எங்கு எய்தியது? என்ற இராவணனுக்குத் தூதுவர் கூறுதல்

9386. ஏம்பல் உற்று எழுந்த மன்னன்
‘எவ்வழி எய்திற்று ‘என்றான்;
கூம்பல் உற்று உயர்ந்த கையர்,
ஒருவழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும்
இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த
தானைக்கு உலகு இடம் தான் இல் என்றார்.
2

அரக்கர் சேனை இலங்கையை எய்துதல்

9387. மண் உற நடந்த தானை
வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும்
மிதித்தனர் ஏக ஏக,
கண்ணுறல் அரிது காண்
அக் கற்பத்தின் முடிவில் கார்போல்
எண்ணுற அரிய சேனை
எய்தியது, இலங்கை நோக்கி.
3

9388. வாள்தனில் வயங்க மின்னா;
மழை அதின் இருள மாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை,
இடியது முழங்க மாட்டா;
மீட்டு இனி ப்பது என்னே?
வேலைமீச் சென்றது என்னத்
தீட்டிய படையும், மாவும்,
யானையும், தேரும், செல்ல.
4

9389. உலகினுக்கு உலகு போய்ப் போய்,
ஒன்றின் ஒன்று ஒதுங்கல் உற்ற,
தொலைவு அருந்தானை மேன்மேல்
எழுந்தது தொடர்ந்து சுற்ற,
நிலவினுக்கு இறையும் மீனும்
நீங்கின; நிமிர்ந்து நின்றான்,
அலரியும், முந்து செல்லும்
ஆறுநீத்து, அஞ்சி, அப்பால்.
5

9390. மேற்படர் விசும்பை முட்டி,
மேருவின் விளங்கி, நீண்ட
நால் பெரு வாயில் ஊடும்
இலங்கை ஊர் நடக்கும் தானை;
கார்ப்பெருங் கடலை, மற்றோர்
இடத்தினில் காலன் தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும்
சுமைபொறாது உலகம் என்ன.
6

9391. ‘நெருக்கு உடை வாயிலூடு
புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்துணையே ‘என்னா,
மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற
அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக்கிளர் மேகம் எல்லாம்
ஒருங்கு உடன் கலந்தது என்ன.
7

இராவணன் வந்த சேனையைக் கோபுரத்திலிருந்து காணுதல்

9392. அதுபொழுது, அரக்கர்கோனும்,
அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொது உற நோக்கலுற்றான்,
ஒருநெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும்
வேட்கையான், வேலை ஏழும்
கதும் என ஒருங்கு நோக்கும்
பேதையின் காதல் கொண்டான்.
8

தூதுவர் இராவணனுக்குப் படையினரை வகுத்துக் காட்டுதல்

9393. மாதிரம் ஒன்றின் நின்று,
மாறு ஒரு திசைமேல் மண்டி
ஓதநீர் செல்வது அன்ன
‘தானையை உணர்வு கூடா,
வேத வேதாந்தம் கூறும்,
பொருளினை விரிக்கின்றார் போல்
தூதுவர் அணிகள் தோறும்
வரன்முறை காட்டிச் சொன்னார்.
9

சாகத்தீவினர்

9394. ‘சாகத் தீவினின் உறைபவர்,
தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர்,
தேவரை எல்லாம்
மோகத்தின்பட முடித்தவர்,
மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர்,
இவர் ‘என விரித்தார்.
10

குசைத்தீவினர் இயல்பு

9395. ‘குசையின் தீவினில் உறைபவர்,
கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர்,
வானநாட்டு உறைவோர்
இசையும் செல்வமும் இருக்கையும்
இழந்தது; இங்கு, இவரால்,
விசையம் தாம் என நிற்பவர்,
இவர் நெடு விறலோய்!
11

இலவத் தீவினர் இயல்பு

9396. ‘இலவத் தீவினில் உறைபவர்,
இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன் நகர்
அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன்
வரம்தர, நிமிர்ந்தார்;
உலவைக் காட்டு உறு தீ என
வெகுளி பெற்று உடையார்.
12

அன்றில் தீவினர் இயல்பு

9397. ‘அன்றில் தீவினில் உறைபவர்,
இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடம்
என்றிட மேருக்
குன்றைக் கொண்டு போய்க்
குரைகடல் இட, அறக்குலைந்தோர்
சென்று, ‘இத்தன்மையைத் தவிரும் ‘என்று
இரந்திடத் தீர்ந்தோர்.
13

பவளக் குன்றினர்

9398. பவளக் குன்றினில் உறைபவர்;
வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக்
கன்னியைக் கூட,
அவளில் தோன்றினர், ஐ இரு
கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத்
தேக்கினர், சிலநாள்.
14

கந்தமாதனத்தோர்

9399. ‘கந்த மாதனம் என்பது, இக்
கருங் கடற்கு அப்பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர்கிரி;
அதில் வாழ்வோர்,
அந்த காலத்து அவ்
ஆலகாலத்துடன் பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர்
எண்ணிறந்தவர் இறைவ!
15

மலையத்து மறவோர்

9400. ‘மலையம் என்பது பொதிய
மாமலை : அதில் மறவோர்
நிலையம் அன்னது சாகரத்
தீவு இடை நிற்கும்;
“குலையும் இவ் உலகு “ எனக்
கொண்டு, நான்முகன்கூறி,
“உலைவிலீர்! இதில் உறையும் “ என்று
இரந்திட, உறைந்தார்.
16

புட்கரத் தீவினர்

9401. முக்கரக் கையர், மூஇலை
வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர், சாபத்தால்
இந்நின்ற தலைவர்,
நக்கரக் கடல் நாலொடு
மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை
உறைபவர் புகழோய்!
17

இறலித் தீவினர்

9402. ‘மறலியை, பண்டு தம்
பெருந்தாய் சொல, வலியால்,
புறநிலைப் பெருஞ் சக்கர
மால்வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன்
இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந்தீவிடை
உறைபவர் இவர்கள்.
18

பாதாளத்தர்

9403. வேதாளக் கரத்து இவர், “பண்டு
புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு, எழுவகையாய்
நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர் ‘‘ என,
நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு
அன்பினால் இவண் நடந்தார்.
19

நிருதி குலத்தினர்

9404. ‘நிருதிதன் குலப் புதல்வர்;
நின் குலத்துக்கு நேர்வர்;
“பருதி தேவர்கட்கு “ எனத்தக்க
பண்பினர்; யானைக்
குருதி பெற்றிலரேல், கடல்
ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்து இவர், ஒருத்தர்
ஏழ்மலையையும் எடுப்பார்.
20

பூமிதேவிக்குப் பிறந்தவர்

9405. ‘பார் அணைத்த வெம் பன்றியை
அன்பினால் பார்த்த
காரணத்தின், அனாதியின்
பயந்த பைங்கழலோர்;
பூரணத்தடந் திசைதொறும்
இந்திரன் பொருவு இல்
வாரணத்தினை நிறுத்தியது,
இவர்வரவு அஞ்சி.
21

பாதலத்தின் அடிப்பகுதியில் வாழ்பவர்

9406. மறக்கண் வெஞ்சின மலை என
இந்நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலம் அத்து
உறைகின்ற இகலோர்;
அறக்கண் துஞ்சிலன், ஆயிரம்
பணம் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது,
இவர் தொடர்ந்து ஒறுக்க.
22

காளியின் சினத் தீயில் பிறந்தவர்

9407. ‘காளியைப் பண்டு கண்ணுதல்
காட்டிய காலை,
மூள முற்றிய சினக் கடுந்
தீயிடை முளைத்தோர்;
கூளிகட்கு நல் உடன் பிறந்தார்;
பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு
இமைக்கவும், வருவார்.
23

பாவத்தோடு பிறந்தவர்கள்

9408. ‘பாவம் தோன்றிய காலமே
தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை
என தறெு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும்
உயிர் உணும் கொடியோர்;
சாவம் தோன்றிட, வட திசை
மேல் வந்து சார்வார்.
24

சிவனது நெற்றிக் கண்ணில் பிறந்தவர்

9409. ‘சீற்றம் ஆகிய ஐம்முகன்,
உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடைத்
தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிப் பண்டு உதித்து உளர்
எனக் கொடுந் தொழிலால்
தோற்றினார் இவர் வலி எலாம்
தொலைவுறத் தொலைப்பார்.
25

எமன் குருதியில் பிறந்தவரும் ஆலகாலத்தில்
பிறந்தவரும்

9410. காலன் மார்பிடைச் சிவன்கழல்
பட, பண்டு, கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில்
தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்;
இந்நின்ற தொகையார்,
ஆல காலத்தின், அமிழ்தின் முன்
பிறந்த போர் அரக்கர்.
26

வடவைத் தீயிலும் முப்புறத் தீயிலும் தோன்றியவர்கள்

9411. ‘வடவைத் தீயிடை வாசுகி
கான்ற மாக் கடுவை
இட, அத்தீ இடை எழுந்தவர்
இவர்; இவர், மழையைத்
தடவித் தீநிமிர் குஞ்சியர்
சங்கரன் தடந்தேர்
கடவத் தீந்த வெம் புரத்து இடைத்
தோன்றிய கழலோர்.
27

படையினர் பெருமை (9411-9412)

9412. இனையர் இன்னவர் என்பது
ஓர் அளவு இலர் ஐய!
நினையவும், குறித்து க்கவும்;
அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெருவரங்களும்
தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து
அளவினும் அடங்கா.
28

9413. ‘ஒருவரே சென்று, அவ் உறுதிறல்
குரங்கையும், உரவோர்
இருவர் என்றவர் தம்மையும்,
ஒருகையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்?
வானவர்க்கு அரிய
திருவ என்றனர் தூதுவர் :
இராவணன் செப்பும்.
29

இராவணன் வினாவும் தூதுவர் விடையும்

9414. ‘எத் துணைத்து இதற்கு எண் எனத்
தொகை வகுத்து, இயன்ற
அத்திறத்தினை அறைதிர் ‘என்று
செய; அவர்கள்
‘ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம்
உளது ‘என த்தார்,
பித்தர்; இப் படைக்கு எண் சிறிது ‘
என்றனர், பெயர்ந்தார்.
30

இராவணன், படைத்தலைவரைக் கொணர்க எனல்

9415. ‘படைப் பெருங் குலத் தலைவரைக்
கொணருதிர், என்பால்
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள
பொருள் எலாம் கிளத்தி
அடைத்த நல் விளம்பினன்
அளவளாய், அமைவு உற்று,
உடைத்த பூசனை வரன் முறை
இயற்ற ‘என்று த்தான்.
31

படைத் தலைவரின் வினாவும் இராவணன்
விளக்கமும்

9416. தூதர் கூறிட, திசைதொறும்
திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர்
எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர்,
இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி
வானினை முட்ட.
32

வணங்கிய தலைவர்களை இராவணன் உசாவுதல்

9417. அனையர் யாவரும் அருகுசென்று,
அடிமுறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின்
அங்கு இருந்தது ஓர் வேலை,
‘நினையும் நல்வரவு ஆக,
நும் வரவு! ‘என நிரம்பி,
‘மனையும் மக்களும் வலியரே? ‘
என்றனன், மறவோன்.
33

9418. ‘பெரிய திண்புயன் நீ உளை;
தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம்
முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்;
பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு? என்றனர்,
அவன் கருத்து அறிவார்.
34

படைத் தலைவரின் வினாவும் இராவணன் விளக்கமும்

9419. ‘மாதரார்களும் மைந்தரும்
நின்மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ
வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள் ‘என
அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் பிறந்துள
பரிசு எலாம் தரெித்தான்.
35

படைத்தலைவர் வியந்து சிரித்தல் (9419-9420)

9420. ‘கும்ப கன்னனொடு
இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ்சினத்து அரக்கர்தம்
குழுவையும், வென்றார்
அம்பினால், சிறுமனிதரே!
நன்று, நம் ஆற்றல்!
நம்பு! சேனையும் வானரமே! ‘
என நக்கார்.
36

9421. உலகைச் சேடன்தன் உச்சிநின்று
எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்று,
அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று,
அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல்
ஏவக்கொல், எம்மை? ‘
37

எள்ளிச் சிரித்தவரை விலக்கி வன்னி என்னும் மன்னன் அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என வினவுதல்

9422. என்ன, கை எறிந்து, இடி உரும்
ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை
அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத்
தீவுக்கு மன்னன்,
அன்ன மானுடர் ஆர்? வலி
யாது? என்று அறைந்தான்.
38

மாலியவான் அம்மனிதரின் வலிமையைச் சொல்லுதல

9423. மற்று அ(வ்)வாசகம் கேட்டலும்,
மாலியவான் வந்து,
‘உற்ற தன்மையும், மனிதரது
ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம்
தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால் ‘என்று அவன்
கிளத்துவான் கிளர்ந்தான்.
39

வாலியை யழித்தது

9424. ‘ஆழி அன்னநீர் அறிதிர்
அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன்
வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும்
மிடுக்கனை இந்நாள்
பாழி மார்பகம் பிளந்து உயிர்
குடித்தது, ஓர் பகழி.
40

விராதன் முதலியோரைத் தொலைத்தது

9425. ‘பரிய தோளுடை விராதன்,
மாரீசனும் பட்டார்;
கரிய மால்வரை நிகர்
கரதூடணர், கதிர்வேல்
திரிசிரா, அவர் திரை கடல்
அன பெருஞ்சேனை,
ஒரு விலால், ஒருநாழிகைப்
பொழுதினின் உலந்தார்.
41

படைத் தலைவரை வினவியது

9426. ‘இங்கு வந்து நீர் வினாயது என்?
எறிதிரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது
அறிந்ததும் இலிரோ?
கங்கை சூடிதன் கடுஞ்சிலை
ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ,
முழங்கு ஓதை?
42

இலங்கையின் ஆயிரவெள்ளச் சேனையும் அழித்தமை விளம்பல் (9426-9428)

9427. ‘ஆயிரம் பெருவெள்ளம் உண்டு,
இலங்கையின் அளவில்,
தீயின் வெய்யபோர் அரக்கர்தம்
சேனை; அச்சேனை
போயது, அந்தகன் புரம் புக
நிறைந்தது போலாம்.
ஏயும் மும்மைநூல் மார்பினர்
எய்த வில் இரண்டால்.
43

9428. ‘கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும்,
நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன்
முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு
மடிந்தார்;
இற்றை நாள்வரை, யானும் மற்று
இவனுமே இருந்தேம்.
44

9429. மூலத் தானை என்று உண்டு; அது
மும்மைநூறு அமைந்த
கூலச்சேனை இவ் வெள்ளம்; மற்று
அதற்கு இன்று குறித்த
காலச் செய்கையான் நீர்
வந்திராயின் அக்கழலோர்
சீலச் சேனையின் செய்வினைச்
செய்கையும் தரெிவீர்.
45

அனுமனின் சிறப்பு (9429-9430)

9430. ஒருகுரங்கு வந்து இலங்கையை
மலங்கு எரி ஊட்டி,
திருகு வெஞ்சினத்து அக்கனை
நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது த்து, ஏகியது,
அரக்கியர் புலம்ப,
கருகு சேனைமாக் கடலையும்;
கடலையும் கடந்து.
46

9431. கண்டிலீர் கொலாம், கடலினை
மலைகொண்டு கட்டி,
மண்டு போர்செய, வானரர்
இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது;
மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவிற்கு
அப்புறம் குதித்தே.
47

9432. ‘இது இயற்கை; ஓர்சீதை என்று
இருந் தவத்து இயைந்தாள்
பொது இயற்கை தீர் கற்புடைப்
பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது அவ் வில்லியர்
வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லின் என் ‘
என்று முடித்தான்.
48

வன்னியின் வினாவிற்கு இராவணன் புன்மை நோக்கிக் குரங்கொடு பொருதிலேன் எனல்

9433. வன்னி, மன்னனை நோக்கி,
‘நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாது
இருந்தது? ‘என்று இசைத்தான்;
‘புன்மை நோக்கி நான் நாணினன்
பொருதிலன் ‘என்றான்!
‘அன்னதேல், இனி அமையும் எம்
கடன் அஃது ‘என்றான்.
49

வன்னி மாலியவான் கருத்துப்படி செய்தற்கு இது காலம் அன்று எனல்

9434. ‘மூது உணர்ந்த இம் முதுமகன்
கூறிய முயற்சி
சீதை என்பவள்தனை விட்டு, அம்
மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது;
இனிச் செய்வது இழிவால்,
காதல் இந்திர சித்தையும்
மாய்வித்தல் கண்டும்.
50

இனிச் செய்யத் தக்கது போரே எனல்

9435. ‘விட்டம் ஆயினும் மாதினை,
வெஞ்சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலம்;
பெறுவது பழியால்;
முட்ட மற்றவர் குலத்தொடு
முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில்
இனிச் செயும் கடமை.
51

வென்று மீளுவம் என வஞ்சினம் கூறிச் செல்லுதல்

9436. ‘என்று, எழுந்தனர் இராக்கதர், ‘
இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில்லுடல்
குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல்,
மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும் ‘என்று
த்தனர் போனார்.
52

 

Previous          Next