இராவணன் வீடணன் சொல்லைக் கேட்டுச் சினந்து கூறுதல் (6492-6500)

6492. கேட்டனன் இருந்தும் அக் கேள்வி தேவியின்
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன்
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான்
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண்கணான்.
1

6493. “‘இரணியன் என்பவன்
எம்மனோரினும்
முரணியன்; அவன்தனை
முருக்கி முற்றினான்,
அரணியன் ‘‘ என்று, அவற்கு
அன்பு பூண்டனை
மரணம் என்று ஒரு பொருள்
மாற்றும் வன்மையோய் ‘
2

6494. ‘ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ
3

6495. பாழிசால் இரணியன் புதல்வன் பண்பு எனச்
சூழ் வினை முற்றி யான் அவர்க்குத் தோற்ற பின்
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்திப் பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?
4

6496. ‘முன்புற அனையர்பால் நண்பு முற்றினை;
வன்பகை மனிதரின் வைத்த அன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன்புகல் அவர்; பிறிது க்க வேண்டுமோ?
5

6497. நண்ணினை மனிதரை; நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ?
6

6498. அன்று வானரம் வந்து நம்
சோலையை அழிப்பக்
“கொன்று தின்றிடுமின்! “ எனத்
தூதரைக் கோறல்
வென்றி அன்று என விலக்கினை;
மேல்விளைவு எண்ணி;
துன்று தாரவன் துணை எனக்
கோடலே துணிந்தாய்.
7

6499. ‘அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை;
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை;
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?
8

6500. ‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;
ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.
9

வீடணன் விண்ணில் எழுந்து நின்று நீதி பல
கூறுதல் (6501-6503)

6501. என்றலும் இளவலும் எழுந்து வான் இடைச்
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா
நின்றனன்; பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பல பல உறுதி ஓதினான்.
10

6502. ‘வாழியாய்! கேட்டியால்; வாழ்வு கைம் மிக
ஊழி காண்குறும் நினது உயிரை ஓர்கிலாய்
கீழ்மையோர் சொற் கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ?
11

6503. ‘புத்திரர் குருக்கள் நின் பொருவு இல் கேண்மையர்
மித்திரர் அடைந்துேளார் மெலியர் வன்மையோர்
இத்தனை பேரையும் இராமன் வெஞ் சரம்
சித்திர வதை செயக் கண்டு தீர்தியோ?
12

வீடணன் இலங்கையை விடுத்துச் செல்லுதல் (6504-6506)

6504. ‘எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.
13

6505. அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்;
கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடணனோடும் ஏயினார்.
14

6506. அரக்கனும் ஆங்கண் ஓர்
அமைச்சர் நால்வரும்,
‘குரக்கு இனத்தவரொடும்
மனிதர், கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர் ‘
என்ற காலையில்,
‘பொருக்கென எழுதும் ‘என்று
எண்ணிப் போயினார்.
15

வீடணன் வானரத் தானையைக் காண்டல் (6507-6508)

6507. அளக்கரைக் கடந்து மேல் அறிந்த நம்பியும்
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண்கடல்
வளத் தடந் தாமரை மலர்ந்தது ஆம் எனக்
களப் பெருந் தானையைக் கண்ணில் நோக்கினான்.
16

6508. ‘ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒருதலை நிறுத்தி எண்ணினால்
வானரம் பெரிது ‘என மறு இல் சிந்தையான்
தூநிறச் சுடுபடைத் துணைவர்ச் சொல்லினான்.
17

இனிச் செய்வது யாதனெ வீடணன் அமைச்சரை
வினவுதல்

6509. ‘அறம் தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனன்;
மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்;
பிறந்த என் உறுதி நீ பிடித்தியால் ‘எனத்
துறந்தனன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்.
18

இராமனைக் காணுமாறு அமைச்சர்கள் கூறல்

6510. ‘மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;
தாட்சி இல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன் ‘என்று கல்வி சால்
சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.
19

வீடணன் அமைச்சர் சொல்லை உடன்பட்டு
மகிழ்தல் (6511-6515)

6511. ‘நல்லது சொல்லினீர்; நாமும் வேறு இனி
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி இப்பிறவி போக்குதும்.
20

6512. ‘முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பு இலேன்;
அன்பு உறக் காரணம் அறிய கிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல் அவன்
புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.
21

6513. ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அற
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பிப் பெற்றனென்
போதுறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.
22

6514. ‘ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி நம்மனத்து
ஏயது முடித்தும் ‘என்று இனிது மேயினான்.
23

6515. ‘இருளுற எய்துவது இயல்பு அன்றாம் ‘என
பொருள் உற உணர்ந்த அப் புலன்கொள் புந்தியார்
மருள் உறு சூழலின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினான்.
24

இராமன் கடற்கரைக்கு வருதல்

6516. அப்புறத்து இராமன் அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான் குவளை நோக்கி தன்
துப்பு உறச் சிவந்தவாய் நினைந்து சோர்குவான்
இப்புறத்து இருங்கரை மருங்கின் எய்தினான்.
25

இராமன் அங்குக் கானல் முதலியவற்றை
நோக்குதல் (6517-6519)

6517. கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும்
மேல்நிறை அன்னமும் பெடையும் வேட்கைகூர்
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான்.
26

6518. தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும் கனக தீரமும்
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும்
புரள் நெடுந் திரைகளும் புரிந்து நோக்கினான்.
27

6519. மின் நகு மணிவிரல் தேய வீழ்கண் நீர்
துன்னரும் பெரும் சுழி அழிப்பச் சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னையம் பொதும்பரும் புக்கு நோக்கினான்.
28

இராமன் கடற்கரைக் காட்சிகளால் கவலை
மிகுதல் (6520-6524)

6520. கூதிர் நுண் குறும்பனித் திவலைக் கோவை கால்
மோதி வெண் திரைபொரு முடவெண் தாழைமேல்
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான்.
29

6521. அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான்.
30

6522. ஒருதனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்
பெருவலி வயக்குருகு இரண்டும் பேர்கில
திருகு வெஞ்சினத்தன தறெுகண் தீயன
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்.
31

6523. உள்நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்
தண்நிறப் பவளவாய் இதழை தன் பொதி
வெண்நிற முத்தினால் அதுக்கி விம்மினான்.
32

6524. இத்திறம் ஏய்திய காலை எய்துறும்
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒருவகை பெயர்ந்து போயினான்.
33

வீடணன் வருதல்

6525. உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலின்
முறைபடு தானையின் மருங்கு முற்றினான்
அறைகழல் வீடணன் அயிர்ப்பு இல் சிந்தையான்.
34

வானரர் வீடணனை எதிர்த்தல் (6526-6530)

6526. முற்றிய குருசிலை ‘முழங்கு தானையின்
உற்றனர் நிருதர் வந்து ‘என்ன ஒன்றினார்
‘எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர் ‘என்று இடை
சுற்றினர் உரும் எனத் தழெிக்கும் சொல்லினார்.
35

6527. தந்தது தருமமே கொணர்ந்து தான்; இவன்
வெந்தொழில் தீவினை பயந்த மேன்மையான்
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார்.
36

6528. “‘இருபது கரம்; தலை ஈரைந்து ” என்பர்; இத்
திரு இலிக்கு; அன்னவை சிதைந்தவோ? என்பார்
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர்! என்பார்
ஒருவரின் ஒருவர் முன் உறுக்கி ஊன்றுவார்.
37

6529. ‘பற்றினம் சிறையிடை வைத்துப் பாருடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும் ‘என்று கூறுவார்;
‘எற்றுவது அன்றியே இவனைக் கண்டு இறை
நிற்றல் என் பிறிது? ‘என நெருக்கி நேர்குவார்.
38

6530. ‘இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போயபின்
அமைப்பது என் பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ?
குமைப்பது நலன் ‘என முடுகிக் கூறுவார்.
39

அனுமன் ஆணையின்படி மயிந்தனும் துமிந்தனும் வருதல் (6531-6532)

6531. இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயம் தரெி காவலர் இருவர் நண்ணினார்.
40

6532. விலக்கினர் படைஞரை; வேதம் நீதி நூல்
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினர்
‘சலம் குறி இலர் ‘என அருகு சார்ந்தனர்
புலக்குறி அறநெறி பொருந்த நோக்கினார்.
41

வீடணன் முதலியோரை யார் என வினவுதல்

6533. யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்
சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான்.
42

வீடணன் துணைவனான அனலன் விடை (6534-6538)

6534. ‘பகலவன் வழிமுதல் பாரின் நாயகன்
புகல் அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன்
தகவு உறு சிந்தையன் தரும நீதியன்
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான்.
43

6535. ‘அறநிலை வழாமையும் ஆதி மூர்த்திபால்
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும்
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மாமலர்
இறையவன் தர நெடுந் தவத்தின் எய்தினான்.
44

6536. “சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி!
இடுதியே சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்
படுதி “ என்று உறுதிகள் பலவும் பன்னினான்.
45

6537. ‘மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான்
“பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி;
இறந்தனை நிற்றியேல் “ என்ன இன்னவன்
துறந்தனன் ‘என விரித்து அனலன் சொல்லினான்.
46

6538. மயிந்தனும் அவ் மனத்து வைத்து ‘நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் ‘எனா
பெயர்ந்தனன் ‘தம்பியும் பெயர்வு இல் சேனையும்
அயர்ந்திலிர் காமின்! ‘என்று அமைவது ஆக்கியே.
47

மயிந்தன் இராமன் அடி வணங்குதல்

6539. தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க்
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான்.
48

மயிந்தன் இராமனுக்குக் கண்டதும் கேட்டதும்
கழறல் (6540-6546)

6540. ‘உண்டு உணர்த்துவது ஊழியாய்! ‘எனப்
புண்டரீகத் தடம் புரையும் புங்கவன்
மண்டலச் சடைமுடி துளக்க ‘வாய்மையால்
கண்டதும் கேட்டதும் கழறல் மேயினான்.
49

6541. ‘விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான்.
50

6542. “‘கொல்லுமின், பற்றுமின் “
என்னும் கொள்கையால்
பல்பெருந் தானை சென்று
அடர்க்கப் பார்த்து, யாம்
“நில்லுமின் “ என்று,
“நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின் ‘‘ என்ன ஓர்
துணைவன் சொல்லினான்.
51

6543. “‘முரண்புகு தீவினை முடித்த முன்னவன்
கரண்புகு சூழலே சூழக் காண்பது ஓர்
அரண் பிறிது இல் என அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன் “ என முன்னம் சாற்றினான்.
52

6544. “‘ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி பால்
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர்
நாயகன் தர நெடுந் தவத்து நண்ணினான்
தூயவன் “ என்பது ஓர் பொருளும் சொல்லினான்.
53

6545. “‘கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்
எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்பு உடை முடித்தலை புரளும் என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன் “ என்றும் நாட்டினான்.
54

6546. “‘ஏம் தொழில் இராவணன் இனிய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை; என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகல்தியால் எனப்
போந்தனன் “ என்றனன் புகுந்தது ஈது ‘என்றான்.
55

வீடணனுக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி இராமன் நண்பரின் கருத்தறிதல்

6547. அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை
‘இப் பொருள் கேட்ட நீ இயம்புவீர் இவன்
கைப் புகற் பாலனோ? கழியற் பாலனோ?
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான்.
56

கவிக்கூற்று

6548. தடமலர்க் கண்ணனைத் தடக்கை கூப்பி நின்று
‘இடன் இது; காலம் ஈது ‘என்ன எண்ணுவான்
கடன் அறி காவலன் கழறினான் அரோ
சுடர்நெடு மணிமுடிச் சுக்கிரீவனே.
57

சுக்கிரீவன் கூறுகின்றான் (6549-6556)

6549. நனி முதல் வேதங்கள் நாலும் நாம நூல்
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ
இனையன கேட்கவோ எம் அனோர்களை
வினவிய காரணம்? விதிக்கும் மேல் உளாய்!
58

6550. ஆயினும், விளம்புவென்,
அருளின் ஆழியாய்!
ஏயினது ஆதலின்,
‘அறிவிற்கு ஏற்றன,
தூய ‘என்று எண்ணினும்,
‘துணிவு அன்று ‘என்னினும்
மேயது கேட்டியால்!
விளைவு நோக்குவாய்.
59

6551. “வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று;
தம் முனைத் துறந்தது தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்.
60

6552. தகை உறு தம்முனைத் தாயைத் தந்தையை
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை
பகை உற வருதலும் துறந்த பண்பு இது
நகை உறல் அன்றியும் நயக்கற் பாலதோ?
61

6553. வேண்டுழி இனியன விளம்பி வெம்முனை
பூண்டுழி அஞ்சி வெஞ் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன்
ஆண் தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே?
62

6554. ‘மிகைப் புலம் தருமமே வேட்ட போது அவர்
தகைப் புலம் துறந்து போய்ச் சார்தல் அன்றியே
நகைப் புலம் பொது அற நடந்து நாயக!
பகைப் புலம் சார்தலோ? பழியின் நீங்குமோ?
63

6555. ‘வார்க்குறு வனைகழல் தம்முன் வாழ்ந்த நாள்
சீர்க்கு உறவு ஆய் இடைச் செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன்? அருளின் ஆழியாய்!
64

6556. ‘ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும்
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ?
65

6557. கூற்றுவன் தன்னொடு இவ் உலகம் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளம்;
மாற்றவன் தம்பி நம்மருங்கு வந்திவண்
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ?
66

6558. “அரக்கரை ஆசு அறக் கொன்று நல் அறம்
புரக்க வந்தனம் “ எனும் பெருமை பூண்ட நாம்
இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டோம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்.
67

6559. விண்டுழி ஒரு நிலை நிற்பர்; மெய்ம் முகம்
கண்டுழி ஒரு நிலை நிற்பர்; கைப் பொருள்
கொண்டுழி ஒரு நிலை நிற்பர்; கூழுடன்
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர்.
68

6560. ‘வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
‘தஞ்சு ‘என நம் வயின் சார்ந்து உளான் அலன்;
நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ?
அஞ்சன வண்ண! ‘என்று அறியக் கூறினான்.
69

கவிக்கூற்று

6561. அன்னவன் பின்னுற,
அலகு இல் கேள்வியால்
தன் நிகர் பிறிது இலாத்
தகைய சாம்பனை,
‘என்னை உன் கருத்து? ‘என
இறை வினாயினான்;
சொல் முறை நெறி தரெிந்து
அவனும் சொல்லுவான்.
70

சாம்பவன் கூறுகின்றான் (6562-6566)

6562. ‘அறிஞரே ஆயினும் அரிய தவெ்வரைச்
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்;
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர்
குறி தனி உளது என உலகம் கொள்ளுமோ?
71

6563. வெற்றியும் தருகுவர்; வினையம் வேண்டுவர்
முற்றுவர்; உறு குறை முடிப்பர் முன்பினால்;
உற்றுறு நெடும்பகை உடையர்; அல்லதூஉம்
சிற்றினத் தவரோடும் செறிதல் சீரிதோ?
72

6564. ‘வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய
பாதகர் நம் வயின் படர்வர் ஆம் எனின்
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ?
73

6565. “கைப் புகுந்து உறு சரண் அருளிக் காத்துமேல்
பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்
மெய்க் கொள விளியினும் ‘விடுதும் ” என்னினும்
திக்கு உறும் நெடும்பழி; அறமும் சீறுமால்.
74

6566. ‘மேல் நனி விளைவது விளம்பல் வேண்டுமோ?
கானகத்து இறைவியோடு உறையும் காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இவ்
ஏனையன் வரவும் ‘என்று இனைய கூறினான்.
75

இராமன் வினவ நீலன் தன் கருத்தைக் கூறத் தொடங்கல்

6567. பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெருங் கேள்வியின் தானை நாயகன்
நீலனை ‘நின் கருத்து இயம்பு நீ ‘என
மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான்.
76

நீலன் சொல்லுகின்றான் (6568-6573)

6568. ‘பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்
வகை உள; அன்னவை வரம்பு இல் கேள்வியாய்!
தொகையுறக் கூறுவென்; ‘குரங்கின் சொல் ‘என
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால்.
77

6569. ‘தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர்.
78

6570. ‘பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்
போரிடைப் புறங் கொடுத்து அஞ்சிப் போந்தவர்
நேர்வரு தாயத்து நிரம்பினோர் பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுேளார்
79

6571. அடுத்தநாட்டு அரசியல்
உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர்,
பகைஞரோடு ஒரு
மடக்கொடி திறத்திடை
வைத்த சிந்தையர்,
உடன்கொளத் தகையர், நம்
உழை வந்து ஒன்றினால்.
80

6572. தாம் உற எளிவரும் தகைமையார் அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால்
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம்?
81

6573. காலமே நோக்கினும் கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி யாம் தரெிந்து தேறுதற்கு
ஏலுமே? என்று எடுத்து இனைய கூறினான்.
82

மற்றை மந்திரக் கிழவரும் அவ்வாறே கூறுகின்றனர்

6574. மற்றுள மந்திரக் கிழவர் வாய்மையால்
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர்
‘பற்றுதல் பழுது ‘எனப் பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார் முடியப் பேசினார்.
83

இராமன் அனுமனை வினவுதல்

6575. ‘உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;
செறிபெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு ‘என
நெறிதரெி மாருதி என்னும் நேரிலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேலுளான்.
84

அனுமன் கூறுகின்றான் (6576-6594)

6576. ‘இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்
கணங்கொளல் நும்மனோர் கடன்மை காண் ‘எனா
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான்.
85

6577. ‘எத்தனை உளர் தரெிந்து எண்ண ‘ஏய்ந்தவர்
அத்தனைவரும் ஒருபொருளை “அன்று ” என
உத்தமர் அது தரெிந்து உணர ஓதினார்;
வித்தக! இனிச் சில விளம்ப வேண்டுமோ?
86

6578. ‘தூயவர் துணிதிறன் நன்று தூயதே;
ஆயினும் ஒரு பொருள் ப்பன் ஆழியாய்!
“தீயன் ” என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.
87

6579. ‘வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள்முகம்
கண்டதோர் பொழுதினில் தரெியும்; கைதவம்
உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம்புகல் விரும்பி வீழ்வரோ?
88

6580. ‘உள்ளத்தின் உள்ளதை யின் முந்துற
மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?
89

6581. ‘வாலி விண்பெற அரசு இளையவன் பெறக்
கோலிய வரிசிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்.
90

6582. ‘செறிகழல் அரக்கர்தம் அரசு சீரியோர்
நெறி அலது; அகலின் நிலைக்கலாமையும்
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர்
பிறிவு அருங் கருணையும் மெய்யும் பேணினான்.
91

6583. ‘காலம் அன்று இவன் வரும் காலம் ‘என்பரேல்
வாலிது அன்று; உறுபகை வலியது ஏறியது;
ஏலும் இங்கு இவர்க்கு இனி இறுதி; என்றலால்
மூலம் என் துணைவரைப் பிரிவு முற்றினான்.
92

6584. ‘தீத்தொழில் அரக்கர் தம் மாயச் செய்வினை
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார்; நமக்கு
ஏற்றது ஓர் உறுதியும் எளிதின் எய்துமால்.
93

6585. “‘தெளிவு உறல் அரிது இவர் மனத்தின் தீமை; நாம்
விளிவது செய்குவர் “ என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார்
எளியவர் திறத்து இவை எண்ணல் ஏயுமோ?
94

6586. “‘கொல்லுமின் இவனை ” என்று அரக்கன் கூறிய
எல்லையில் “தூதரை எறிதல் என்பது
புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில்
வெல்லலம் பின்னர் “ என்று இடை விலக்கினான்.
95

6587. “மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் “ என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
96

6588. ‘எல்லியில் யான் இவன் இரண மாளிகை
செல்லிய போதினும் திரிந்த போதினும்
நல்லன நிமித்தங்கள் நனி நிகழ்ந்தன;
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய்.
97

6589. ‘நிந்தனை நறவமும் நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலென்; தரும தானமும்
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்தது ஆம் அரோ.
98

6590. ‘அன்னவன் தனிமகள் “அலரின்மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு; “உன்னைத் துன்மதி
நல் நுதல்! தீண்டுமேல் நணுகும் கூற்று “ என
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.
99

6591. “பெற்று உடைய பெருவரமும், பிறந்துடைய
வஞ்சனையும், பிறவும் உன்கை
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் ‘‘
எனக்கருதி விரைவில் வந்தான்;
உற்றுடைய பெருவரமும் உகந்துடைய
தண் அளி உம் உணர்வும் நோக்கின்,
மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன்
அன்றியே தவத்தின் மிக்கார்.
100

6592. ‘தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே
முதலாய தேவ தேவர்
மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை
முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்;
ஆவத்தின் வந்து “அபயம் “ என்றானை
அயிர்த்து அகல விடுதும் என்றால்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது
ஒவ்வாதோ? கொற்ற வேந்தே!
101

6593. “‘பகை புலத்தோர் துணை அல்லர் “ என்று இவனைப்
பற்றேமேல் அறிஞர் பார்க்கின்
நகைப்புலத்தது ஆம் அன்றே; நல் தாயம்
உளது ஆய பற்றால் மிக்க
தகைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள்
தமையர் இவர் தாமே அன்றே,
மிகைப்புலத்து விளைகின்றது ஒருபொருளைக்
காதலிக்கின் விளிஞர் ஆவர்?
102

6594. ‘ஆதலால், இவன் வரவு நல்வரவே ‘என
உணர்ந்தேன், அடியனேன்; உன்
வேத நூல் எனத்தகைய திருவுளத்தின்
குறிப்பு அறியேன் என்றுவிட்டான்;
காதல் நான்முகனாலும் கணிப்பரிய கலை
அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான், ஓத நீர் கடந்து பகை
தடிந்து உலகை உய்யக் கொண்டான்.
103

அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609)

6595. மாருதி வினைய வார்த்தை
செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்
‘பேர் அறிவாள! நன்று! நன்று!! ‘
எனப் பிறரை நோக்கிச்
‘சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத்
தேர்மின் ‘என்ன
ஆரியன் ப்பது ஆனான்;
அனைவரும் அதனைக் கேட்டார்.
104

வீடணனை விடலாகாமைக்கு இராமன் காட்டும் விளக்கம் (6596-6609)

6596. கருத்து உற நோக்கிப் போந்த
காலமும் நன்று; காதல்
அருத்தியும் அரசின் மேற்றே;
அறிவினுக்கு அவதி இல்லை;
“பெருத்து உயர் தவத்தினானும்
பிழைத்திலன் “ என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே,
நம்வயின் சேர்ந்த செய்கை.
105

6597. ‘மற்று இனி ப்பது என்னோ?
மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது
அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க,
வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ,
புகல் எமைப் பகர்கின்றானை.
106

6598. ‘இன்று வந்தான் என்று உண்டோ?
எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ?
புகலது கூறுகின்றான்;
தொன்று வந்து அன்பு பேணும்
துணைவனும் அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும், நம்பால்
புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ?
107

6599. ‘பிறந்த நாள் தொடங்கி யாரும்
துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ? என்னைச்
சரண் என்று வாழ்கின்றானைத்
துறந்த நாட்கு இன்று வந்து
துன்னினான் சூழ்ச்சி யாலே
இறந்த நாள் அன்றோ என்றும்
இருந்த நாள் ஆவது என்றான்.
108

6600. ‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?
109

6601. பேடையைப் பிடித்துத், தன்னைப்
பிடிக்கவந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து
விறகு இடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித்
தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை
வேதத்தின் விழுமிது அன்றோ?
110

6602. ‘போதகம் ஒன்று, கன்றி
இடங்கர் மாப் பொருத போரின்,
“ஆதி அம் பரமே! யான் உன்
அபயம்! “ என்று அழைத்த அந்நாள்,
வேதமும் முடிவு காணா
மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி,
மாதுயர் துடைத்த வார்த்தை
மறப்பரோ, மறப்பு இலாதார்?
111

6603. ‘மன்னுயிர் எல்லாம் தானே
வருவித்து வளர்க்கும் மாயன்,
தன் அன உலகம் எல்லாம்
தருமமும் எவையும் தானே
என்னினும், அடைந்தோர் தம்மை
ஏம் உற இனிதின் ஓம்பி,
பின்னும் வீடு அளிக்கும் என்றால்,
பிறிது ஒரு சான்றும் உண்டோ?
112

6604. ‘நஞ்சினை மிடற்று வைத்த
நகை மழு ஆளன், “நாளும்
தஞ்சு ‘‘ என, முன்னம், தானே
தாதைபால் கொடுத்துச், ‘‘சாதல்
அஞ்சினேன்; அபயம்! ‘‘ என்ற
அந்தணற்கு ஆகி, அந்நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும்
மேன்மையின் மேன்மை உண்டோ?
113

6605. “‘சரண் எனக்கு யார்கொல்? “ என்று
சானகி அழுது சாம்ப,
“அரண் உனக்கு ஆவென்; வஞ்சி!
அஞ்சல்! “ என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல,
மொய் அமர் முடித்து, தயெ்வ
மரணம் என் தாதை பெற்றது
என் வயின் வழக்கு அன்று ஆமோ?
114

6606. உய்ய, ‘நிற்கு அபயம் ‘என்றான்
உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த
உதவியில் கருத்து இலானும்,
மை உறு நெறியின் நோக்கி
மாமறை வழக்கில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும்,
மீள்கிலா நரகின் வீழ்வார்.
115

6607. ‘சீதையைக் குறித்த தேயோ,
“தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வென் ‘‘ என்று
பேணிய விரதப் பெற்றி
வேதியர், “அபயம் “ என்றார்க்கு,
அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற
அவ் கடக்கல் ஆமோ?
116

6608. ‘காரியம் ஆக! அன்றே
ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின்,
இதனின்மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப்
புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார்,
எண் இலா அரசர் அம்மா?
117

6609. ‘ஆதலான், “அபயம் “ என்ற
போதத்தே அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது;
இயம்பினீர் என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக்
கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே
என்வயின் கொணர்தி ‘என்றான்.
118

சுக்கிரீவன் வீடணனை அழைத்து வரச் செல்லுதல்

6610. ஐயுறவு எல்லாம் தீரும்
அளவையாய் அமைந்தது அன்றே;
தயெ்வ நாயகனது உள்ளம்
தேறிய அடைவே; தேறி,
கை புகற்கு அமைவது ஆனான்
‘கடிதினின் கொணர்வல் ‘என்னா,
மெய்யினுக்கு உறையுள் ஆன
ஒருவன்பால் விரைவில் சென்றான்.
119

சுக்கிரீவன் வரவை அறிந்து வீடணன் எதிர்வரல்

6611. வருகின்ற கவியின் வேந்தை
மயிந்தனுக்கு இளவல் காட்டித்
“தருக என்றான் அண்ணல் நின்னை;
எதிர் கொளற்கு அருக்கன் தந்த
இருகுன்றம் அனைய தோளான்
எய்தினன் ‘‘ என்னலோடும்,
திரிகின்ற உள்ளத் தானும்,
அகம் மலர்ந்து அவன்முன் சென்றான்.
120

சுக்கிரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளுதல்

6612. சொல்லருங் காலம் எல்லாம்
பழகினும், தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம்; தூயர்
பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற,
இருவரும், ஒருநாள் உற்ற
எல்லியும் பகலும் போலத்,
தழுவினர், எழுவின் தோளார்.
121

இராமன் அடைக்கலம் அருளியதைச் சுக்கிரீவன் வீடணனுக்குத் தரெிவித்தல்

6613. தழுவினர் நின்ற காலை,
‘தாமரைக் கண்ணன் தங்கள்
முழு முதல் குலத்திற்கு ஏற்ற
முறைமையால் உவகை மூள
வழுவல் இல் அபயம் உன்பால்
வழங்கினன் அவன் பொற் பாதம்
தொழுதியால், விரைவின் ‘என்று
கதிரவன் சிறுவன் சொன்னான்.
122

சுக்கிரீவன் சொல்லைக் கேட்ட வீடணனின் விழுமிய மகிழ்ச்சி (6614-6618)

6614. சிங்க ஏறு அனையான் சொன்ன
வாசகம் செவி புகாமுன்,
கங்குலின் நிறத்தினான் தன்
கண், மழைத் தாரை கான்ற;
அங்கமும் மனம் அது என்னக்
குளிர்ந்தது; அவ் அகத்தை மிக்குப்
பொங்கிய உவகை என்னப்
பொடித்தன உரோமப் புள்ளி.
123

6615. “பஞ்சு “ எனச் சிவக்கும் மென் கால்
தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை,
“வருக! “ என்று அருள் செய்தானோ?
தஞ்சு எனக் கருதினானோ?
தாழ்சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ,
நாயகன் அருளின் நாயேன்?
124

6616. ‘மருளுறு மனத்தினான் என்
வாய்மொழி மறுத்தான்; வானம் அத்து
உருளுறு தேரினானும்,
இலங்கை மீது ஓடும் அன்றே?
தரெுளுறு சிந்தை வந்த
தேற்றம் ஈது ஆகின், செய்யும்
அருள் இது வாயின் கெட்டேன்!
பிழைப்பரோ அரக்கர் ஆனோர்?
125

6617. தீர்வு அரும் இன்னல் தம்மைச்
செய்யினும் செய்ய சிந்தைப்
பேர் அருளாளர் தத்தம்
செய்கையிற் பிழைப்பது உண்டோ?
கார் வரை நிறுவித், தன்னைக்
கனல் எழக் கலக்கக் கண்டும்
ஆர்கலி அமரர் உய்ய
அமிழ்து பண்டு அளித்தது அன்றே?
126

6618. துறவியின் உறவு பூண்ட
தூயவர் துணைவன் என்னை
உறவு உவந்து அருளி, மீளா
அடைக்கலம் உதவினானேல்,
அறவினை இறையும் இல்லா,
அறிவு இலா, அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும்
நரகினில் பிழைப்ப தானேன்.
127

இராமன்பால் விரைவில் செல்லுமாறு
சுக்கிரீவன் சொல்லுதல்

6619. திருத்திய உணர்வு மிக்க
செங்கதிர்ச் செல்வன் செம்மல்,
‘ஒருத்தரை நலனும் தீங்கும்
தேரினும், உயிரின் ஓம்பும்
கருத்தினன் அன்றே, தன்னைக்
கழல் அடைந்தோரை; காணும்
அருத்தியன், அமலன்; தாழாது
ஏகுதி அறிஞ! என்றான்.
128

வீடணனும் சுக்கிரீவனும் இராமனை அடைதல்

6620. மொய்தவழ் கிரிகள் மற்றும்
பலவுடன் முடுகிச் செல்ல,
மை தவழ் கிரியும் மேருக்
குன்றமும் வருவது என்ன,
செய்தவம் பயந்த வீரர்
திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல்,
இருவரும் எய்தச் சென்றார்.
129

வீடணன் இராமனைக் காணுதல் (6621-6629)

6621. மார்க்கடம் சூழ்ந்த வைப்பின்
இளையவன் மருங்கு காப்ப
நாற் கடல் உடுத்த பாரின்
நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்ற வில் கை
வடவரை பாங்கு நிற்பக்
கார்க் கடல் கமலம் பூத்தது
எனப் பொலிவானைக் கண்டான்.
130

6622. அள்ளி மீது உலகை வீசும்
அரிக் குலச் சேனை நாப்பண்,
தெள்ளுதண் திரையிற்று ஆகிப்
பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலில் மேல் நாள்
விண்ணவர் தொழுது வேண்டப்
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப்
பொலிதரு பண்பினானை;
131

6623. கோணுதற்கு அமைந்த கோலப்
புருவம் போல் திரையுங் கூடப்,
பூணுதற்கு இனிய முத்தின்
பொலி மணல் பரந்த வைப்பின்
காணுதற்கு அரிய நீள
வெண்மையில் கருமை காட்டி,
வாள் நுதல் சீதை கண்ணின்
மணி என வயங்கு வானை.
132

6624. படர்மழை சுமந்த காலைப்
பருவ வான், அமரர் கோமான்
அடர்சிலை துறந்தது என்ன
ஆரம்தீர் மார்பினானைக்
கடல் கடை மத்துத் தாம்பு
கழற்றியது என்னக், காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த
சுந்தரத் தோளினானை;
133

6625. கற்றை வெண் நிலவு நீக்கிக்
கருணை ஆம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்று ஆய முழு
மதி முகத்தினானை;
பெற்றவன் அளித்த மோலி
இளையவன் பெறத், தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி
பொலிகின்ற சென்னியானை;
134

6626. வீரனை நோக்கி அங்கம்
மென் மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்
வார, நெஞ்சு உருகி, “செங்கண்
அஞ்சன மலை! அன்று ஆகின்
கார்முகில் கமலம் பூத்தது ஆம்;
இவன் கண்ணன் கொல் ஆம்;
ஆர் அருள் சுரக்கும் நீதி
அறம் நிறம் கரிதோ? ‘‘ என்றான்.
135

6627. மின்மினி ஒளியின் மாயும்
பிறவியை வேரின் வாங்கச்,
செம்மணி மகுடம் நீக்கித்,
திருவடி புனைந்த செல்வன்
தன் முனார், கமலத்து அண்ணல்
தாதையார், சரணம் தாழ,
என்முனார் எனக்குச் செய்த
உதவி என்று ஏம்பல் உற்றான்.
136

6628. ‘பெருந்தவம் இயற்றினோர்க்கும்
பேர்வு அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே
வடிக்கணை தொடுத்துக் கொல்வான்
இருந்தனன்; என்ற போது என்
இயம்புவது? எல்லை தீர்ந்த
அருந்தவம் உடையர் அம்மா அரக்கர்! ‘
என்று அகத்துள் கொண்டான்.
137

6629. கரங்கள் மீச் சுமந்து செல்லும்
கதிர்மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும்
காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும்,
இருநிலத்து இறைஞ்சு கின்றான்;
வரங்களின் வாரி அன்ன
தாள் இணை வந்து வீழ்ந்தான்.
138

இராமன் வீடணனுக்கு இருக்கை அளித்தல்

6630. ‘அழிந்தது பிறவி ‘என்னும்
அகத்து இயல் முகத்தில் காட்ட,
வழிந்த கண்ணீரின் மண்ணின்
மார்பு உற வணங்கினானைப்
பொழிந்தது ஓர் கருணை தன்னால்,
புல்லினன் என்ன நோக்கி
எழுந்து, இனிது இருத்தி ‘என்னா,
மலர்க் கையால் இருக்கை ஈந்தான்.
139

இராமன் வீடணனுக்கு இலங்கையரசுரிமை யீதல்

6631. ஆழியான் அவனை நோக்கி,
அருள் சுரந்து உவகை கூர,
“ஏழினோடு ஏழாய் நின்ற
உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும்நாள் அன்று காறும்,
வளை எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம்
நின்னதே தந்தேன் ‘என்றான்.
140

6632. தீர்த்தனது அருளை நோக்கிச்
செய்ததோ? சிறப்புப் பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கிக்
குறித்ததோ? யாது கொல்லோ?
வார்த்தை அஃது த்தலோடும்
தனித்தனி “வாழ்ந்தோம் “ என்னா
ஆர்த்தன உலகில் உள்ள
சர அசரம் அனைத்தும் அம்மா.
141

வீடணனுக்கு முடிசூட்டுமாறு இலக்குவனை யேவுதல்

6633. ‘உஞ்சனன் அடியனேன் ‘என்று
ஊழ்முறை வணங்கி நின்ற
அஞ்சன மேனி யானை
அழகனும் அருளின் நோக்கித்
‘தஞ்ச நல் துணைவனான
தவறு இலாப் புகழான் தன்னைத்
துஞ்சல் இல் நயனத்து ஐய!
சூட்டுதி மகுடம் ‘என்றான்.
142

வீடணன் இராமனுடைய பாதுகையாகிய மகுடமே
சூட்ட வேண்டுதல்

6634. விளைவினை அறியும் வென்றி
வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம்
அளித்தனை ஆயின் ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே
தோன்றிய கடன்மை தீர
இளையவற் கவித்த மோலி
என்னையும் கவித்தி ‘என்றான்.
143

இராமன் வீடணனைத் தம்பியாக ஏற்றுக் கொள்ளுதல்

6635. ‘குகனொடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
144

வீடணன் இராமனுடைய திருவடி நிலைகளைச் சூட்டிக் கொள்ளுதல்

6636. ‘நடு இனிப் பகர்வது என்னே?
நாயக! நாயினேனை
‘உடன் உதித்தவர்கேளாடும்
ஒருவன் ‘என்று யா நின்றாய்,
அடிமையில் சிறந்தேன் ‘என்னா
அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடுகழல் செம்பொன் மோலி
சென்னியில் சூட்டிக் கொண்டான்.
145

6637. திருவடி முடியில் சூடிச்,
செங்கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன நின்ற
அரக்கர்தம் அரசை நோக்கி,
இருவரும் உவகை கூர்ந்தார்;
யாவரும் இன்பம் உற்றார்;
பொரு அரும் அமரர் வாழ்த்திப்,
பூமழை பொழிவது ஆனார்.
146

6638. ஆர்த்தன, பரவை ஏழும்;
அவனியும், அமரர் நாடும்,
வார்த் தொழில் புணரும் தயெ்வ
மங்கல முரசும் சங்கும்;
தூர்த்தன கனக மாரி;
சொரிந்தன, நறுமென் சுண்ணம்;
போர்த்தது, வானத்து, அன்று, அங்கு,
எழுந்தது துழனிப் பொம்மல்.
147

பிரமனும் அறமும் இடர் நீங்கி மகிழ்தல்

6639. ‘மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள்
திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது
என்று இடரில் தீர்ந்தான்,
செழுந் தனி மலரோன்; பின்னை,
‘இராவணன் தீமைச் செல்வம்
அழிந்தது ‘என்று அறனும்,
தன்வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே.
148

வீடணனோடு பாசறையை வலம் வருமாறு இராமன் இலக்குவற்குப் பணித்தல்

6640. இன்னது ஓர் செவ்வித்து ஆக
இராமனும், இலங்கை வேந்தன்
தன் நெடும் செல்வம் தானே
பெற்றமை பலரும் காணப்,
பல் நெடும் தானை சூழப்
பகலவன் சேயும் நீயும்
மன் நெடுங் குமர! பாடி
வீட்டினை வலஞ் செய்க என்றான்.
149

வீடணனைப் பாடி வீடாகிய நகர்வலம் செய்வித்தல்

6641. அந்தம் இல் குணத்தினானை
அடியிணை முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி,
வானரத் தலைவர் தாங்க,
‘இந்திரற்கு அரிய செல்வம்
எய்தினான் இவன்‘ என்று ஏத்தி
மந்தரத் தடந்தோள் வீரர்
வலஞ் செய்தார் தானை வைப்பை.
150

கவிக்கூற்று

6642. தேடுவார் தேட நின்ற
சேவடி, தானும் தேடி
நாடுவான், அன்று கண்ட
நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் அஞ்சும்
நீங்கி, மேல் அமரர் ஆவார்;
சூடுவார் எய்தும் தன்மை
சொல்லுவார் யாவர்? கண்டீர்.
151

பெரியோர் வியப்பு

6643. இற்றை நாள் அளவும், பாரில்
இருடிகள், இமையோர், ஞானம்
முற்றினார், அன்பு பூண்டார்,
வேள்விகள் முடித்து நின்றார்,
மற்றும் மாதவரும், எல்லாம்,
‘வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார்! ‘என்று
வியந்தனர், பெரியோர் எல்லாம்.
152

 

Previous          Next