அநுமன் கருதுதல்

5453. ‘உண்டு துணை என்னல் எளிதோ
உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள்
இன்னல் புரிகின்றாள்;
அண்டமுதல் நாயகனது
ஆவி அனையாளைக்
கொண்டு அகல்வதே கருமம்! ‘
என்று உணர்வு கொண்டான்.
1

பிராட்டிபால் அநுமன் வேண்டல் (5454-5462)

5454. கேட்டி அடியேன் ;
முனிந்தருளல்; கேள், ஆய்!
வீட்டியிடும் மேல் அவனை;
வேறல் வினை அன்றால்;
நீட்டி இனி என் பயன்?
இராமன் எதிர் நின்னைக்
காட்டி அடிதாழ்வென்; இது
காண்டி இது காலம்!
2

5455. பொன் திணி பொலம் கொடி! என்
மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது
இருக்க : துயர் விட்டாய்,
இன்துயில் விளைக்க : ஒர்
இமைப்பின், இறை வைகும்
குன்று இடை உனைக்கொடு
குதிப்பென்; இடை கொள்ளேன்.
3

5456. அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து உதிர நூறி என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும் நெடியோன்பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன்.
4

5457. ‘இலங்கையொடும் ஏகுதிகொல்! ‘
என்னினும், இடந்து என்
வலம் கொள் ஒரு கைத்தலையில்
வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி
வெம் சிலையினோர்தம்
பொலம்கொள் கழல் தாழ்குவென்;
இது, அன்னை! பொருள் அன்றால்.
5

5458. அருந்ததி! த்தி! அழகற்கு அருகு சென்று ‘உன்
மருந்து அனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் ‘எனப் பகரின் என் அடிமை என் ஆம்?
6

5459. புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்
விண்டவர் நலத்தையும் வலத்தையும் விரிப்பேன்
‘கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்! ‘எனக் கழறுகேனோ?
7

5460. ‘இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி நிருதன் குலம் முடித்து வினைமுற்றிப்
பொருக்க அகல்க ‘என்னினும் அது இன்று புரிகின்றேன்.
8

5461. இந்து நுதல்! நின்னொடு இவண் எய்தி இகல் வீரன்
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்த தெளிவோடும்
அந்தம் இல் அரக்கர்குலம் அற்று அவிய நூறி
நந்தல் இல் புவிக்கண் இடர் பின் களைதல் நன்றால்.
9

5462. ‘வேறு இனி விளம்ப உளது அன்று; விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு; பின்னே
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு கடிது! ‘என்று தொழுது இன் அடி பணிந்தான்.
10

பிராட்டி அநுமன் ஆற்றல் கருதுதல்

5463. ஏய நல்மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான்தனக்கு
‘ஆய தன்மை அரியதன்றால் ‘எனத்
தூய மென் சொல் இனையன சொல்லினாள்.
11

அநுமன் வேண்டுகோட்கு இசையாத பிராட்டி கூற்று (5464-5478)

5464. அரியது அன்று நின் ஆற்றலுக்கு; ஏற்றதே;
தரெிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு; அது என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால்.
12

5465. வேலையின் இடையே வந்து வெய்யவர்
கோலி வெம் சரம் நின்னொடும் கோத்தபோது
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும் தனிமையோய்.
13

5466. அன்றியும் பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெம் சிலை மாசு உணும்; வேறு இனி
நன்றி என்பவோ? வஞ்சித்த நாய் அவன்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?
14

5467. கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள்
உண்டபோது அன்றி யான் உளென் ஆவெனோ?
15

5468. வெற்றி நாண் உடை விலியர் வில் தொழில்
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயினபோது அன்றிப்
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ?
16

5469. பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர்
என்பு மால்வரை ஆகிலதே எனின்
இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல்
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்?
17

5470. அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.
18

5471. வேறும் உண்டு ; கேள் அது மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை
ஆறும் ஐந்து பொறி நின்னையும் ஆண் எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ?
19

5472. தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? இமைப்பின் முன்
மாண்டு தீர்வன் என்றே நிலம் வன் கையால்
கீண்டுகொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையான்.
20

5473. ‘மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடில்
தேவு பொன் தலை சிந்துக நீ! ‘எனப்
பூவின் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு : எனது ஆர் உயிர் தந்ததால்.
21

5474. ‘அன்ன சாபம் உளது ‘என ஆண்மையான்
மின்னும் மௌலியன் வீடணன் மெய்ம்மையான்
கன்னி என்வயின் வைத்த கருணையாள்
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான்.
22

5475. ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற; அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நாணுடைத்
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்.
23

5476. ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐய! நின் மெய் உணர் கண்களால்.
24

5477. தீர்வு இலேன் இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இவ் வீங்கும் நீர்
நார நாள் மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால்.
25

5478. “ஆதலான் அது காரியம் அன்று; அயர்
வேத நாயகன்பால் இனி மீண்டனை
போதல் காரியம்! “ என்றனள் பூவை; அக்
கோது இலானும் இனையன கூறினான்.
26

சீதையை அநுமன் பாராட்டல்

5479. ‘நன்று! நன்று! இவ் உலகு உடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்!
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான்
நின்ற சங்கை இடரொடு நீங்கினான்.
27

இராமனிடம் யாது கூறவேண்டும் என்று அநுமன் கேட்டல்

5480. ‘இருளும் ஞாலம் இராகவனால் இது
தரெுளும் நீ இனிச் சில்பகல் தீங்குறல்;
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய்! ‘என்று அடியின் இறைஞ்சினான்.
28

சீதை அநுமனிடம் கூறியவை (5481-5490)

5481. இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன் : அந்த
மன்னன் ஆணை! இதனை மனக்கொள் நீ!
29

இராமனிடம் கூறுமாறு சீதை கூறியது

5482. ஆரம் தாழ் திரு மார்பு கு அமைந்தது ஓர்
தாரம் தான் அலெனேனும் தயா எனும்
ஈரம் தான் அகத்து இல்லை என்றாலும் ‘தன்
வீரம் காத்தலை வேண்டு ‘என்று வேண்டுவாய்.
30

இலக்குவன்பால் கூறுமாறு கூறியது

5483. ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை கூறுதி : மன் அருளால் எனைக்
காத்திருந்த தனக்கே கடன் இடை
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய்.
31

மீட்டும் இராமன்பால் கூறுமாறு கூறியது

5484. ‘திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர்க்
கங்கை ஆற்றங் கரை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்க என்று செப்புவாய்!
32

மாமியர்பால் கூறுமாறு கூறியது

5485. சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன்பால் அருள் இன்மையால்
மறக்குமாயினும் நீ மறவேல் ஐயா!
33

மீட்டும் இராமனிடம் கூறுமாறு கூறியவை (5486-5487)

5486. வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!
34

5487. ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்டல் ஆவது ஒர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்.
35

சீதை மீட்டும் அநுமனிடம் கூறியன (5488-5490)

5488. அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போதவும்
விரசு கோலங்கள் காண விதி இலேன் :
செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன்!
36

5489. தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ?
37

5490. எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி! கவியின் மன்னனைச்
‘சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப் போய்
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு! ‘என்பாய்!
38

அநுமன் பிராட்டியைத் தேற்றுதல் (5491-5526)

5491. இத்திறம் அனையவள் இயம்ப ‘இன்னமும்
தத்துறவு ஒழிந்திலை தையல் நீ! ‘எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன்
ஒத்தன தரெிவுற உணர்த்தினான் அரோ.
39

5492. வீவாய் நீ இவண் மெய் அஃதே!
ஓய்வான் இன் உயிர் உய்வானாம்!
போய்வான் அந்நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும்! மெய் அன்றோ!
40

5493. கைத்து ஓடும் சிறை கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்!
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்!
இத்தோடு ஒப்பது யாது உண்டே?
41

5494. நல்லோய்! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எம் கோனும்
வில்லோடும் செலவேண்டாவோ?
42

5495. நீந்தா இன்னலின் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெருஞ் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார்?
43

5496. ‘நன்று ஆம் நல்வினை நல்லோரைத்
தின்றார்தம் குடர் பேய் தின்னக்
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு! ‘
என்றானுக்கு இவை ஏலாவோ?
44

5497. மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கிலம் மீள்வாமே?
நாட்டார் நல்லவர் நல்நூலும்
கேட்டார் இவ் கேட்பாரோ?
45

5498. ‘பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்
மாண்டாள்! ‘என்று மனம் தேறி
மீண்டால் வீரம் விளங்காதோ?
46

5499. கெட்டே நீ உயிர் கேதத்தால்
விட்டாய் என்றிடின் வெவ் அம்பால்
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும்
சுட்டாலும் தொலையாது அன்றோ?
47

5500. முன்னே கொல்வான் மூவுலகும்
பொன்னே! பொங்கிய போர்வில்லான்
என்னே! நின்நிலை ஈது என்றால்
பின்னே செம்மை பிடிப்பானோ?
48

5501. கோள் ஆனார் உயிர் கோேளாடும்
மூளா வெம் சினம் முற்று ஆக
மீளாவேல் அயல் வேறு உண்டோ?
மாளாதோ புவி வானோடும்?
49

5502. தாழித் தண் கடல் தம்மோடும்
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம் அன்று
ஆழிக் கையவன் அம்பு அம்மா!
ஊழி தீ என உண்ணாதோ?
50

5503. ‘படுத்தான் வானவர் பற்றாரைத்
தடுத்தான் தீவினை தக்கோரை
எடுத்தான் நல்வினை எந்நாளும்
கொடுத்தான் ‘என்று இசை கொள்ளாயோ?
51

5504. சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின் எல்லோரும்
நல்நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல்லறம் உண்டானால்?
52

5505. புளிக்கும் கண்டகர் புண் நீருள்
குளிக்கும் பேய் குடையும் தோறும்
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ?
53

5506. ஊழியின் இறுதியின் உரும் எறிந்து எனக்
கேழ்கிளர் சுடுகணை கிழித்த புண்பொழி
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்று ஆகி நின்று இரைப்பக் காண்டியால்!
54

5507. சூல் இரும் பெருவயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்பு அரும் வனப்ப வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்கக் காண்டியால்!
55

5508. விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம்சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்
புண்ணின் நீர்ப் புணரியில் படிந்து பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால்!
56

5509. கரம் பயில் முரசு இனம் கறங்கக் கைதொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை குனிப்பக் காண்டியால்!
57

5510. புரை உறு புன் தொழில் அரக்கர் புண்பொழி
திரை உறு குருதி ஆறு ஈர்ப்பச் செல்வன
வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின
கரை உறு நெடுங் கடல் தூர்ப்பக் காண்டியால்!
58

5511. வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உகச்
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்
அனகன்கை அம்பு எனும் அளவில் ஊதையால்
கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால்!
59

5512. தாக்கு இகல் இராவணன்
தலையில் தாவின,
பாக்கியம் அனைய நின்
பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை
நுதிகொள் மூக்கினால்,
காக்கைகள் கவர்ந்துகொண்டு
உண்ணக் காண்டியால்!
60

5513. மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை அவ் அவை
கால் உறக் கணை தடிந்து இடுவ காண்டியால்!
61

5514. நீர்த்து எழு கண மழை வழங்க நீலவான்
வேர்த்தது என்று இடையிடை வீசும் தூசு போல்
போர்த்து எழு பொலம் கொடி இலங்கைப் பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால்!
62

5515. நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலைமிக்கு ஆற்றொடு மீள; வேலைசூழ்
ஞாலம் முற்று உறு கடை உகத்தும் நச்சு அறாக்
காலனும் வெறுத்து உயிர் காலக் காண்டியால்!
63

5516. அணங்கு இளமகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை வாவி வாய்ப்
பிணங்கு உறு குடர்முறை பிடித்த மாலைய
கணம் கிளர் கழுது இனம் குளிப்பக் காண்டியால்!
64

5517. செப்புறல் என்பல? தயெ்வ வாளிகள்
இப்புறத்து அரக்கரை முருக்கி ஏகின
முப்புறத்து உலகையும் துருவி முட்டலால்
அப்புறத்து அரக்கரும் அவியக் காண்டியால்!
65

5518. ஈண்டு ஒருதிங்கள் நீ இடரின் வைகவும்
வேண்டுவது அன்று; யான் விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பின்னும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒருபொழுதும் ஆற்றுமோ?
66

5519. ஆவி உண்டு என்னும் ஈது உண்டு; உன் ஆர் உயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்டத் தீகிலாப்
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்து இலா
கா இலை கொடி இலை நெடிய கான் எல்லாம்.
67

5520. சோகம்வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ?
மேகம் வந்து இடித்து உரும் ஏறு வீழினும்
ஆகமும் புயங்களும் அழுந்த ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ?
68

5521. மத்து உறு தயிர் என வந்து சென்று இடை
தத்து உறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்தும் நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
69

5522. இந்நிலை உடையவன் தரிக்கும் என்றி? என்
மெய்ந்நிலை உணர்ந்துழி விடை தந்தீதியேல்
பொய்ந்நிலை அன்றி யான் புகன்ற யாவும் உன்
கைந்நிலை நெல்லி அம் கனியில் காட்டுகேன்.
70

5523. தீர்த்தனும் கவிக்குலத்து இறையும் தேவி! நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னம் மாக்கடல்
தூர்த்தன இலங்கையைச் சூழ்ந்து மாக்குரங்கு
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி! அன்னை நீ!
71

5524. எண் அரும் பெரும்படை நாளை இந்நகர்
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை! நீ
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவில்
கண்ணனை என் நெடு வெரிந் இல் காண்டியால்!
72

5525. அங்கதன் தோள்மிசை இளவல் அம்மலைப்
பொங்கு இளங்கதிர் எனப் பொலியப் போர் படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் மையலும்
சங்கையும் நீங்குதி! தனிமை நீங்குவாய்.
73

5526. “குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே
விராவு அரும் நெடும் சிறை மீட்கலான் எனில்
பராவரும் பழியொடு பாவம் பற்றுதற்கு
இராவணன் அல்லனே இராமன்? “ என்றனன்.
74

அநுமன் தேற்றத் தேறிய பிராட்டி பேசுதல் (5527-5531)

5527. ஆக இம்மொழி ஆசு இல கேட்டு அறிவு உற்றாள்
ஓகை கொண்டு களிக்கும் மனத்தவள் உய்ந்தாள்
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள்
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள்.
75

பிராட்டி அடையாளம் கூறல் (5528-5530)

5528. ‘சேறி, ஐய! விரைந்தனை;
தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும்
விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி
உற்றன; கோமாற்கு
ஏறும் ‘என்று இவை சொல்லினள்,
இன்சொல் இசைப்பாள்.
76

5529. நாகம் ஒன்றிய நல்வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய்!
77

5530. ‘என் ஒர் இன் உயிர் மென் கிளிக்கு
ஆர்பெயர் ஈகேன்?
மன்ன! ‘என்றலும், ‘மாசறு
கேகயன் மாது என்
அன்னை தன்பெயர் ஆக்கு! ‘என
அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி!
மெய்ம்மை தொடர்ந்தோய்!
78

பிராட்டி கைக்கொண்ட சூடாமணியின் ஒளி பரவுதல் (5531-5533)

5531. என்று த்து இனி இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே
வென்றது அச்சுடர் மேலொடு கீழ் உற மெய்யால்.
79

5532. வாங்கினாள் தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா
ஏங்கினாள்; அவ் அநுமனும் ‘என்கொல் இது! ‘என்னா
வீங்கினான் வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும்.
80

5533. ‘மஞ்சு அலங்கு ஒளியோனும் இம் மாநகர் வந்தான்
அஞ்சலன்? ‘என வெம் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன் தாழ்
கஞ்சமும் மலர்வு உற்றன; காந்தின காந்தம்.
81

அநுமன் சூடாமணியைக் காணுதல்

5534. கூந்தல் மென்மழை கொள் முகில் மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது; மெல் இயல் தன் திருமேனி
சேந்தது; அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது; காட்டினள் மாருதி கண்டான்.
82

சீதை அநுமனிடம் சூடாமணியைத் தருதல்

5535. ‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்.
83

சூடாமணி பெற்ற அநுமன் செல்லுதல

5536. தொழுது வாங்கினன் சுற்றிய தூசினில் முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து
அழுது மும்மை வலங்கொடு இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால்.
84

 

Previous          Next