினர்; புகுதும் நாளும்
புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் இனிய நீரே
தணிதிரால்; தருமம் அஃதால்,
தீயன செய்யார் ஆயின்,
யாவரே செறுநர் ஆவார்?
56

4430. ‘அடைந்தவர்க்கு அபயம் நீவிர்
அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால்,
அதுவும்நும் தொழிலே அன்றோ?
மடந்தைதன் பொருட்டால் வந்து,
வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னும்
நிற்குமோ கேண்மை அம்மா?
57

4431. ‘செம்மைசேர் உள்ளத் தீர்கள்
செய்தபேர் உதவி தீர,
வெம்மைசேர் பகையும் மாற்றி,
அரசு வீற்றிருத்தி விட்ட
உம்மையே இகழ்வர் என்னின்,
எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி,
எழுமையும் இழப்பர் அன்றே.
58

4432. ‘ஆண்டபோர் வாலி ஆற்றல்
மாற்றியது, அம்பு ஒன்று ஆனால்,
வேண்டுமோ துணைவர்? நும்பால்
வில்லினும் மிக்கது உண்டோ?
தேண்டுவார்த் தேடுகின்றீர்,
தேவியை; அதனைச் செவ்வே
பூண்டுநின்று உய்தற் பாலார்,
நும்கழல் புகுந்து உேளாரும்.
59

இலக்குவன் சினம் தணிந்தமை கண்டு அனுமன் அருகில் வருதல்

4433. என்று அவள் த்த மாற்றம்
யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வி யாளன்,
அருள்வர, நாணுக் கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும், ‘
‘நீத்தனன் முனிவு ‘என்று உன்னா,
வன் துணை வயிரத் திண்தோள்
மாருதி மருங்கின் வந்தான்.
60

நீயும் மறந்தனையோ?என்று இலக்குவன் அனுமனை வினவ, அவன் மறுமொழி த்தல் (4434-4440)

4434. வந்து அடி வணங்கி நின்ற
மாருதி வதனம் நோக்கி,
‘அந்தமில் கேள்வி நீயும்
அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை? ‘என்றான்;
‘முனிவு இனும் முளைக்கும் ‘என்று அங்கு
‘எந்தை! கேட்டு அருளுக ‘என்னா
இயம்பினன், இயம்ப வல்லான்.
61

4435. ‘சிதைவு அகல் காதல் தாயை,
தந்தையை, குருவை, தயெ்வப்
பதவி அந்தணரை, ஆவை,
பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும், உண்டாம்
மாற்றலாம் மாற்றம்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
ஒழிக்கல் ஆம் உபாயம் உண்டோ?
62

4436. ‘ஐய! நும்மோடும் எங்கள்
அரிக்குலத்து அரசனோடும்
மெய்யுறு கேண்மை ஆகி,
மேலைநாள் விளைவது ஆன
செய்கை, என்செய்கை அன்றோ?
அன்னது சிதையு மாயின்,
உய்வகை எனக்கும் உண்டோ?
உணர்வு மாசு உண்டது அன்றோ?
63

4437. ‘தேவரும், தவமும், செய்யும்
நல் அறம் திறமும், மற்றும்
யாவரும், நீரே என்பது,
என்வயின் கிடந்தது; எந்தாய்!
ஆவது நிற்க, சேரும்
அரண் உண்டோ? அருள் உண்டு அன்றே
மூவகை உலகும் காக்கும்
மொய்ம்பினீர்! முனிவு உண்டானால்?
64

4438. ‘மறந்திலன், கவியின் வேந்தன்;
வயம் படை வருவிப்பாரைத்
திறம்திறம் ஏவி, அன்னார்
சேர்வது பார்த்து, தாழ்த்தான்;
அறம்துணை நுமக்கு உற்றான்தன்
வாய்மை, இன்று அழியுமாகில்,
பிறந்திலன் அன்றே? ஒன்றோ
நரகமும் பிழைப்பது அன்றால்.
65

4439. ‘உதவாமல் ஒருவன் செய்த
உதவிக்குக் கைம்மாறு ஆக
மதம் யானை அனைய மைந்த!
மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான்
முன்சென்று, செறுநர் மார்பில்
உதையானேல், உதையுண்டு ஆவி
உலையானேல், உலகில் மன்னோ?
66

4440. ‘ஈண்டு, இனி நிற்றல் என்பது
இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேல், நும்
கேண்மைதீர் வினையிற்று ஆமால்;
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய!
நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த
கவிகுலக் கோனொடு ‘என்றான்.
67

அநுமனது வாய்மொழி கேட்டு இலக்குவன் சீற்றம் தணிதல்

4441. மாருதி மாற்றம் கேட்ட
மலைபுரை வயிரம் தோளான்
தீர்வினை சென்று நின்ற
சீற்றத்தான், சிந்தை செய்தான்
‘ஆரியன் அருளின் தீர்ந்தான்
அல்லன்; வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிது ஆக செய்த
சிறுமையான் ‘என்னும் பெற்றி.
68

இலக்குவன் அநுமனை நோக்கிக் கூறுதல் (4442-4447)

4442. அனையது கருதி, பின்னர்,
அரி குலத்தவனை நோக்கி,
‘நினை ஒரு மாற்றம் இன்னே
நிகழ்த்துவது உளது; நின்பால்
இனையன த்தற்கு ஏற்ற;
எண்ணுதி இவை நீ ‘என்னா,
வனைகழல் வயிரத் திண்தோள்
மன் இளம் குமரன் சொல்வான் :
69

4443. தேவியைக் குறித்துச் செய்த
சீற்றமும் மானத் தீயும்
ஆவியைக் குறித்து நின்ற
ஐயனை; அதனைக் கண்டேன்,
கோ இயல் தருமம் நீங்க,
கொடுமையோடு உறவு கூடிப்
பாவியர்க்கு ஏற்ற செய்கை
கருதுவன்; பழியும் பாரேன்.
70

4444. ‘ஆயினும், என்னை யானே
ஆற்றி நின்று, ஆவி உற்று,
நாயகன்தனையும் தேற்ற
நாள்பல கழிந்த; அன்றேல்,
தீயும், இவ் உலகம் மூன்றும்;
தேவரும் வீவர்; ஒன்றோ?
வீயும், நல் அறமும்; போகா
விதியை யார் விலக்கல் பாலார்?‘‘
71

4445. ‘உன்னைக் கண்டு, உம்கோன், தன்னை,
உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னைக் கண்டனன் போல் கண்டு,
இந்நாள் இடை நெடிது வைகி,
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்த்தான்;
அன்று எனில், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள் தன்னை
நாடுதல் விலக்கல் பாற்றோ?
72

4446. ‘ஒன்றுமோ, வானம் அன்றி
உலகமும் பதினால் உள்ள
வென்றி மாக் கடலும் ஏழ் ஏழ்
மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்து உள்ளே
எனின், அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம்
தாழ்வித்தல் தருமம் அன்றால்.
73

4447. ‘தாழ்வித்தீர் அல்லீர்; பல்நாள்
தருக்கிய அரக்கர் தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல்
வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித் தீயாளர் துன்பம்
கிளர்வித்தீர்; பாவம் தன்னை
மூள்வித்தீர்! முனியாதானை
முனிவித்தீர் ‘முடிவின் ‘என்றான்.
74

அநுமன் இலக்குவனுக்கு ஆறுதலும் உறுதியும் கூறி அவனைச் சுக்கிரீவன்பால் வருமாறு அழைத்தல்

4448. தோன்றல் அஃது த்தலோடும்,
மாருதி தொழுது, ‘தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போய
பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம் என்னின்
இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து உன்
தம்முனைச் சார்தி ‘என்றான்.
75

இலக்குவன், அநுமனது வார்த்தைக்கு இசைந்து அவனொடும் சுக்கிரீவன்பால் செல்லுதல்

4449. ‘முன்னும், நீ சொல்லிற்று அன்றோ
முயன்றது? முற்றுங் காலை
இன்னும் நீ இசைத்த செய்வான்
இயைந்தனம் ‘என்று கூறி,
அன்னது ஓர் அமைதியான்தன்
அருள் சிறிது அறிவான் நோக்கி,
பொன்னின் வார் சிலையினானும்,
மாருதியோடும் போனான்.
76

தாரை, மகளிர்கூட்டத்துடன் திரும்பிச் செல்லுதல்

4450. அயில் விழி, குமுதச் செவ்வாய்,
சிலைநுதல், அன்னப் போக்கின்,
மயில் இயல், கொடித்தேர் அல்குல்,
மணி நகை, திணிவேய் மென்தோள்,
குயில் மொழி, கலசக் கொங்கை
மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
புயல் இயல் கூந்தல், மாதர்
குழாத்தொடும் தாரை போனாள்.
77

அங்கதன் இலக்குவனை வணங்கி அவன் பணித்தவண்ணம் அவனது வருகையைச் சுக்கிரீவனுக்கு உணர்த்தச் செல்லுதல்

4451. வல்ல மந்திரியரோடு
வாலி காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன
அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி,
‘விரைவின் என் வரவு வீர!
சொல்லுதி நுந்தைக்கு ‘என்றான்;
‘நன்று ‘எனத் தொழுது போனான்.
78

இலக்குவன் சினத்துடன் வந்திருத்தலை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தரெிவித்தல்

4452. போனபின், தாதை கோயில்
புக்கு, அவன் பொலம்கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும்
தைவந்து, தடக்கை வீரன்,
‘மானவற்கு இளையோன் வந்து
உன் வாயிலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலை மேலும்
பெரிது; இது விளைந்தது ‘என்றான்.
79

இலக்குவன் வெகுண்டு வருதற்குரிய காரணம் யாது? எனச் சுக்கிரீவன் அங்கதனை வினவுதல்

4453. அறிவுற்று, மகளிர் வெள்ளம்
அலமரும் அமலை நோக்கிப்
பிரிவுற்ற மயக்கத்தான், முந்து
உற்றது ஓர் பெற்றி ஓரான்,
‘செறி பொன் தார் அலங்கல் வீர!
செய்திலம் குற்றம்; நம்மைக்
கறு உற்ற பொருளுக்கு என்னோ
காரணம் கண்டது? ‘என்றான்.
80

அங்கதன், நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தல் (4454-4459)

4454. “இயைந்த நாள் எந்தை நீ சென்று
எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்;
மெய் இலை ‘‘ என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம்; மற்று ஈது
உற்றது செய்கை; முற்றும்
நயம் தரெி அனுமன் வேண்ட,
நல்கினன், நம்மை இன்னும்.
81

4455. வருகின்ற வேகம் நோக்கி,
வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில்
பொன் கதவு அடைத்து, குன்றம்
அருகு ஒன்றும் இல்லா வண்ணம்
வாங்கினர் அடுக்கி, மற்றும்
தரெிகின்ற சினத் தீப் பொங்க,
செருச் செய்வான் செருக்கி நின்றார்.
82

4456. ‘ஆண்தகை, அதனை நோக்கி,
அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டா முன்னம்,
தறெ்கொடு வடக்கும் தேய
நீண்ட கல் மதிலும், கொற்ற
வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப்
பொடியொடும் கெழீஇய அன்றே.
83

4457. ‘அந்நிலை கண்ட திண்தோள்
அரிக்குலத்து அனிகம், அம்மா!
எந்நிலை நின்றது என்கேன்?
யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்?
இந்நிலை கண்ட அன்னை,
ஏந்து இழை ஆயத்தோடு,
மின் நிலை வில்லினானை
‘வழி எதிர் விலக்கி நின்றாள்.
84

4458. ‘மங்கையர் மேனி நோக்கான்,
மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப்
புகல்கிலன்; பொருமி நின்றான்;
நங்கையும் இனிது கூறி,
‘நாயக! நடந்தது என்னோ
எங்கள்பால்? ‘என்னச் சொன்னாள்;
அண்ணலும் இனைய சொன்னான்.
85

4459. ‘அது பெரிது அறிந்த அன்னை,
அன்னவன் சீற்றம் மாற்றி,
“விதிமுறை மறந்தான் அல்லன்;
வெம் சினச் சேனை வெள்ளம்
கதும் என கொணரும் தூது
கல் அதர்ச் செல்ல ஏவி,
எதிர்முறை இருந்தான் ‘‘ என்றாள்;
இது இங்குப் புகுந்தது ‘என்றான்.
86

இலக்குவனது வருகையை எனக்குத் தரெிவியாதது என் ‘எனச் சுக்கிரீவன் அங்கதனை நோக்கி வினவுதல்

4460. சொற்கு உரித்தான எல்லாம்
சொல்லலும், அருக்கன் தோன்றல்,
‘நிற்க உரியார்கள் யாவர்,
அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியான், இத்தன்மை
வெகுளியின், விரைவின் எய்த,
எற்கு யாது நீர் இது
இயற்றியது என்னை? ‘என்றான்.
87

அங்கதன் மறுமொழி

4461. ‘உணர்த்தினென் முன்னம்; நீ அஃது
உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி,
மாருதிக்கு க்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன்தார்
எறுழ் வலித் தடந்தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும்
காணுதல் கருமம் ‘என்றான்.
88

சுக்கிரீவன், மதுவுண்டு மதி மயங்கித் தன் கடமையினை மறந்த குற்றத்தினை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டு கூறுதல் (4462-4470)

4462. உறவுண்ட சிந்தையானும்
செய்வான் : ‘ஒருவர்க்கு இன்னம்
பெறல் உண்டே, அவரால் ஈண்டு
யான் பெற்ற பேர் உதவி? உற்றது
இறல் உண்டோ? என்னின் தீர்வான்
இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன்; காண
நாணுவன், மைந்த! ‘என்றான்.
89

4463. ‘ஏயின இது அலால் மற்று
ஏழமைப் பாலது என்னோ?
“தாய் இவள், மனைவி ‘என்னும்
தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று இது;
அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம்;
மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்!
90

4464. “‘தெளிந்து தீவினையைச் செற்றோர்
பிறவியின் தீர்வர் “ என்ன,
விளிந்து இலா உணர்வினோரும்,
வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி
நறவு உண்டு நிறைகின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை
நெய்யினால் அவிக்கின்றாரின்.
91

4465. “‘தன்னைத் தான் உணரத் தீரும்,
தகை அறு பிறவி “ என்பது
என்னத்தான் மறையும் மற்றைத்
துறைகளும் இசைத்த, எல்லாம்,
முன்னைத்தான் தன்னை ஓரா
முழுப்பிணி அழுக்கின் மேலே,
பின்னைத்தான் பெறுவது, அம்மா ‘
நறவு உண்டு திகைக்கும் பித்தோ?
92

4466. ‘அளித்தவர், அஞ்சும் நெஞ்சின்
அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம்
குறைத்தவர், அன்றி, வேரி
ஒளித்தவர், உண்டு, மீண்டு, இவ்
உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற
கதி ஒன்று கண்டது உண்டோ?
93

4467. ‘செற்றதும் பகைஞர், நட்டார்
செய்த பேர் உதவிதானும்,
கற்றதும், கண் கூடாகக்
கண்டதும், கலை வலாளர்
சொற்றதும், மானம் வந்து
தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்
உற்றதும் உணரார் ஆயின்,
இறுதி வேறு இதனின் உண்டோ?
94

4468. ‘வஞ்சமும், களவும், பொய்யும்,
மயக்கமும், மரபு இல் கொட்பும்,
“தஞ்சம் “ என்றாரை நீக்கும்
தன்மையும், களிப்பும், தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும்,
கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்,
நரகினை நல்காது அன்றே?
95

4469. ‘கேட்டனன், ‘நறவால் கேடு
வரும் ‘என; கிடைத்த அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக்
கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி ப்பது என்னே?
விரைவின் வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் நான்
முடிவதற்கு ஐயம் உண்டோ?
96

4470. ‘ஐய! நான் அஞ்சினேன், இந்
நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும்
கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம்
விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன
சேவடி சிதைக்க ‘என்றான்.
97

சுக்கிரீவன், இலக்குவனை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அங்கதனை அனுப்பித் தான் சுற்றத்தொடும் அரண்மனை வாயிலில் வந்து நிற்றல்

4471. என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு
எதிர் கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு, ‘இன்னும் நீயே
நணுகு ‘என அவனை ஏவி,
தன் துணைத் தேவிமாரும்
தமரொடும் தழுவ, தானும்
நின்றனன், நெடிய வாயில்
கடைத்தலை, நிறைந்த சீரான்.
98

இலக்குவனை வரவேற்கும் நிலையில் கிட்கிந்தை நகரம் பெற்ற அணிநலம் (4472 – 4473)

4472. த்த செம் சாந்தும், பூவும்,
சுண்ணமும், புகையும், ஊழின்
நிரைத்த பொன்குடமும், தீப
மாலையும், நிகர் இல் முத்தும்
குரைத்து எழு விதானத்தோடு
தொங்கலும், கொடியும், சங்கும்,
இரைத்து இமிழ் முரசும், முற்றும்
இயங்கின, வீதி எல்லாம்.
99

4473. தூய திண் பளிங்கின் செய்த
சுவர்களில், தலத்தில், சுற்றி
நாயக மணியிற் செய்த
நனி நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோர்
அயர்வுற, ‘கை விலோடும்
ஆயிர மைந்தர் வந்தார்
உளர் ‘எனப் பொலிந்தது, அவ் ஊர்.
100

தன்னை நோக்கிவந்த அங்கதனைக் கண்ட இலக்குவன் ‘எங்கிருந்தான் நுங்கோமான்? ‘என வினவ, அவன் மறுமொழி பகர்தல்

4474. அங்கதன், பெயர்த்தும் வந்து ஆண்டு
அடிதொழுதானை, ஐயன்,
‘எங்கு இருந்தான் நும் கோமான்? ‘
என்றலும், ‘எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக்
கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க ஏறு அனைய வீர!
செய்தவச் செல்வன்‘ என்றான்.
101

சுக்கிரீவன் இலக்குவனை எதிர்கொள்ளுதல் (4475-4477)

4475. சுண்ணமும் தூசும் வீசி,
சூடகத் தொடிக் கைம் மாதர்,
கண் அகன் கவரிக் கற்றைக்
கால் உற, கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன
வெண் குடை விளங்க, வீர
வண்ண வில் கரத்தான் முன்னர்,
கவிக் குலத்து அரசன் வந்தான்.
102

4476. அருக்கியம் முதல ஆய
அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த,
முரசு இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு இனம் முனிவர் ஓத,
இசை திசை அளப்ப, யாணர்த்
திருக்கிளர் செல்வம் நோக்கித்
தேவரும் மருளச் சென்றான்.
103

4477. வெம் முலை மகளிர் வெள்ளம்
மீன் என விளங்க, விண்ணில்
சும்மைவால் மதியம் குன்றில்
தோன்றியது எனவுந் தோன்றிச்
செம்மலை எதிர்கோள் எண்ணித்
திருவொடு மலர்ந்த செல்வன்,
அம் மலை உதயஞ் செய்யும்
தாதையும் அனையன் ஆனான்.
104

இலக்குவன் சுக்கிரீவனைக் கண்டவுடன் தன் மனத்து எழுந்த சீற்றத்தைத் தணித்துக் கொள்ளுதல்

4478. தோற்றிய அரிக்குலத்து அரசை தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது அவ் வழிச்
சீற்றம்; அங்கு அதுதனை தெளிந்த சிந்தையால்
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான்.
105

சுக்கிரீவனும் இலக்குவனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, பரிவாரங்களுடன் அரண்மனையை அடைதல்

4479. எழு என மலை என எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும்; தழுவி தையலார்
குழுவொடும் வீரர்தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு இல் பொற் கோபுரத்து உறையுள் எய்தினார்.
106

இலக்குவனைச் சிங்காதனத்தில் அமரும்படி சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாமை (4480-4481)

4480. அரியணை அமைந்தது காட்டி ‘ஐய! ஈண்டு
இரு ‘ எனக் கவிக்குலத்து அரசன் ஏவலும்
‘திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு
உரியதோ இஃது? ‘என மனத்தின் உன்னுவான்.
107

4481. ‘கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்
எல் அணை மணிமுடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூந்தொடர்
மெல் அணை வைகலும் வேண்டுமோ? ‘என்றான்.
108

அது கேட்டுச் சுக்கிரீவன் வருந்திநிற்க, இலக்குவன், தரையில் இருத்தல்

4482. என்று அவன் த்தலும் இரவி காதலன்
நின்றனன்; விம்மினன் மலர்க்கண் நீர் உக;
குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோமகன்.
109

கண்டோர் வருந்துதல்

4483. மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்
அந்தம் இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;
நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார்.
110

திருமஞ்சனம் ஆடி அமுது அருந்தும்படி இலக்குவனைச் சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாது மறுத்துரைத்தல் (4484-4488)

4484. ‘மஞ்சன விதிமுறை மரபின் ஆடினை
எஞ்சல் இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி என அரசு த்தலும்
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுமால்.
111

4485. ‘வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ?
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇக்
கருத்து வேறு உற்றபின் அமிழ்தும் கைக்குமால்.
112

4486. ‘மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கைநீர் அரசன் தேவியைக்
காட்டினை எனின் எமைக் கடலின் ஆர் அமிழ்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால்.
113

4487. ‘பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறு நான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின் நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால்.
114

4488. ‘அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
சென்றனன் கொணர்ந்து ‘அடைதிருத்தினால் அது
நுன் துணைக் கோமகன் நுகர்வது ஆதலான்
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் ‘என்றான்.
115

சுக்கிரீவன் வருந்துதல்

4489. வானர வேந்தனும் ‘இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது; குரக்கு இனத்து எமர்கட்கு ஆம் ‘எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான் அரோ.
116

வருந்திய சுக்கிரீவன் அநுமனை நோக்கி ஒரு வார்த்தை கூறி இராமன் இருக்கும் இடத்திற்கு விரைந்து புறப்படுதல் (4490-4491)

4490. ழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை;
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று
மொழிந்தனன் வரன்முறை போதல் முன்னுவான்.
117

4491. ‘போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறிவலோய்! ‘எனா
ஏயினன் அனுமனை ‘இருத்தி ஈண்டு ‘எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான்.
118

சுக்கிரீவன், தன் பரிவாரங்கள் சூழச் சென்று இராமனை அடைதல் (4492-4497)

4492. அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன்.
119

4493. ஒன்பதினாயிர கோடி ஊகம் தன்
முன் செல பின் செல ஞாங்கர் மொய்ப்பு உற
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்று உற
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்.
120

4494. கொடி வனம் மிடைந்தன; குமிறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே.
121

4495. பொன்னினின் முத்தினின் புனைமென் தூசினின்
மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின்
பின்னின; விசும்பினும் பெரிய; பெட்பு உறத்
துன்னின சிவிகை; வெண் கவிகை சுற்றின.
122

4496. வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும்
தாரினின் பொலம் கழல் தழங்கத் தாரணித்
தேரினில் சென்றனன் சிவிகை பின்செல.
123

4497. எய்தினன் மானவன் இருந்த மால்வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல்
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை துறந்து அயல் செல காதல் முன் செல.
124

சுக்கிரீவன், இராமனிடத்துக் கொண்ட பேரன்பினால் பரதனை ஒத்துத் தோன்றுதல்

4498. கண்ணிய கணிப்பு அரும் செல்வக் காதல் விட்டு
அண்ணலை அடிதொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவிக்குலத்து அரசன் நாள்தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன்.
125

சுக்கிரீவன், இராமன் திருவடிகளை இறைஞ்சுதல்

4499. பிறிவு அருந் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை
அறைமணித் தாரினோடு ஆரம் பார் தொட
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான்.
126

இராமபிரான், சுக்கிரீவனை அன்பினால் தழுவித் தன்னருகில் அமர்த்தி நலம் வினாதல் (4500-4501)

4500. தீண்டலும் மார்பு இடைத் திருவும் நோவுற
நீண்ட பொன் தடக்கையால் நெடிது புல்லினான்;
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே;
127

4501. அயல் இனிது இருத்தி ‘நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே
புயல் பொரு தடைக்கைநீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே குடை? ‘என வினாயினான்.
128

சுக்கிரீவன் விடை பகர்தல்

4502. பொருளுடை அவ் கேட்ட போழ்து வான்
உருளுடைத் தேரினான் புதல்வன் ‘ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ? ‘என்றான்.
129

சுக்கிரீவன் தன் பிழையினை எடுத்துரைத்து இரங்குதல் (4503-4505)

4503. பின்னரும் விளம்புவான் ‘பெருமையோய்! நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
மன்னவ நின்பணி மறுத்து வைகி என்
புன் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன் ‘என்றான்.
130

4504. பெருந்திசை அனைத்தையும் பிசைந்து நேடினேன்
தரும் தகை அமைந்தும் அத்தன்மை செய்திலேன்
திருந்து இழை திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருக்க யான் வாழ்வின் வைகினேன்.
131

4505. ‘இனையன யானுடை இயல்பும் எண்ணமும்
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும்
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ?
வனைகழல் வரிசிலை வள்ளியோய்! ‘என்றான்.
132

இராமபிரான், சுக்கிரீவனது குணம் கொண்டு குற்றம் நீக்கிப் பாராட்டுதல்

4506. திரு உறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து
ஒருவ அருங் காலம் உன் உரிமையோர்
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ! இனையன பகர்தியோ? ‘என்றான்.
133

இராமன் சுக்கிரீவனை நோக்கி ‘அநுமன் எங்குள்ளான் ‘என வினவ, அவன், நாளை சேனையோடு வருவான் ‘எனச் சுக்கிரீவன் விடை கூறுதல் (4507-4508)

4507. ஆரியன் பின்னரும் ‘ஐய! நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்? ‘என
சூரியன் கான்முளை ‘தோன்றுமால் அவன்
நீர் இரும் பரவையின் நெடிய சேனையான்.
134

4508. ‘கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர்
ஓடினர்; நெடும்படை கொணர்தல் உற்றதால் :
நாள்தரக் குறித்ததும் இன்று நாளை; அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.
135

சேனைகள் யாவும் வந்த பின்னர்ச் செய்யத்தக்கது இது என ஆணையிடலாம் எனச் சுக்கிரீவன் கூறுதல்

4509. ‘ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதிநாள் நாளை; நண்ணிய
பின் செய தக்கது பேசல் பாற்று என்றான்.
136

மீண்டு சென்று சேனைகள் வந்தபின் வருக ‘என இராமன் சுக்கிரீவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல்

4510. விரும்பிய இராமனும் ‘வீர நிற்கு இது ஓர்
அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று ‘எனா
‘பெரும்பகல் இறந்தது; பெயர்தி; நின் படை
பொருந்துழி வா ‘என தொழுது போயினான்.
137

இராமன் அங்கதனுக்கு இன்மொழி கூறி அனுப்பிவிட்டுத் தம்பியும் தானும் அவ் விடத்தில் தங்குதல்

4511. அங்கதற்கு இனியன அருளி ‘ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு ‘என்று தாமரைச்
செங்கணான் தம்பியும் தானும் சிந்தையின்
மங்கையும் அவ் வழி அன்று வைகினான்.
138

இராமன் பணித்தவண்ணம், தான் கிட்கிந்தைக்குச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றை இலக்குவன் எடுத்துரைத்தல்

4512. சேய் உயர் கீர்த்தியான் ‘கதிரின் செம்மல் பால்
போயதும் அவ் வயின் புகுந்த யாவையும்
ஓய்வுறாது உணர்த்து ‘என உணர்த்தினான் அரோ
வாய்மையா உணர்வுறும் வலிய மொய்ம்பினான்.
139

கவிக்கூற்று

4513. அன்று அவண் இறுத்தனன்; அலரி கீழ்த் திசைப்
பொன் திணி நெடுவரை பொலிவு உறாத முன்
வன் திறல் தூதுவர் கூவ வானரக்
குன்று உறழ் நெடும்படை அடைதல் கூறுவாம்.
140

 

Previous          Next