வீடணனுக்கு இராமன் இடமளித்தல்

6644. வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ் வழித்
தந்தனன் விடுத்த பின் இரவி ‘தன்கதிர்
சிந்தின வெய்ய ‘என்று எண்ணித் தீர்ந்தனன்.
1

இராமன் அந்திவந்தனை முடிக்க இரவு வருதல்

6645. சந்தி வந்தனைத் தொழில் முடித்துத் தன் நெடும்
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்பப் பூங்கணை
சிந்தி வந்து இறுத்தனன் மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே.
2

விண்மீன்கள் விளங்குதல்

6646. மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள்
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என;
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்த போல் மீன்களால் பொலிந்தது அண்டமே.
3

மல்லிகை மலர்தல்

6647. சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வெம்மையால்
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்
மல்லிகைக் கானமும் வானம் ஒத்ததே.
4

சந்திரன் எழுதல்

6648. ஒன்றும் உட் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇத்
‘தனிதனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவன் துணைவனை இன்று வெல்குவேன் ‘
என்றது போல வந்து எழுந்தது இந்துவே.
5

நிலவு வீசுதல்

6649. ‘கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் இறை உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு ‘என
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்.
6

கடல் ஒலித்தல்

6650. புடைக்க வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்
உடைக்கருந் தனிநிறம் ஒளித்துக் கொண்டவன்
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால்
கிடைக்க வந்தான் ‘எனக் கிளர்ந்தது ஒத்ததே.
7

நிலவொளி பாய்தல்

6651. மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தால் என அரவத் தொல்கடல்
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால்.
8

தனெ்றலால் இராமன் வருந்தல்

6652. மன்றல் வாய் மல்லிகை எயிறு வண்டு இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின் வாய் முழையின் நின்று உலாய கொட்பது
தனெ்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்.
9

மன்மதன் அம்புகளாலும் நிலவின் கதிர்களாலும் இராமன் வருந்துதல்

6653. கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உருவ ஓங்கிய
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவாள்.
10

இராமன் உடல் முதலியவற்றை நோக்குதல்

6654. உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்கும்; உள்
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக்கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.
11

இராமன் சீதையின் நினைவால் சிந்தை கலங்கல்

6655. பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ?
12

சுக்கிரீவன் இராமனை நோக்கி வீடணனோடு மேல் நிகழ்வதை எண்ணுக எனல்

6656. ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் ‘நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனித்
தூயது நினைக்கிலை ‘என்னச் சொல்லினான்.
13

6657. அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினன்
‘செவ்வழி அறிஞனைக் கொணர்தி சென்று ‘என
‘இவ்வழி வருதி ‘என்று இயம்ப எய்தினான்.
வெவ்வழி விலங்கி நல் நெறியை மேவினான்.
14

6658. மருக் கிளர் தாமரை வாச நாள் மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை
‘இருக்க ஈண்டு எழுந்து ‘என இருந்த காலையில்.
15

6659. ‘ஆர்கலி இலங்கையின் அரணும் அவ் வழி
வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும்
தார்கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர்கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய் ‘என்றான்.
16

வீடணன் இராமனது வினாவிற்கு விடைகூறத் தொடங்குதல்

6660. எழுதலும் ‘இருத்தி ‘என்று இராமன் ஏயினான்
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்
தொழுது உயர் கையினான் தரெியச் சொல்லினான்.
17

இலங்கையின் பிறப்பு

6661. ‘நிலையுடை வடவரை குலைய நேர்ந்து அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும்முடி வாங்கி ஓங்கு நீர்
அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே.
18

இலங்கை சூழ் மதிலின் சிறப்பு

6662. ‘ஏழு நூறு யோசனை அகலம் இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை ஆழிமால் வரை
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால்.
19

மதிற்பொறி முதலியன

6663. ‘மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்
இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிடும்; என்பல சொல்லில்? சுற்றிய
கரும் கடல் அகழ் அது; நீரும் காண்டிரால்.
20

இலங்கையின் வடக்கு வாயில் காப்போர்

6664. ‘வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்
இடை இலர் எண் இரு கோடி என்பரால்;
கடை யுக முடிவினில் காலன் என்பது என்?
விடைவரு பாகனைப் பொருவும் வெம்மையார்.
21

மேற்றிசை வாயில் வீரர்

6665. ‘மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் பொறி குறுகக் காண்பரேல்
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பரால்.
22

தனெ் திசை வாயில் வீரர

6666. ‘தனெ் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறல் யமனையும் அரசு மாற்றுவார்.
23

கிழக்கு வாயில் வீரர்

6667. ‘கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் ‘.
24

விண்ணினும் மண்ணினும் காவல்செய் வீரர்

6668. ‘விண் இடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்றவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார்.
25

மதிலின் புறத்தும் அகத்தும் காப்போர்

6669. ‘பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால்
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்
அறைந்துளது ஐ இரு நூறு கோடியால்.
26

நகர் காவல்

6670. ‘இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் க்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார்.
27

இராவணனால் சிறப்புப் பெற்ற வீரர்கள்

6671. ‘சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்
அறப் பெரும் பகைஞர்கள் அளவு இல் ஆற்றலர்
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்
இறப்பு இலர் எண் இரு நூறு கோடியே! ‘.
28

கோயில் வாயில் காப்போர்

6672. “‘விடம் அல விழி ” எனும் வெகுளிக் கண்ணினர்
“கடன் அல இமைத்தலும் ” என்னும் காவலர்
வடவரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர் எண் எண் கோடியால்.
29

அரண்மனை முன்றிலில் உள்ள வீரர்

6673. ‘அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்
குன்றினும் வலியவர் கோடி கோடியால்.
30

தேர் முதலிய நால்வகைப் படைகளின் அளவு

6674. ‘தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார் வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே.
31

6675. ‘பேயினன் என் பல பிதற்றிப் பேர்த்து? அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப்படை
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய்!
32

இராவணன் துணைவரின் பெருமை கூறத் தொடங்குதல்

6676. ‘இலங்கையின் அரண் இது படையின் எண் இது;
வலங்கையின் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம் இல்
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்.
33

கும்பன் பெருமை

6677. தும்பி ஈட்டமும், இரதமும்,
புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப்படை ஐ இரு
கோடி கொண்டு அமைந்தான்.
செம் பொன் நாட்டு உள சித்தரைச்
சிறையிடை வைத்தான்
கும்பன் என்று உளன், ஊழி வெம்
கதிரினும் கொடியான். ‘
34

அகம்பன் பெருமை

6678. ‘உகம் பல் காலமும் தவம் செய்து
பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு
இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர்
நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன், அலை கடல்
பருகவும் அமைவான். ‘
35

நிகும்பன் பெருமை

6679. ‘பொருப்பை மீதிடும் புரவியும்,
பூட்கையும், தேரும்,
உருப்ப வில் படை ஒன்பது
கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய்
கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று
உளன், ஒரு நெடியோன். ‘
36

மகோதரன் பெருமை

6680. ‘பேயை யாளியை யானையைக்
கழுதையைப் பிணித்த
ஆய தேர்ப் படை ஐ இரு
கோடி கொண்டு அமைந்தான்
தாயை ஆயினும் சலித்திடு
வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன்
என்று ஒரு மறவோன். ‘
37

வேள்விப் பகைஞன் பெருமை

6681. ‘குன்றில் வாழ்பவர் கோடி நால்
ஐந்தினுக்கு இறைவன்
“இன்று உளார் பின்னை நாளை
இலார் “ என எயிற்றால்
தின்றுளான், பண்டு தேவரைப்
பல் முறை செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின்
பகைஞன், ஓர் வெய்யோன். ‘
38

சூரியன் பகைஞன் பெருமை

6682. “‘மண் உளாரையும் வானின்
உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளினில் ‘‘
ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் இரு கோடியன்,
எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான் உளன், சூரியன்
பகை என்று ஓர் கழலான். ‘
39

பெரும்பக்கன் பெருமை

6683. ‘தேவரும், தக்க முனிவரும்,
திசை முகன் முதலா
மூவரும் பக்கம் நோக்கியே
மொழிதர, முனிவான்,
தாவரும் பக்கம் எண் இரு
கோடியின் தலைவன்,
மா பெரும் பக்கன் என்று உளன்,
குன்றினும் வலியான். ‘
40

வச்சிரதந்தன் பெருமை

6684. உச்சிரத்து எரி கதிர் என
உருத்து எரி முகத்தன்,
நச்சிரப்படை நால் இரு
கோடிக்கு நாதன்,
முச்சிரத்து அயில் தலைவற்கும்
வெலற்கு அரும் மொய்ம்பன்,
வச்சிரத்து எயிற்றவன், உளன்,
கூற்றுவன் மாற்றான்.
41

பிசாசன் பெருமை

6685. அசஞ்சலப் படை ஐ இரு
கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப்
பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை
வேரோடும் முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன்
என்று உளன், ஒரு பித்தன்.
42

6686. ‘சில்லி மாப் பெரும் தேரோடும்,
கரி, பரி, சிறந்த
வில்லின் மாப்படை ஏழ் இரு
கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப்படி கலக்குவன்,
கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன் துன்முகன்
என்று அறம் துறந்தோன். ‘
43

விரூபாக்கன் பெருமை

6687. கை நாட்டன்ன எறிகடல்
தீவிடை உறையும்
அலங்கல் வேல் படை ஐ இரு
கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர்
பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன்
வெயில் உக விழிப்பான்.
44

6688. நாமம் நாட்டிய சவம் எலாம்
நாள்தொறும் ஒருவர்
ஈம நாடு இடை இடாமல்தன்
எயிற்று இடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப்
பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன்
தேவரைத் துரந்தான்.
45

போர்மத்தன், வயமத்தன் பெருமை

6689. ‘போரில் மத்தனும், பொருவய
மத்தனும், புலவர்
நீரில் மத்து எனும் பெருமையர்;
நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார்
இலை; அவரால்
பேரும், அத்தனை எத்தனை
உலகமும்; பெரியோய்!
46

பிரகத்தன் பெருமை (6690-6691)

6690. இன்ன தன்மையர் எத்தனை
ஆயிரர் என்கேன்
அன்னவன் பெருந் துணைவராய்,
அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத்துணை
இரட்டியின் தொகையான்
பின்னை எண்ணுவான் பிரகத்தன்
என்று ஒரு பித்தன்.
47

கும்பகன்னன் பெருமை

6691. சேனை காவலன்; இந்திரன்
சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர்
ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு
இரியல் உற்று அலையச்
சோனை மாரியின் சுடு கணை
பலமுறை துரந்தான்.
48

கும்பகன்னன் பெருமை

6692. தம்பி; முற் பகல் சந்திரர்
நால்வரில் தயங்கும்
கும்ப மால் கரிக் கோடு இரு
கைகளால் வாங்கிச்
செம்பொன் மால் வரை மதம்
பட்டதாம் எனத் திரிந்தான்,
கும்ப கன்னன் என்று உளன் பண்டு
தேவரைக் குமைத்தான்.
49

இந்திரசித்தின் பெருமை

6693. ‘கோள் இரண்டையும் கொடுஞ்சிறை
வைத்த அக் குமரன்
மூளும் வெம் சினம் அத்து இந்திர
சித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன்
பிணித்ததன் பின்னைத்,
தாளினும் உள, தோளினும்
உள, இனம் தழும்பு. ‘
50

அதிகாயன் பெருமை

6694. தன்னையும் தறெும் தருமம் என்று
இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர்
முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன்,
அப் பெயர் ஒழித்தான்,
பின் ஓர் இந்திரன் இலாமையின்;
பேர் அதிகாயன்.
51

தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்பார் பெருமை

6695. தேவராந்தகன் நராந்தகன்,
திரிசிரா, என்னும்
மூவர் ஆம் “தகை முதல்வராம்
தலைவரும் முனையில்
போவராம்; தகை அழிவராம் ‘‘
எனத் தனிப் பொருவார்
ஆவராம் தகை இராவணற்கு
அரும் பெறல் புதல்வர்.
52

இராவணன் பெருமை (6696-6700)

6696. இனைய தன்மையர் வலி இதாம்
இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி
அளவு எலாம் அறைவென்;
தனையன், நான் முகன் தகை மகன்
சிறுவற்குத் தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான்
வரத்தொடும் உயர்ந்தான்.
53

வெள்ளிமலையை அள்ளி எடுத்தது

6697. எள் இல் ஐம் பெரும் பூதமும்
யாவையும் உடைய
புள்ளி மான் உரி ஆடையன்
உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை
வேரோடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன்
உலகெலாம் அனுங்க.
54

திசையானை மருப்பு ஒசித்த திறம்

6698. ‘ஆன்ற எண் திசை உலகு எலாம்
சுமக்கின்ற யானை,
ஊன்று கோடு இறத் திரள் புயத்து
அழுத்திய உரவோன்,
தோன்றும் என்னவே துணுக்கம் உற்று
இரிவர், அத்தொகுதி
மூன்று கோடியின் மேல் ஒரு
முப்பத்து மூவர். ‘
55

காலகேயரை வென்றமை

6699. குலங்கேளாடு தம் குல மணி
முடியொடும் குறைய,
அலங்கல் வாள்கொடு காலகேயரைக்
கொன்ற அதன்பின்,
‘இலங்கை வேந்தன் “ என்று த்தலும்,
இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம் தானவர்
தேவியர் கருப்பம். ‘
56

வடதிசையில் குபேரனை வென்றமை

6700. ‘குரண்டம் ஆடு நீர் அளகையின்
ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு
நிதியமும், இழந்து, ‘
புரண்டு மான்திரள் புலி கண்டது
ஆம் எனப், போனான்
இரண்டு மானமும், இலங்கை மா
நகரமும் இழந்து. ‘
57

தனெ்திசையில் அந்தகனை வென்றது

6701. “‘புண்ணும் செய்தது முதுகு “ எனப்
புறம் கொடுத்து ஓடி,
“உண்ணும் செய்கை அத் தசமுகக்
கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது ‘‘ எனக் கொடு,
நாள் தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன்,
தன் பதம் இழந்தான். ‘
58

மேற்றிசையில் வருணனை வென்றமை

6702. ‘இருள் நன்கு ஆசு அற, எழு
கதிரவன் நிற்க; என்றும்
அருணன் கண்களும் கண்டிலா
இலங்கை, மண்டு அமரில்
பருணன் தன் பெரும் பாசமும்
பறிப்பு உண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர்
வெள்ளத்து மறைந்து. ‘
59

இராவணன் தோள் வலிமை

6703. ‘என்று, உலப்புறச் சொல்லுகேன்,
இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத்
தோளினான் கொற்றம் ‘
இன்று உலப்பினும், நாளையே
உலப்பினும், சிலநாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றிப்,
பிறர்க்கு என்றும் தீரான்.
60

அனுமன் இலங்கையில் செய்த வெற்றிச் செயல்கள்

6704. ‘ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால்;
பாடு பட்டவர் பகுகடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி துரந்த
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.
61

கிங்கரரை வதைத்தது

6705. ‘எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவ
கிங்கரப் பெயர் கிரியன தோற்றத்தர் கிளர்ந்தார்
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கிச்
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.
62

சம்புமாலியை வதைத்தது

6706. வெம்பும் மாக் கடல் சேனை கொண்டு
எதிர்பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம்
இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி
நமனைச் சென்று உற்றான்,
சம்பு மாலியும், வில்லினால்
சுருக்குண்டு தலைவ!
63

பஞ்ச சேனாதிபதிகளை வதைத்தது

6707. ‘சேனைக் காவலர் ஒர் ஐவர்
உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும்
மாற்றிய மறவர்,
தானைக் கார்வருங் கடலொடும்,
தமரோடும், தாமும்,
யானைக் கால்பட்ட செல் என,
ஒல்லையின் அவிந்தார்.
64

அனுமன் அரக்கனை அழித்தது

6708. காய்த்த அக்கணத்து அரக்கர்தம்
உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள;
கருங்கடல் நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரிசிலை
மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில,
இலங்கையின் தரெுவில்.
65

அனுமனது வீரப் பெருமை

6709. சொன்ன மாமதில் இலங்கையின்
பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கினை
யாவரே தரெிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர் மற்று?
இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது அக்
குருதியால் அன்று.
66

திரிகூட மலையும் வெந்தமை

6710. ‘விலங்கல் வெந்தவா வேறு இனி
விளம்புவது எவனோ?
அலங்கல் மாலையும் சாந்தமும்
அன்றுதான் அணிந்த
கலன்கேளாடும், அச் சாத்திய
துகிலொடும், கதிர்வாள்
இலங்கை வேந்தனும் ஏழு நாள்
விசும்பிடை இருந்தான்!
67

எரிந்த இலங்கை பண்டுபோல் ஆதல்

6711. ‘நொதுமல் திண்திறல் அரக்கனது
இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும்
பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது;
இராவணன் ஏவப்
பதுமத்து அண்ணலே பண்டுபோல்
அந் நகர் படைத்தான்.
68

வீடணன் வந்ததற்கும் காரணமாவது அனுமன் வீரமே

6712. ‘காந்தும் வாளியின் கரன் முதல்
வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா
கேட்டு அன்று; அவ் விலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச்
செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும் நான் இங்குப்
புகுந்தது புகழோய்! ‘
69

அனுமன் செயல் கேட்டு இராமன் மகிழ்தல்

6713. கேள் கொள் மேலையான் கிளத்திய
பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியைப், பாக்கியம்
பழுத்தன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின்,
நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கித், தன் தூதனைப்
பார்த்து, இவை சொன்னான்.
70

அனுமனை இராமன் பாராட்டுதல் (6714-6716)

6714. ‘கூட்டினார் படை பாகத்தின்
மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய் எரி, ஊர் முற்றும்;
இனி அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளி மொழிச்
சீதையைக் கிடைத்தும்
மீட்டு இலாதது என் வில் தொழில்
காட்டவோ? வீர!
71

6715. ‘நின் செய் தோள் வலி நிரம்பிய
இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில; அவை இனிப்
பீடு ஒன்று பெறுமே?
பொன் செய் தோளினாய்! போர்ப் பெரும்
படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ்
எய்துவான் இருந்தோம்?
72

6716. ‘என்னது ஆக்கிய வலியொடு அவ்
இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம்
உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூவுலகு
ஆக்கிய முதலோன்
பின் அது ஆக்கிய பதம் நினக்கு
ஆக்கினென்; பெற்றாய். ‘
73

தன்புகழ் கேட்ட அனுமன் நாணமும்
வானரப்படையின் வியப்பும்

6717. என்று கூறலும், எழுந்து இரு
நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினால்,
வணங்கினன் உரவோன்;
நின்ற வானரத் தலைவரும்,
அரசும், அந் நெடியோன்;
வென்றி கேட்டலும், வீடு பெற்றார்
என வியந்தார்.
74

 

Previous          Next