சுக்கிரீவன் வானர சேனையோடு இராமனை வணங்கி இறந்த அரக்கரின் பெருக்கை நோக்கித் திகைத்தல்

9721. ஆயபின், கவியின் வேந்தும்,
அளப்பருந் தானையோடும்
மேயினன், இராமன் பாதம்
விதிமுறை வணங்கி, வீந்த
தீயவர் பெருமை நோக்கி,
நடுக்கமும், திகைப்பும் உற்றான்,
ஓய்வுறு மனத்தான் ஒன்றும்
த்திலன், நாணம் உற்றான்.
1

இராமன் சுக்கிரீவனை வீடணனோடு சென்று களத்தைக் காண் எனல்

9722. ‘மூண்டு எழு சேனை வெள்ளம்
உலகு ஒரு மூன்றின் மேலும்
நீண்டு உளது அதனை, ஐய!
எங்ஙனம் நிமிர்ந்தது? ‘என்ன
தூண் திரண்டு அனைய திண்தோள்
சூரியன் சிறுவன் சொல்லக்
‘காண்டிநீ, அரக்கர் வேந்தன்
தன்னொடும் களத்தை ‘என்றான்.
2

போர்க்களக் காட்சியைக் கண்ட வானரர்களின் நிலை

9723. தொழுதனர் தலைவர் எல்லாம்,
தோன்றிய காதல் தூண்ட
‘எழுக ‘என விரைவில் சென்றார்,
இராவணற்கு இளவலோடும்
கழுகொடு பருந்தும் பாறும்
பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தைக் கண்ணின்
நோக்கினர் துணுக்கம் கொண்டார்
3

களக் காட்சியைக் காட்டுமாறு வீடணனை வானரர் வேண்டுதல்

9724. ஏங்கினார்; நடுக்கம் உற்றார்;
இரைத்து இரைத்து. உள்ளம் ஏற,
வீங்கினார்; வெருவலுற்றார்;
விம்மினார்; உள்ளம் வெம்ப,
ஓங்கினார்; மெள்ள மெள்ள
உயிர் நிலைத்து, உவகை ஊற
ஆங்கு அவர் உற்ற தன்மை
யார் அறிந்து அறைய கிற்பார்?
4

9725. ஆயிரம் பருவம் கண்டால்
காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால்
மேயின துறைகள் தோறும்
விம்மினர் நிற்பது அல்லால்
பாய்திரைப் பரவை ஏழும்
காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து த்தி என்றார்;
வீடணன் நெறியில் சொல்வான்.
5

இறந்தும் நிற்கும் யானைகளின் காட்சியைக் காட்டுதல்

9726. காகப் பந்தர்ச் செங்களம்
எங்கும், செறிகால
ஓகத்து அம்பின் பொன்றின
வேனும், உடல் ஒன்றி,
மேகச் சங்கம் தொக்கு என
வீழும் வெளி இன்றி,
நாகக் குன்றம் நின்றமை
காணீர் நமரங்காள்!
6

யானைகளின்மேல் வீரர்கள் இறந்து கிடக்கும் காட்சி

9727. ‘வென்றிச் செங்கண் வெம்மை
அரக்கர் மிசை ஊர்வ
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு
தலைப்பட்டு உயிர் நுங்கப்,
பொன்றிச் சிங்கம், நாக
அடுக்கல், பொலிகின்ற
குன்றில் துஞ்சும் தன்மை
நிகர்க்கும் குறிகாணீர்.
7

மாண்ட வீரரின் முகமலர்ச்சி

9728. ‘அளியின் பொங்கும் அங்கணன்
ஏவும் அயில் வாளிக்
களியில் பட்டார், வாள்முகம்,
மின்னும் கரையில்ல,
புளினத் திட்டின் கண் அகன்
வாரிக் கடல் பூத்த
நளினக் காடே ஒப்பன
காண்மின் நமரங்காள்.
8

குதிரைகள் இல்லாத் தேர்கள் இரத்த வெள்ளத்தில் நாவாய் போலத் தோன்றுதல்

9729. ‘பூவாய் வாளிச் செல் எறி
காலைப் பரிபொன்ற,
கோவாய் விண்சேர் வெண்கொடி
திண் காலொடு கூட,
மாவாய் திண்தேர் மண்டுதலால்
நீர், மறிவேலை
நாவாய் மானச் செல்வன
காண்மின் நமரங்காள்;
9

யானைகள் உயிரோடும் இரத்த வெள்ளத்தோடு
கடலையடைதல்

9730. ‘ஒழுகிப் பாயும் மும்மத
வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல்
வெள்ளத்திடை ஈர்ப்ப,
பழகிற்று இல்லாப் பல்திரை
தூங்கும் படர்வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு
ஒக்கும் முறை காணீர்.
10

கவந்தமாடுதல்

9731. ‘கடக்கார் என்னப் பொங்கு
கவந்தத்தொடு கைகள்
தொடக்கா நிற்கும் பேய்,
இலயத்தின் தொழில் பூண்ட
மடக்கு ஓவு இல்லா வார் படிமக்
கூத்து அமைவிப்பான்,
நடக்கால் காட்டும் கண்ணுளர்
ஒக்கும் நமரங்காள்!
11

நரம்புத் தொடக்கிலகப்பட்ட பேய் நழுவிப் போதல்

9732. ‘மழுவின் கூர் வாய் வன் பல்
இடுக்கின் வய வீரர்
குழுவின் கொண்டந் நாடி
தொடக்காப் பொறி கூட்டித்
தழுவிக் கொள்ள, கள்ள
மனப் பேய் அவைதள்ளி
நழுவிச் செல்லும் இயல்பின
காண்மின் நமரங்காள்.
12

இறந்து மாறி வீழ்ந்து கிடக்கும் இரு யானைகள் இருதலை பெற்ற ஒரு விலங்குபோலக் காணப்படுதல்

9733. பொன்னின் ஓடை மின்பிறழ்
நெற்றிப் புகர்வேழம்,
பின்னும் முன்னும் மாறின
வீழ்வின் பிணைவு உற்ற,
தன்னின் நேராம் மெய்
இருபாலும் தலைபெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன
பல்வேறு இவை காணீர்.
13

கோபக் கனல் எரிகின்ற அரக்கரின் வாய்கள் ஓம குண்டம் போலுதல்

9734. ‘நாமத் திண் போர் முற்றிய
கோப நகை நாறும்
பாமத் தொல்நீர் அன்ன
நிறத்தோர் பகுவாய்கள்,
தூமத் தோடும் வெங்கனல்
இன்னும் சுடர்கின்ற
ஓமக் குண்டம் ஒப்பன
பல்வேறு இவை காணீர்.
14

இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் யானைகளின் கொம்புகள்

9735. மின்னும் ஓடை ஆடல்
வயப் போர் மிடல் வேழக்
கன்னம் மூலத்து உற்றன
வெண்சாமரை காணீர்;
மன்னும் மாநீர்த் தாமரை
மீதின் மகிழ்வு எய்தி
அன்னம் மெல்லத் துஞ்சுவ
ஒக்கின்றன வம்மா!
15

9736. ‘ஓளிம் முற்றாது உற்று உயர்
வேழத்து ஒளிர் வெண் கோடு
ஆளின் முற்றாச் செம்புனல்
வெள்ளத்தவை காணீர்;
கோளின் முற்றாச் செக்கருள்
மேகக் குழுவின்கண்
நாளின் முற்றா வெண்பிறை
போலும் நமரங்காள்!
16

வீரர்களின் கண்ணெரியால் வெந்த தசையைப் பேய்கள் உண்டு மகிழ்தல்

9737. ‘கொடியும் வில்லும், கோலொடு
தண்டும், குவிதேரும்,
துடியின் பாதக் குன்றின்மிசைத்
தோல் விசியும் சுட்டு
ஒடிவில் வெய்யோர் கண் எரி
செல்ல, உடன் வெந்த
தடி உண்டு ஆடிக் கூளி
தடிக்கின்றன காணீர்.
17

மகர மீன்கள் குருதி வெள்ளத்தைக் கடலென மருண்டுவந்து தம்மைக் கண்டு யானைகள் ஓடுவதால் உண்மையுணர்ந்து மீளல்

9738. ‘சகர முந்நீர் செம்புனல்
வெள்ளம் தடுமாற,
மகரம் தம்மின் வந்தன
காணா, மனம் உட்கிச்
சிகரம் அன்ன யானைகள்
ஓடிச் செல, நாணின்
நகரம் நோக்கிச் செல்வன
காண்மின் நமரங்காள்.
18

விண்ணில் இறந்த அரக்கர் உடம்பு தம்மேல் வீழ்ந்தமையால் மண்ணில் செல்வார் மடங்கி வீழ்ந்து மீளமுடியாது வருந்தும் நிலை

9739. ‘விண்ணில் பட்டார் வெற்பு உறழ்
காயம் பல, மென்மேல்
மண்ணில் செல்வார் மேனியின்
வீழ, மறைவுற்றார்,
எண்ணில் தீரா அன்னவை
நீக்கும் மிடல் இல்லார்
கண்ணில் தோன்றார் விம்மி
உழக்கும் படிகாணீர்.
19

அரக்கர்களின் இரத்ததாரை பட்ட உச்சிச் சூரியன் உதய சூரியனாகத் தோன்றுகை

9740. ‘அச்சின் திண்தேர் ஆனையின்
மாமேல் காலாளின்
மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித்
தாரைகள் முட்ட,
உச்சிச் சென்றான் ஆயினும்
வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்து உளன்
ஆகும் குறிகாணீர்.
20

அரக்கரின் இரத்தம்பட்ட சந்திரன் சூரியனைப் போலுதல்

9741. கால் தோய் மேனிக் கண்டகர்
கண்டப் படுகாலை,
“ஆறோ! “ என்ன, விண்படர்
செஞ்சோரி அது ஆகி,
வேறாய் நின்ற வெண்மதி
செங்கேழ் நிறம் விம்மி,
மாறு ஓர் வெய்யோன் மண்டலம்
ஒக்கின்றது காணீர்.
21

குருதிக்கடல் படிந்த பறவைகளின் சிறகுகள் துளித்த குருதித் துளிகளைத் தாங்கிக் கானிலும் காவிலும் உள்ள மலர்களும் வண்டுகளும் செந்நிறம் பெறுதல

9742. வான்நனைய, மண்நனைய, வளர்ந்து எழுந்த
கொழுங்குருதி மகர வேலை
தான் நனைவுற்று எழும் பறவைச்சிறை தெளித்த
புதுமழையின் துள்ளிதாங்கி,
மீன் அனைய நறும் போதும் விரை அருந்தும்
சிறை வண்டும், நிறம்வேறு எய்தி,
கானகமும் கடிபொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ
காண்மின்! காண்மின்!
22

இரத்த ஆறு பேராறு போன்றமை

9743. ‘வரை பொருத மத யானைத் துணைமருப்பும்
கிளர்முத்தும், மணியும், வாரி,
திரை பொருது புறம் குவிப்பத் திறங்கொள்பணை
மரம் உருட்டி, சிறைப்புள் ஆர்ப்ப,
நுரை, கொடியும், வெண்குடையும் சாமரையும்
எனச்சுமந்து, பிணத்தின் நோன்மைக்
கரை பொருது கடல் மடுக்கும் கடுங்குருதிப்
பேர்யாறு காண்மின்! காண்மின்!
23

9744. ‘கய்க்குன்றப் பெருங்கரைய, நிருதர்புயக்
கல்செறிந்த, கதலிக் கான,
மொய்கின்ற பரித்திரைய, முரண்கரிக்கைக்
கோள்மாவ, முளரிக்கானின்
நெய்க்கின்ற வான்முகத்த, விழும் குடரின்
பாசடைய, நிணமென் சேற்ற,
உய்க்கின்ற உதிரநீர் அகன்குளங்கள்
உலப்பு இறந்த உவையும் காண்மின்.
24

போர்க்களம் மருத நிலம் போல்கின்றது

9745. ‘நெடும்படைவாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிரநீர் நிறைந்த காப்பின்,
கடும்பகடு படிகிடந்த கரும்பரம்பின்,
இனமள்ளர் பரந்த கையின்,
படுங்கமல மலர்நாறு முடிகிடந்த
பெருங்கிடக்கை, பரந்த பண்ணைத்
தடம்பணையின், நறும்பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்.
25

இரத்தப் பரப்பில் சுழிகள் தோன்றுவதைக் காட்டுதல்

9746. வெளில் தீர்த்த வரை புரையும் அடல் அரக்கர்
உடல்விழவும், வீரன் வில்லின்
ஒளிறு ஈர்த்த முழுநெடுநாண் உருமேறு
பலபடவும், உலகம்கீண்டு
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த
பகழிவழி, நதியின் ஓடி
களிறு ஈர்த்துப் புகமண்டும் கடுங்குருதித்
தடஞ்சுழிகள் காண்மின்! காண்மின்!
26

இராமன் அம்பு அரக்கருடலில் தங்காமல் சென்றமை

9747. “கைத்தலமும், காத்திரமும், கருங்கழுத்தும்
நெடும்புயமும், உரமும், கண்டித்து
எய்த்திலபோய், திசைகள்தொறும் இருநிலத்தைக்
கிழித்து இழிந்த என்னின் அல்லால்,
மத்தகரி வயமாவின் வாள்நிருதர்
பெருங்கடலின் மற்று இவ் வாளி
தைத்துளதாய் நின்றது என ஒன்றேயும்
காண்பரிய தகையும் காண்மின்.
27

மடிந்து கிடந்த மத்த யானைகள்

9748. ‘குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இத்திறம்
அமுதின் வந்தன ஐ இரு கோடியால்.
28

அயன் வேள்வியில் தோன்றிய யானைகள்

9749. ‘ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும்
மாறும் ஆயினும் மாமதமாய் வரும்
ஆறு மாறில ஆறு இரு கோடியால்.
29

ஐராவதத்தின் மரபில் வந்த யானைகள்

9750. ‘உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம்
மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசைப் போர்மத யானையின்
இயல் பரம்பரை ஏழ் இரு கோடியால்.
30

வடதிசை யானையின் வழிவந்த யானைகள்

9751. ‘கொடாது நிற்றலின் கொற்ற நெடுந்திசை
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல
வடாது திக்கின் மதவரையின் வழிக்
கடாம் முகத்த முளரிக் கணக்கவால்.
31

9752. வானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஆனவர்க்கம் ஓர் ஆயிர கோடியால்;
தானவர்க்கு இறைவன் திறை தந்தன
ஏனைவர்க்கம் கணக்கு இல இவ்வெலாம்.
32

குதிரைகளின் வகைகள்

9753. பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம்
மால் கணம் பரி ஈங்கு இவை; மாறு உவை
மேற்கின் வேலை வருணனை வென்றவால்.
33

குபேரன், விஞ்சையர் வேந்தன் என்பவரை வென்று பெற்றகுதிரைகள்

9754. ‘இருநிதிக் கிழவன் இழந்து ஏகின
அரிய அப்பரி ஆயிரம் ஆயிரம்;
விரிசினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய தாமரை போலுமால்.
34

வானரத் தலைவர்கள் களக் காட்சியை விடுத்து இராமனை அடைதல்

9755. என்று காணினும் காட்டினும் ஈது இறைக்
குன்று காணினும் கோளிலது ஆதலான்
நின்று காணுதும் நேமியினான் உழைச்
சென்று காண்கும் என்று ஏகினர் செவ்வியோர்.
35

அனைவரும் இராமனருகில் வியப்புடன் இருத்தல்

9756. ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரின்
போர் இயற்கை நினைந்து எழும் பொம்மலார்
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம்.
36

 

Previous          Next