4. ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ.

5. நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

6. வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது? எனில்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கதை மாட்சி தெரிக்கவே.

7. துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ.

8. முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?

9. அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ

Previous          Next